Published : 01 Feb 2019 20:25 pm

Updated : 01 Feb 2019 20:25 pm

 

Published : 01 Feb 2019 08:25 PM
Last Updated : 01 Feb 2019 08:25 PM

மக்களை ஏமாற்றும் மாய்மாலமே இடைக்கால பட்ஜெட்: மார்க்சிஸ்ட் விமர்சனம்

நான்கரை ஆண்டு காலம் நாசகர பொருளாதாரக் கொள்கைகளால் மக்களது வாழ்வை சீரழித்த நரேந்திர மோடி அரசு நாட்டு மக்களை ஏமாற்றிட மேற்கொள்ளப்பட்ட காகிதப்பூக்களே நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அறிவிப்புகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை:


“கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, விளைபொருளுக்கு நியாய விலை வழங்குவது, விவசாயக் கடன் தள்ளுபடி, கறுப்புப் பணத்தை பறிமுதல் செய்து அனைவரது வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

பண மதிப்புநீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றால் விவசாயம், தொழில், வணிகம் அனைத்தும் நொறுக்கப்பட்டு விட்டது. இவற்றால் வேதனையடைந்த மக்களைக் கவருவதற்கு சில கவர்ச்சியான திட்டங்களை அறிவித்துள்ளது.

பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ள பல திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாததால் இவை வெறும் அறிவிப்புகளாகவே நீடிக்கும்.

விவசாயத்துறையில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது என்ற கூற்று எவ்வளவு போலியானது என்பது, தொடரும் விவசாயிகள் தற்கொலை மூலமாக புரிந்துகொள்ள முடியும். ஏற்கெனவே அறிவித்த பலதிட்டங்கள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், ஆண்டுக்கு 6000 ரூபாய் என்ற அறிவிப்பும் கண்துடைப்பாகவே அமையும். இதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.

சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் என்ற காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 3000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது 50 கோடி மக்களுக்கான திட்டமாகும். எனவே, தலைக்கு ரூ. 60/-ஐ ஒதுக்கி விட்டு அவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மருத்துவக் காப்பீட்டு வசதிகள் கிடைக்கும் என்பது நடைமுறையில் அமல்படுத்த முடியாத வெற்று அறிவிப்பாகவே அது அமையும்.

அகில இந்திய மருத்துவக் கழகத்தின் சிறப்பு மருத்துவமனைகள் 22 இருப்பதாக கூறப்பட்டாலும், அவற்றில் புதிதாகத் தொடங்கப்பட்ட14 மருத்துவமனைகளுக்கு முழுமையான நிதி ஒதுக்கீடு இல்லை. தேவையான மருத்துவ அடிப்படைக் கட்டமைப்பு செய்யப்படுவதற்கு பல காலம் பிடிக்கும் என்ற விஷயம் மறைக்கப்படுகிறது.

வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டுமென்பது மத்திய தர மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இவ்வளவு காலம் இதை நிறைவேற்றாமல் மோடி அரசு நிகர வருமானம் ரூ. 5 லட்சம் வரை வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக செய்துள்ள அறிவிப்பும் எதிர்பார்த்திருந்த பெரும்பகுதியினருக்கு பலனளிக்காத முறையில் செய்யப்பட்டுள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் கறுப்புப் பணம் பெருமளவு கைப்பற்றப்படவில்லை என ரிசர்வ் வங்கி அறிக்கை குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது 1.30 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டதாக அறிவித்திருப்பது நம்பத்தகுந்ததாக இல்லை.

தேசிய மாதிரி ஆய்வுக்குழு 2017-18ல் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி உயர்வால் வேலையின்மை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என தனது அறிக்கையில் கூறியது. இந்த அறிக்கையை மூடி மறைப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். இத்தகைய மோசடி செய்த மத்திய அரசு, பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கப்போவதாக மக்களை ஏமாற்ற முனைகிறது.

தொலைநோக்கு திட்டம் 2030 என்ற முறையில் நிதிநிலையில் செய்யப்பட்டுள்ள அறிவிப்புகள் இதுவரை அவர்கள் சொல்லி வந்த பல கனவுத்திட்டங்களை தூசு தட்டி எடுத்த தொகுப்பாகவே அமைந்துள்ளது. இவற்றை நிறைவேற்றுவதற்கான எந்தவிதமான கால அவகாசமோ, நிதி ஆதாரமோ, அங்கீகாரமோ இல்லை.

மொத்தத்தில மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது, வரவிருக்கிற தேர்தலில் பாஜகவுக்கும் பலனளிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.”

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!



    காகிதப்பூ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.பால்கிருஷ்ணன்பியூஸ் கோயல்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x