

டிக்டாக் செயலியைக் கண்காணிக்க இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக ஒரு அதிகாரியை நியமிக்கவுள்ளதாக டிக் டாக் நிறுவனம் கூறியிருக்கிறது.
பொழுதுபோக்கு அப்ளிகேஷனான டிக் டாக் சீன தேசத்தின் தயாரிப்பு. இந்த ஆப் தொடர்பாக அண்மைக்காலமாகவே பல்வேறு புகார்கள் எழுந்துவரும் சூழலில், டிக் டாக் செயலியைக் கண்காணிக்க இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக ஒரு அதிகாரியை நியமிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிக் டாக் அப்ளிகேஷனானது தனது வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்துவதிலும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் முதன்மைக் கவனம் செலுத்தி வருகிறது. எங்களது அப்ளிகேஷன் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
டிக் டாக்கில் வெளியாகும் வீடியோக்கள் தவறானவையாக இருந்தால் அவற்றை பயன்பாட்டாளர்களோ அல்லது சட்ட அமலாக்கத் துறைகளோ எங்களுக்குத் தெரியப்படுத்த எளிய நடைமுறைகளை இணைத்துள்ளோம். அதன்படி எங்களது விதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளூர் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக உள்ளூர் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவோம். இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக ஒரு அதிகாரியை நியமிக்கவுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர் தமீமுன் அன்சாரியின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மணிகண்டன், ''சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பெண்கள், இளம் பருவத்தினரை அதிகம் பாதிக்கும் டிக் டாக் செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்தார். இதுதொடர்பாக மத்திய அரசின் உதவியை நாடுவோம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், டிக் டாக் செயலியைக் கண்காணிக்க இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக ஒரு அதிகாரியை நியமிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.