

சென்னையில் 22 கேரட் கொண்ட ஒரு பவுன் ஆபரணத் தங்கம் கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.288 குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.17 குறைந்து ரூ. 2,553 க்கும், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.136 குறைந்து ரூ. 20,424 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல கடந்த வியாழக்கிழமை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.19 குறைந்தும், ஒரு பவுன் ரூ.152 குறைந்து இருந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.2,570க்கும், ஒரு பவுன் ரூ.20,560க்கும் விற்பனை செய்யப் பட்டது. புதன்கிழமை ரூ. 20,712க்கு விற்கப்பட்ட ஒரு பவுன் 2 நாளில் ரூ.288 குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் குறைந்து காணப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி 60 பைசா குறைந்து ரூ. 43.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.540 குறைந்து ரூ. 40,765 க்கும் விற்பனையாகிறது.
தொடர்ந்து தங்கம் சரிவு நிலையில் இருப்பது குறித்து மெட்ராஸ் தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியபோது, '' சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்துவந்த சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது பங்கு சந்தையில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கின்றனர். இதனால் தங்கத்தின் மீதான மதிப்பு சர்வதேச அளவில் குறைந்துள்ளது. இதனால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது'' என்றார்.