

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கான 48 நாள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் இன்று காலை தொடங்கியது.
தமிழகத்தில் கோயில் யானைகளுக்கான முகாம் அண்மையில் தேக்கம்பட்டியில் நிறைவடைந்தது. தேக்கம்பட்டியில் முகாம் நடைபெற்றபோது தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெறவில்லை.
அப்போது, ஒத்தி வைக்கப்பட்ட இம்முகாம் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது.
முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் தெப்பக்காடு மற்றும் பாம்பேக்ஸ் ஆகிய இரு இடங்களில் இம்முகாம் நடக்கிறது. இம்முகாமை தமிழக வனத் துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஹெச்.மல்லேஸ்சப்பா தொடங்கி வைத்தார்.
48 நாட்கள் நடைபெறும் இம்முகாமின் போது தெப்பக்காடு முகாம் யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கப்படுவதோடு, சிறப்பு உணவுகள் வழங்கப்படும். சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரியும் ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதே போல பொள்ளாச்சி டாப்சிலிபில் உள்ள யானைகள் முகாம் மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானையைகளுக்கும் ஓய்வு அளிக்கப்படும்.