Published : 14 Feb 2019 11:06 AM
Last Updated : 14 Feb 2019 11:06 AM

என் இனிய இயந்திரா... கோவையில் அசத்தும் `ரோபோ சர்வர்’

ஏம்பா சர்வர், தோசைக்கு சட்னி கேட்டு எவ்வளவு நேரமாச்சு. இப்பத்தான் தேங்காய் அரைச்சிக்கிட்டிருக்கீங்களா... இந்த ஹோட்டல்ல இதே தொல்லைப்பா. ஆர்டர் கொடுத்து அரை மணி நேரமாச்சு. இன்னும் சப்பாத்தி வரலை" என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டாலும், போகும்போது சர்வர் மனம்குளிர ரூ.5, ரூ.10 டிப்ஸ் வைத்துச் செல்வோம். ஆனால், கோவையில் ஒரு ஹோட்டலில் இதற்கெல்லாம் தேவையே இருக்காது. ஆம். இந்த ஹோட்டலில் சர்வர் வேலைகளைச் செய்வது மனிதர்கள் அல்ல, ரோபோக்கள்!

மனித அறிவின் உச்சம் ரோபோ. மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்காக, மனிதனால் உருவாக்கப்பட்டவை இயந்திரமனிதர்கள்.  தற்போது பெரும்பாலான துறைகளில் ரோபோக்களின் பயன்பாடுவந்துவிட்டது. மருத்துவம், ராணுவம், கட்டுமானம், தொழில் துறை என ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. `வேலை செய்வதுபோல நடித்து ஏமாற்றுவது,  சம்பள உயர்வு கேட்டு ஸ்டிரைக் செய்வது, அடிக்கடி லீவு போடுவது' என எதுவும் ரோபோக்களிடம் இருக்காது. மேலும், மனிதர்களால் செய்ய முடியாத, செய்யத் தயங்கக் கூடிய வேலைகளையும் செய்யும் என்பதால் ரோபோக்களின் பயன்பாடு வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்த வகையில், தற்போது

ஹோட்டல்களில் சர்வர் வேலை செய்யவும் வந்துவிட்டன ரோபோக்கள். கோவை அவிநாசி சாலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அருகேயுள்ள செந்தில் டவர்ஸ் முதல் மாடியில் கோவையில் முதல்  ரோபோ உணவகமான `ரோபோ தீம் ரெஸ்டாரன்ட்`. செயல்படுகிறது

எப்போதும் புதுமைகளை  அங்கீகரிப்பதில் முன்னிலை வகிக்கும் கோவை, ரோபோ உணவகத்துக்கும் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது. இந்த ரோபோ உணவகத்தின் பொதுமேலாளர் கைலாஷ் சுந்தரராஜனிடம் பேசினோம். "சென்னையில் 2012-ல் பி.இ. தகவல் தொழில்நுட்பம் முடித்தேன். சாஃப்ட்பேர் நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. அதனால் வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, கடைசியாக சோளிங்கநல்லூரில் உள்ள ஒரு ரெஸ்டாரன்டில் மேலாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அதன் உரிமையாளர் வெங்கடேஷ் ராஜேந்திரன். ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டுமென யோசித்துக் கொண்டே யிருந்தோம்.

அப்போதுதான், ரோபோ சர்வர் ஐடியா வந்தது. ஏற்கெனவே,  ஜப்பான், சீனா, நேபாள், பங்களாதேஷ் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள ரெஸ்டாரன்டுகளில் ரோபோக்களை சர்வர்களாகப் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்த பின்னர், 2017 நவம்பரில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் ரோபோ டெஸ்டாரன்டைத் தொடங்கினோம். அங்கு 4 ரோபோக்களை சர்வர் பணியில் பயன்படுத்தினோம். பெரிய அளவுக்கு வரவேற்பு இருந்தது. கோவையைச் சேர்ந்த நிறைய பேர் தேடி வந்து, ரோபோக்கள் கையால் சாப்பிட்டார்கள்(?).

எனவே, கோவையிலும் ரோபோ  ரெஸ்டாரன்டை தொடங்க முடிவு செய்து,  கோவை அவிநாசி சாலையில் 2018 ஜூலை மாதம் `ரோபோ தீம் ரெஸ்டாரன்ட்` என்ற பெயரில் ரோபோ ரெஸ்டாரன்டைத் தொடங்கினோம். இந்தியாவிலேயே சென்னைக்கு  அடுத்தபடியாக கோவையில்தான் இது அறிமுகமானது.

