

முடங்கிய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, தமிழாய்வுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கிக் கிடப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
செம்மொழி நிறுவனத்திற்கான ஆண்டு நிதி ஒதுக்கீடும் 92% அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. செம்மொழி தமிழ் குறித்து ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக சென்னையில் 2008 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி தொடங்கப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, அது தொடங்கப்பட்ட நாளில் இருந்தே முடக்குவதற்கான சதிகள் நடைபெற்று வருகின்றன.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டு வரும் மே மாதத்துடன் 11 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. ஆனால், இப்போது வரை இந்த நிறுவனம் சொல்லிக்கொள்ளும்படி எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளவில்லை.
தமிழகத்தின் முதல்வர் தான் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதவி வழித் தலைவர் ஆவார். இது கவுரவப் பதவி என்பதால் தலைவராக இருப்பவர்கள் செம்மொழி நிறுவன வளர்ச்சிக்கு பங்களிக்க முடியாது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் தான் அனைத்து அதிகாரமும் கொண்டவர் என்பதால், அவரால் தான் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.
ஆனால், இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அதற்கு முழுநேர இயக்குநர் நியமிக்கப்படவில்லை. மாறாக, இது மத்திய நிறுவனம் என்பதைக் காரணம் காட்டி, சென்னையிலுள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் இருந்து ஒருவரை பொறுப்பு இயக்குநராக நியமிப்பது வழக்கமாக உள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், சென்னை ஐஐடியில் பணியாற்றும் பேராசிரியர்களில் ஒருவரைத் தான் பொறுப்பு இயக்குநராக நியமித்து வந்துள்ளனர். அவ்வாறு நியமிக்கப்படுபவர்களில் பலருக்குத் தமிழே தெரியாது. அப்படிப்பட்டவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிப்பார்கள்? செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படக்கூடாது என்பதில் மத்திய அரசு எந்த அளவுக்கு தீவிரம் காட்டுகிறது என்பதை இதிலிருந்தே உணர முடியும்.
2014 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் இயக்குநராக பாலசுப்பிரமணியம் என்பவரை நியமிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீர்மானித்தது. ஆனால், ஆட்சி மாற்றத்தால் அது நடக்கவில்லை. இப்போது திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பதிவாளரான பழனிவேல் என்பவர் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு பொறுப்பு இயக்குநர்களாக இருந்தவர்களுக்கு தமிழ் தெரியாது; இவருக்கு தமிழ் தெரியும் என்பது மட்டும் ஒரே வித்தியாசம் ஆகும். மற்றபடி, இவரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்கவில்லை.
செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக க.ராமசாமி இருந்த போது தமிழாய்வுப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அதன்பின்னர் அந்த நிறுவனம் முற்றிலுமாக முடங்கிவிட்டது. அதுமட்டுமின்றி, இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 120-க்கும் மேற்பட்ட பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டனர். இந்த நிறுவனத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு 41 நிரந்தர பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
ஆனால், இன்று வரை அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதனால் தான் ஒரு காலத்தில் இந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்த ஆண்டு நிதி ரூ.25 கோடியில் இருந்து வெறும் ரூ.2 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது. ஆராய்ச்சிகளும் நடைபெறவே இல்லை.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்ட போது, பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு, பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்த்தல், வரலாற்று அடிப்படையில் தமிழ் இலக்கணம், தமிழின் தொன்மை - ஒரு பன்முக ஆய்வு, தமிழ் வழக்காறுகள் ஆய்வுத் திட்டம் உள்ளிட்ட 10 பணிகளை மேற்கொள்ளும் நோக்குடன் பத்து முதன்மைத் திட்டப்பணிகள் வரையறுக்கப்பட்டன. ஆனால், பத்தாண்டுகளுக்கு மேலாகியும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதுமட்டுமின்றி, ஏற்கெனவே 12 துறைகளாக இயங்கிவந்த செம்மொழி நிறுவனத்தை அழித்து, வெறும் 7 தற்காலிகத் திட்டங்களாக சுருக்கிவிட்டனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக வெளியிடப்பட்டுவந்த செய்தி இதழும் நிறுத்தப்பட்டு விட்டது.
இந்தியாவில் தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழிக்கும் தனியாக மத்திய ஆய்வு நிறுவனம் அமைக்கப்படவில்லை. தமிழ் மொழிக்கு மட்டும் தனியாக ஆய்வு நிறுவனம் நடத்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது மொழிவெறி அதிகார வர்க்கங்கள் இந்த நிறுவனத்தை மூடவும், திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கவும் முயற்சிகள் செய்தன.
ஆனால், அவை எதுவும் வெற்றி பெறாத நிலையில் தான், நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல் இருப்பது, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மூலம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் செயல்படாத நிறுவனமாக மாற்றி, அதன் அடையாளத்தை அழிக்க மத்திய அரசில் உள்ள அதிகார வர்க்கங்கள் துடிக்கின்றன. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு இந்தச் சதியை தடுத்து நிறுத்த வேண்டும்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு உடனடியாக நிலையான இயக்குநரை நியமிக்க வேண்டும்; நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, தமிழாய்வுப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை தமிழக அரசும் தீவிரமாக வலியுறுத்த வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.