

திமுக- காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதியுடன் சேர்த்து 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் தலைமையின் கீழ் கூட்டணி அமைகிறது. அதில் பலமான கூட்டணியை அமைக்க இரண்டு கட்சிகளும் முயற்சி எடுத்து வருகின்றன.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது. அதன் பின்னர் திமுக காங்கிரஸ் உறவு பலமாக இருந்து வருகிறது. ஆளுங்கட்சியை எதிர்த்த போராட்டத்தில் இரு கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
அகில தேசியத் தலைமையும் திமுகவுடன் ஒற்றுமையாகவும் உள்ளன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும் முன்னரே ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அறிவித்து காங்கிரஸ் கட்சியுடனான தனது நெருக்கத்தைக் காட்டினார் ஸ்டாலின்.
ஆனால், மறுபுறம் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உள்ளதாக வட இந்திய ஊடகங்களும் கருத்துக் கணிப்பு வெளியிட்ட நிலையில் திமுக 30 தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவெடுத்ததாக தகவல் வெளியானது. நாங்கள் கைகாட்டுபவர்கள்தான் அடுத்த பிரதமர் என ஸ்டாலின் பேசி வருகிறார்.
அதிக தொகுதிகள் வெல்வதன் மூலம் கூட்டணியில் அதிக மத்திய அமைச்சர்களைப் பெற முடியும் என திமுக நினைக்கிறது. இதனால் கூடுதல் தொகுதிகளில் நிற்கு முடிவெடுத்தது திமுக. இதனால் காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்கிற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து டெல்லி தலைமை தலையிட்டு பேசியதன் அடிப்படையில் திமுக கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒற்றை இலக்கத்தை காங்கிரஸ் பெற விரும்பவில்லை. ஆகவே இரட்டை இலக்கமாக வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைக்க தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து இன்று தமிழகம் வரும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோர் அறிவாலயத்தில் இன்று மாலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அறிவிக்க உள்ளனர்.