Published : 02 Feb 2019 02:57 PM
Last Updated : 02 Feb 2019 02:57 PM

ஆனந்த் டெல்டும்டே கைது: பாஜக அரசின் பாசிச அடக்குமுறை; வைகோ கண்டனம்

சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டிருப்பது, பாஜக அரசின் பாசிச அடக்குமுறை என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பாஜக அரசின் பாசிச அடக்குமுறைக்கு, நாடு அறிந்த ஆய்வாளரும், பொறியியல், நிர்வாகவியல், சமூகவியல் என பல துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்தவரும், கோரக்பூர் ஐஐடி பேராசிரியருமான சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே இலக்காகி உள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி 'எல்கார் பரிஷத்' அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த, தாழ்த்தப்பட்ட மஹர் வீரர்கள் 1818 ஆம் ஆண்டு பேஷ்வாக்களின் ஆட்சியை எதிர்த்துப் போரில் வீரமரணம் அடைந்த 200 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் நாடு முழுவதும் திரண்டு வந்தனர். அங்கே, இந்துத்துவா மதவெறிக் கும்பல் திட்டமிட்டு வன்முறைக் கலவரத்தைத் தூண்டியது. இதன் எதிரொலியாக மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் எழுச்சியுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீமா கோரேகான் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூகச் செயற்பாட்டாளர் கவிஞர் வரவரராவ், மனித உரிமைப் போராளியும் சுதந்திரத்திற்கான மக்கள் அமைப்பின் தேசியச் செயலாளர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மனித உரிமைகளுக்காக வழக்காடி வரும் வழக்கறிஞர் அருண் பெரைரா, ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் சமூகப் போராளி கவுதம் நவ்லகா உள்ளிட்ட ஐந்து பேர் மீதும், எல்கார் பரிஷத் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஐவர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் 'உபா' ஏவப்பட்டது.

சென்ற ஆண்டு ஆகஸ்டு 28 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் மீது, பிரதமர் மோடியைக் கொல்வதற்கு நக்சல்பாரி அமைப்புகளுடன் சேர்ந்து சதி செய்ததாக பொய் வழக்கு புனையப்பட்டது.

ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காகவும், சிறுபான்மை மக்கள் நலனுக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடி, வாழ்நாளையே அர்ப்பணித்துள்ள சமூகச் செயற்பட்டாளர் அறிவுஜீவிகளை அடக்குமுறை மூலம் நசுக்கி ஒடுக்கிவிடலாம் என்று மோடி அரசு திட்டமிட்டு அவர்களை மகாராஷ்டிரா மாநில அரசு மூலம் கைது செய்து சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தி வருகின்றது.

பீமா கோரேகான் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே மீதும் 'உபா' சட்டத்தை ஏவி மகாராஷ்டிரா மாநில அரசு மூலம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

தனக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டுக்கும் அடிப்படையே இல்லை என்று நிறுவி, முதல் தகவல் அறிக்கையையே ரத்து செய்யக் கோரி பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து, உச்ச நீதிமன்றமும் அதையே உறுதி செய்துவிட்டது.

அம்பேத்கர் காட்டிய பாதையில் தலித் மக்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே சமூக ஆய்வாளர் மட்டும் அல்ல, தலைசிறந்த எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் ஆவார்.

மக்கள் நலன் சார்ந்து செயல்படும் அறிவுஜீவிகளை ஒடுக்குவதும், பாஜகவின் இந்து மதவெறி அரசியல், பொருளாதார நிலைப்பாடுகளை எதிர்ப்போர் அனைவரையும் தேசத்துரோகிகள் என முத்திரை குத்துவதும், கருப்புச் சட்டங்களை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதும், பாஜக அரசின் பாசிச போக்கு எல்லை கடந்து போய்க்கொண்டு இருப்பதையே உணர்த்துகின்றது.

அரசியல் சட்டத்தின்படி மக்கள் ஆட்சி நடைபெறுகின்ற நாட்டில் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது.

மோடி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மக்களின் கோபாவேசக் கனலை எந்த சக்தியாலும் அணைத்துவிட முடியாது.

குரல் அற்றவர்களின் குரலாய் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொண்டு ஆற்றி வரும் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x