60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 உதவித்தொகை: அரசின் முடிவை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 உதவித்தொகை: அரசின் முடிவை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசின் சிறப்பு நிதியுதவி திட்டம் தொடர்பாக கடந்த பிப். 11-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதில் தமிழகம் முழுவதும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் ஆஜராகி முறையீடு செய்தார்.

அவரது முறையீட்டில் தமிழக அரசு புள்ளிவிவர அடிப்படையிலேயே, மொத்த மக்கள் தொகையில் 11.9 சதவீதம் பேர் தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாகவும், அதனடிப்படையில் 18 லட்சம் பேர் மட்டுமே பலனடைய தகுதியுடையவர்கள்.

தேவையற்றவர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவதால், பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது, உண்மையாக வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டுமே சிறப்பு நிதி வழங்க வேண்டும்.

ஆனால் அரசு கூடுதலாக 38 லட்சம் பேர் பலனடையும் வகையில் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது, அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

செந்தில் ஆறுமுகத்தின் முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் பின்னர் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜரானார். அவரது வாதத்தில்  “60 லட்சம் பேர் என்பது இந்த ஆண்டில் மட்டும் எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல என்றும்,  2006 முதல் ஏழை குடுமங்கள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு அட்டை வழங்கி, பதிவேடு பராமரித்தும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருவாய் கொண்டவர்களை ஏழைகள் என முடிவு செய்யப்பட்டு, 2006-ம் ஆண்டிலிருந்து பல கட்டங்களில் நடத்திய கணக்கெடுப்பில் கிராமப்புற  பகுதிகளில் 32 லட்சத்து 13 ஆயிரம் குடும்பங்களும், நகர்புற பகுதிகளில் 23 லட்சத்து 54 ஆயிரம் குடும்பங்களும் என 55 லட்சத்து 68 ஆயிரம் ஏழை குடும்பங்கள்  கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் 17 வகையான தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து பெறப்பட்ட குடும்பங்களின் விவரங்களையும் சேர்த்தே 60 லட்சம் குடும்பங்கள் என எட்டப்பட்டுள்ளது. சிறப்பு நிதி பயனாளிகளுக்கான ஆதார் அட்டை இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை சேகரிக்க 55 ஆயிரம் பேர் கடந்த இரண்டு நாட்களாக கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலிகள் பயனடைவதை தடுக்க மின்னணு முறையில் பணம் வங்கிகளில் செலுத்தப்படுகிறது.” என தெரிவித்தார்.

அரசு அளித்த புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு,  தங்கள் உத்தரவில் “2011-12-ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தற்போது மாறியிருக்கும், ஆனால் 2018-19-ம் ஆண்டு புள்ளி விவரங்களை குறிப்பிட்டு மனுதாரர் வழக்கு தொடரவில்லை.  வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எத்தனை பேர் என மனுதாரர் குறிப்பிடவில்லை.

பணமாக கொடுப்பதற்கு பதிலாக மாவட்டம் தோறும் பள்ளி, கல்லூரிகள் கட்டவும், மருத்துவமனை கட்டவும் சொல்லலாம் என்றாலும், ஆனால் அதை நிறைவேற்ற வேண்டுமா என்பது அரசின் கொள்கை முடிவு.” என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in