

சின்னதம்பி யானையின் தற்போதைய நிலை என்ன? சாதுவாக மாறிவிட்ட அதை வனத்தில் விடுவதா? முகாமுக்கு அனுப்புவதா? என்பது குறித்து யானைகள் நிபுணர் நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
வனத்திலிருந்து ஊருக்குள் புகுந்து மக்கள் அன்பைப் பெற்ற காட்டு யானை சின்னதம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா நீதிபதிகள், மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீட்டார்.
யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கற்சூளைகளை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த 2 வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்ரமணிய பிரசாத் மணிக்குமார் அமர்வில் நடந்து வருகிறது.
வழக்கில் அரசுத்தரப்பில், சின்னதம்பி யானையைப் பிடித்து கும்கியாக மாற்றும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. கும்கியாக மாற்றுவது குறித்து தற்போதைய நிலையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது எனவும் அஜய் தேசாய் சுட்டிக்காட்டியுள்ளதையும் குறிப்பிட்டனர்.
நேற்று இந்த வழக்கில் நீதிமன்ற நேரம் முடிவடையும் நேரத்தில் நீதிபதிகள் அமர்வு, செய்திகளைப் பார்க்கும்போது சின்னதம்பி கடந்த சில நாட்களாக காட்டு யானை போல் செயல்படவில்லையா என அரசுத் தரப்பிடம் விளக்கம் கேட்டனர்.
அப்போது கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவாத்சவா ஆஜராகி, காட்டுக்கு அனுப்ப முயற்சித்தும், அது மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது என்றும், சின்னதம்பியைப் பிடித்து முகாமில் அடைப்பதுதான் ஒரே வழி என்றும் தெரிவித்தார்.
மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமானது என யானைகள் நிபுணர் அஜய் தேசாஜி அறிக்கை அளித்துள்ளதாகக் கூறி, அதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின்படி யானையைப் பிடித்து முகாமில் பாதுகாத்துப் பராமரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சின்னதம்பியை காட்டிற்கு அனுப்பவும், செங்கற்சூளைகளை அகற்றவும் கோரி அருண் பிரசன்னா, முரளிதரன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் இன்று மதியம் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது.
ஆனால், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, யானையை முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க இருப்பதால் வழக்கை நாளை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், சின்னதம்பிக்கு இயற்கை உணவுகளைக் கொடுத்து, நன்றாக பழக்கியபின் ஏன் மீண்டும் காட்டிற்குள் அனுப்பக் கூடாது? என கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக, யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நேரிடையாக நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளை வருகிறது.