

கிரிக்கெட் விளையாடும்போது மார்பில் பந்து தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாதுகாப்பு கவசங்கள் அணிந்து விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் விளையாட்டு வீரர் பிரைட் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஆதனூரில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. தற்போது தண்ணீர் இன்றி காய்ந்துள்ளது. இதனால் சுற்றுப் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட், கபடி உள்ளிட்ட பல் வேறு விளையாட்டுகளை இங்கு விளையாடி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரியை அடுத்த ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள கீழக் கழனி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன். கூலித் தொழிலாளியான இவரது 3-வது மகன் சீனிவாசன் (எ) ராமச் சந்திரன் (21). சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கிரிக்கெட் விளையாட்டில் ஓபன் பேட்ஸ்மேனான இவர் கல்லூரியில் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, பல்வேறு கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு அதிக ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி ஆதனூர் ஏரியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் நிஜ காரட் பந்தை வைத்து விளையாடியுள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கிரிக்கெட் பந்து சீனிவாசன் இடது பக்க மார்பில் பட்டது. இதில் நிலை குலைந்த சீனிவாசன் மயங்கி கீழே விழுந்தார். இதனால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே சீனிவாசனை மீட்டு பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சீனிவாசனை பரிசோதனை செய்துவிட்டு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறந்த கிரிக்கெட் வீரர்
இதுகுறித்து ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துளசி கூறியதாவது:
சீனிவாசன் சிறந்த கிரிக்கெட் வீரர். சம்பவத்தன்று காலையில் எங்கள் கிராமத்தில் விளையாடி விட்டு, மதியம் தனது அண்ணன் பர்குணத்தின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றார். ஆதனூர் மற்றும் திருத்த வெளி ஊர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
திருத்தவெளி சார்பில் சீனிவாசன் பேட்டிங் செய்தார். எதிர் அணியினர் பவுலிங் போடும்போது பந்து மார்பில் பட்டு விழுந்தார். மிக சிறந்த கிரிக்கெட் வீரரான இவரை பல கிராமங்களில் இருந்த தங்கள் அணியில் விளையாடும்படி அழைத்துச் செல்வார்கள்.
கல்லூரி சார்பில் டெல்லியில் நடைபெற்ற போட்டி யில் அதிக ரன்களைச் சேர்த்த சீனிவாசன் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அவரது மரணம் எங்கள் கிராமத்துக்கு பேரிழப்பு” என்றார்.
கவசங்கள் அவசியம்
கிரிக்கெட் விளையாட்டு வீரர் பிரைட் கூறும்போது, “கிரிக்கெட் காரட் பந்தை வைத்து விளையாடும் போது கட்டாயம் ஹெல்மெட், பேட் போன்ற பாதுகாப்பு கவசங் கள் அணிந்துதான் விளையாட வேண்டும். சீனிவாசனும் நெஞ்சில் வைக்கக்கூடிய பேடை வைத்திருந் தால் இன்று அவர் நம்முடன் இருந்திருப்பார்” என்றார்.