பிப்ரவரி 8-ம் தேதி தமிழக பட்ஜெட்: துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்
வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழித்தினார். அதன்பின், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் இயற்றப்பட்டது. பின்னர், ஆளுநர் உரை மீது விவாதம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், பிப்ரவரி 2 ஆவது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும், நிதித்துறையை கவனிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 8 -ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தலைமைச் செயலக செயலாளர் சீனிவாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 8.2.2019 ஆம் நாள், வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.
மேலும், அன்று காலை 10.00 மணிக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
