சமூக வலைதளங்களில் பதிவிட திமுகவினர் பணம் பெறுகிறார்களா? - திமுக எம்எல்ஏ பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சமூக வலைதளங்களில் பதிவிட திமுகவினர் பணம் பெறுகிறார்களா? - திமுக எம்எல்ஏ பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
Updated on
2 min read

ஓட்டுக்கே நோட்டு கொடுக்காத நான் ட்வீட்டுக்கு நோட்டு கொடுப்பதாக சொல்வது வேடிக்கை என, திமுக எம்எல்ஏவும் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மாநில சுயாட்சி, சமூக நீதி, அனைத்துத் தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு போன்ற பல்வேறு குறிக்கோள்களுடன் அயராது பாடுபட்டு வரும் திமுகவின் தொண்டர்கள் 'போராட்டம் என்றாலும் - பொது விவாதம் என்றாலும்' யாராலும் வீழ்த்த முடியாத பலமும், அறிவுக்கூர்மையும் கொண்டவர்கள்.

அப்படிப்பட்ட திமுகவினர் சமூக வலைதளங்களில் பணம் பெற்றுக்கொண்டு பதிவிடுகிறார்கள் என அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை, மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலர் தொடர்ந்து முன்வைக்கின்றனர். இதற்காக சில வீடியோ மற்றும் புகைப்படங்களைத் தயாரித்து, சமூக வலைதளங்களில் பரப்புவதை முழுநேர வேலையாகவே செய்து, பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்த முயற்சி செய்கின்றனர்.

இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புவது, கடந்த 12.06.2017 அன்று திமுக தலைவரின் வழிகாட்டுதலுடன், தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கப்பட்டு, மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருந்த சூழலில், திமுகவுக்குச் சாதகமாக சமூக வலைதளங்களில் பதிவிடப் பணம் வழங்கப்படுகிறது என்று, போலி மின்னஞ்சல் உருவாக்கி, 10.04.2016 அன்று நாளிதழ் செய்தியாகவும், சமூக வலைதளப் பதிவுகளாகவும் பரப்பப்பட்டன.

இப்படிப்பட்ட போலியான மின்னஞ்சல்கள், முகநூல் பதிவுகள், ட்விட்டர் பதிவுகள் ஆகியற்றைத் தயாரிப்பது நவீன தகவல் தொழில்நுட்ப உலகில் எளிதில் சாத்தியம் என்பதை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே, உள்நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்பட்ட பொய்யான பிரச்சாரம் அது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், தகவல்களைத் திரட்டுதல் - பகுப்பாய்தல் உள்பட பல்வேறு பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, திமுகவின் மீது பற்றுகொண்ட தோழர்களும், தொண்டர்களும் சமூக வலைதளங்களில் திமுகவின் கொள்கை முழக்கங்களையும், நீதிக்கட்சி ஆட்சியும், தொடர்ந்து திமுக அரசும் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளையும், தியாக வரலாறுகளையும், தலைவரின் அயராத உழைப்பு மற்றும் செயல்பாடுகளையும் தினசரி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எனவே, திமுக தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் என்ற முறையில், சமூக வலைதளச் செயல்பாடுகளில் திமுகவினர் பணம் பெற்றுப் பதிவிடுவதாக சொல்லப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளில் எள்முனையளவும் உண்மையில்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, அரசியலிலும் - பொதுவாழ்விலும் நேர்மையையும், தூய்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்ற மரபில் வந்த நான், 2016-ம் ஆண்டு முதன்முறையாக மதுரை மத்திய தொகுதிக்கான சட்டப்பேரவை உறுப்பினராகப் போட்டியிட்டபோது, தொகுதி வாக்காளர்களுக்கு பணமோ, பொருட்களோ கொடுக்காமல் சீரியமுறையில் வெற்றி பெற்றவன்.

குறிப்பாக, நூறாண்டு கால அரசியல் களத்தில் 4 தலைமுறைகளாக திமுகவுக்காகவும், பொதுநோக்கோடு மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் குடும்பச் சொத்துகளை செலவிட்டு, அரசியல் தூய்மையைக் கடைப்பிடித்து வரும் பாரம்பரியத்தைச் சேர்ந்த என் மீது சிறு கறை சுமத்த முயல்வது வீண் செயல்.

எனவே, ஓட்டுக்கே நோட்டு கொடுக்காத நான் ட்வீட்டுக்கா நோட்டு கொடுக்கப் போகிறேன் என்பதைக் கேள்வியாக அல்ல, அவதூறு பரப்புவோருக்கு பதிலாகவே கூறுகிறேன். சமூக வலைதளங்களில் திமுக தோழர்களின் செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்றோடும் சிலர், திமுகவினர் மீது களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்யாக உருவாக்கும் இப்படிப்பட்ட அவதூறான செய்திகளையும், சமூக வலைதளப் பதிவுகளையும் தமிழக மக்கள் என்றுமே நம்ப மாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அதுமட்டுமின்றி, திராவிட இயக்கம் என்பது அரசியலுக்கானது மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்துக்கான மாபெரும் மக்கள் பேரியக்கம். தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக, உலகம் முழுவதும் நமது விரல் நுனியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள சூழலில், தமிழகத்தில் மட்டுமின்றி, பூமிப்பந்தின் பல்வேறு நாடுகளிலும் திராவிட இயக்கத்தின் தாக்கம் உருவாகி, திமுகவுக்கான ஆதரவு எல்லா நாடுகளில் இருந்தும் கிடைத்து வருவதை கீழே உள்ள வரைபடத்தின் வாயிலாக அனைவரும் அறிய முடியும்.

திமுகவின் சமூக முன்னெடுப்புகள் அனைத்துக்கும் உலகம் முழுவதும் ஆதரவுக்குரல் எழுவதை, சமூக நீதிக்கு எதிரான சிலர் களங்கம் கற்பிப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அனைவரும் திட்டவட்டமாகப் புரிந்து கொள்ள வேண்டும்" என, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in