

பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப் படை அபினந்தனின் தந்தை சிம்மக்குட்டி வர்த்தமான் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்துக்கு ரோல் மாடலாக இருந்துள்லார்.
காற்று வெளியிடை ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய மணிரத்னம், "ஏர் மார்ஷல் சிம்மக்குட்டி வர்த்தமான் எங்களுக்கு மிகவும் வலிமையான வழிகாட்டியாக இருந்தார். இந்திய விமானப்படை பற்றி பல முக்கியமான தகவல்களை அவர் எங்களுக்குத் தந்தார். எங்களுக்கு அவர் சிறந்த ஊக்கமாக இருந்தார்" என்று அபினந்தனின் தந்தையைப் பாராட்டினார்.
ஆனால், நிழல் நிஜமானதுபோல் காற்று வெளியிடைப் படத்தில் வருவதைப் போலவே அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக கடந்த 27-ம் தேதி இந்திய விமானப் படை பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை தகர்த்தது.
இந்நிலையில்தான் நேற்று (புதன்கிழமை) காலையில் பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் வீழ்த்தப்பட்டது. இந்த மோதலில் இந்திய விமானம் ஒன்று பாக் எல்லைக்குள் தவறி விழுந்தது. அதிலிருந்த விங் கமாண்டர் அபினந்தன் தற்போது பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ளார். அவரை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பாகிச்தான் ராணுவ அதிகாரிகள் கண்ணியமாக நடந்துகொள்வதாக அபினந்தன் பேசும் வீடியோ அவரது குடும்பத்தாருக்கு சற்றே ஆறுதல் அளித்துள்ளது.
இந்நிலையில் ஏர் மார்ஷல் வர்த்தமானை தொடர்பு கொள்ள தி இந்து (ஆங்கிலம்) முயற்சி செய்தது. ஆனால், அவர் யாருடனும் பேச விரும்பவில்லை என்றும் ஊடகங்கள் தனது உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.
வர்த்தமானின் நண்பர் ராஜூ ஸ்ரீநிவாசன் பேசும்போது, வர்த்தமானின் திறமைகளை வெகுவாகப் பாராட்டினார். பரம் விஷிஷ்ட் சேவா பதக்கத்தை வென்றவர். இது தவிர ஆதி விசிஷ்ட் சேவா விருது, விஷிஷ்ட் சேவா போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
அபினந்தனின் வீட்டுக்கு திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, அதிமுக எம்.பி.கே.என்.ராமச்சந்திரன் ஆகியோர் சென்றுள்ளனர். ஆனால், அவரது குடும்பத்தார் யாரையும் சந்திக்க விரும்பாததால் திரும்பியுள்ளனர்.