Published : 22 Feb 2019 12:28 PM
Last Updated : 22 Feb 2019 12:28 PM

மதுரையில் பிப்ரவரி மாதமே சுட்டெரிக்கும் வெயில்: பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கும் மக்கள்

மதுரையில் கோடையை மிஞ்சும் வகையில் தற்போது வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் மார்ச் முதல் மே வரை கோடை காலம் ஆகும். ஆனால் மதுரையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வழக்கத்துக்கு மாறாக வெயில் சுட்டெரிக்கிறது. அனல் காற்றும் வீசுகிறது.

வாகனங்களில் செல்லும் பெண்கள் வெயிலில் இருந்து தப்பிக்க முகத்தையும், கைக ளையும் துப்பட்டா, கையுறையால் மூடிக் கொண்டு செல்கின்றனர். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் கோடை வெயிலில் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டப் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையோரங்களில் தர்பூசணி, மோர், ஜூஸ், ஜிகர் தண்டா விற்பனை களைகட்ட ஆரம்பித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலைவிட அதிகமாகக் கொளுத்தும் இந்த வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கி விடுகின்றனர்.

மதுரையில் கடந்த காலத்தில் சாலையின் இருபுறமும் மரங்கள் அடர்த்தியாகக் காணப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கம், கட்டிடங்கள் அதிகரிப்பு, நீர்நிலை ஆதாரங்கள் பராமரிப்பு இல் லாமை, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை ஆகியவற்றால் மதுரையில் வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம் என்று அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டை விட அதிகம்

காமராசர் பல்கலைக்கழக ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறைத் தலைவர் முத்துச்செழியன் கூறியதாவது:

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சராசரி வெப்பநிலை 32 டிகிரியாக இருந்தது. அதிகபட்சமாக 34 டிகிரியை எட்டியது.

ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவதற்கு முன் சராசரி வெப்பநிலை 35 டிகிரியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2 டிகிரி கூடுதலாக உள்ளது. அதிகபட்சமாக தற்போது 37 டிகிரி வரை வெப்பம் உள்ளது. இந்த வெப்பநிலை மார்ச் மாதம் 40 டிகிரியை எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

புறஊதாக் கதிர்கள் தாக்கம்

இதற்குக் காரணம், கடந்த காலங்களைவிட இந்த ஆண்டு சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய புறஊதாக் கதிர்கள் தாக்கம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இரவு நேர வெப்பம் குறைவாக இருப்பதால் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

முன்பு தாமதமாகப் பொழுது விடியும். விரைவாக இருட்டத் தொடங்கிவிடும். தற்போது அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் பொழுது விடிந்துவிடுகிறது.

அதேபோல் மாலை 6.30 மணிக்கு மேல்தான் இருட்டத் தொடங்குகிறது. அதனால், சூரிய வெளிச்சம் 8 மணி நேரம் என்பதற்குப் பதிலாக 12 மணி நேரம் வரை இருப்பதால் இயல்பாகவே பூமியின் வெப்பம் அதிகரித்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x