கோவை ரெஸ்டாரன்டில் ஒரே நேரத்தில் 140 பேர் வரை அமர்ந்து சாப்பிட முடியும். இதற்காக, சீனா-ஜப்பான் தொழில்நுட்பத்தில் 8 ரோபோக்களை இறக்குமதி செய்தோம். இவை `சர்வீஸ் ரோபோ` வகையைச் சேர்ந்தவை. இவற்றை இயக்குவது, பராமரிப்பது தொடர்பாக 3 மாதங்கள் பயிற்சி பெற்றோம்.

ப்ளீஸ், டேக் யுவர் ஃபுட்...

ஒவ்வொரு டேபிளிலும் `டேப்லட்` இருக்கும். அதில் உணவு வகைகள், விலை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த டேப்லட் மூலம் உணவு ஆர்டர் கொடுத்தால், அது சமையல் அறையில் உள்ள கணினியில் தெரியும். உடனே அவர்கள் உணவை சமைத்து, அங்கே தயாராக நிறுத்தப்பட்டுள்ள ரோபோக்கள் ஏந்தியுள்ள தட்டில் வைப்பார்கள். குறிப்பிட்ட டேபிளின் எண்ணை அழுத்திவிட்டால், அந்த ரோபோ சரியாக அந்த டேபிளுக்குச் சென்று, `ப்ளீஸ், டேக் யுவர் ஃபுட்` என்று கூறும். நாம் அந்த உணவை எடுத்துக் கொண்ட பிறகு, தேங்க்யூ, ஐ வில் கெட் பேக் டூ மை வொர்க்' என்று கூறிவிட்டு, மீண்டும் சமையல் அறை பகுதிக்குச் சென்றுவிடும்.

ரோபோ கொண்டு வரும் உணவை நாமே எடுத்துப் பரிமாற தயக்கம் இருப்பின், அங்கு பணியில் இருக்கும் வழக்கமான சர்வர்கள், அவற்றை  எடுத்து நமக்குப் பரிமாறுவார்கள். பெரும்பாலானோர் ரோபோ கொண்டுவரும் உணவை எடுத்து, தாங்களே பரிமாறிக் கொள்கின்றனர்" என்றார்.

காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், இரவு   7 முதல் 11 மணி வரையிலும் இந்த ரெஸ்டாரன்ட் செயல்படுகிறது. இந்த ரோபோக்களுக்கு உணவு மின்சாரம்தான். சர்வீஸ் நேரத்தைத் தவிர, மற்ற

ஓய்வு நேரங்களில்  இந்த ரோபோக்களுக்கு மின்சாரம் சார்ஜ் செய்யப்படுகிறது. சைனா,சின்லி, தேவாங், சங்ஹூ, சிச்சுவான், லீகுவான் என்றெல்லாம் இவற்றுக்குப் பெயர்கள் வைக்கப் பட்டுள்ளன.

"இங்கு இந்தியன், சைனீஸ், தாய், தந்தூரி வகை உணவுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. முன்கூட்டியே புக் செய்துவிட்டால், டேபிள் ஒதுக்கிவிடுவோம். நிறைய குழந்தைகள், தங்கள் பெற்றோருடன் இங்கு வருகின்றனர். பிறந்த நாள் பார்ட்டி, ட்ரீட் என முன்கூட்டியே புக் செய்துவிட்டு, விழாவை சிறப்பாகக் கொண்டாடிக் கொள்கின்றனர்.

அண்மையில் சென்னை போரூரிலும் ஒரு கிளையைத் தொடங்கியுள்ளோம். அதிகவரவேற்பு உள்ளதால், தமிழகத்தில் வெவ்வேறுநகரங்களிலும் ரோபோரெஸ்டாரன்டுகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றும் கைலாஷ் தெரிவித்தார்.

அடிமை உழைப்பாளி...

`ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ்` என்ற செயற்கை அறிவுத் துறையின் வளர்ச்சி வெகு வேகமாய் உள்ளது. ரோபோ என்ற வார்த்தை செக் அல்லது லத்தீன் மொழியிலிருந்து தோன்றியதாகக் கூறுகின்றனர். லத்தீன் மொழியில் லபோர் என்றால் அடிமை உழைப்பாளி என்று பொருள். காரல் கெப்பேக் என்ற செக் மொழி நாடகாசிரியர் 1921-ல் ஒரு  நாடகத்தில் ‘ரோபோ’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். மனிதர்களால் காலம்காலமாக செய்யப்படும் கடின வேலைகளை, இலகுவாக செயவதற்காக சில இயந்திரங்களைப் பயன்படுத்தினர். அவையே ரோபோக்கள். இந்த துறை இயந்திர மனிதவியல் (ரோபோடிக்ஸ்) என்றழைக்கப்படுகிறது. நகராதவை, நகரக்கூடியவை என ரோபோக்கள் உண்டு.  ரோபோக்களை உருவாக்குவதில் ஜப்பானியர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.  இயந்திர மனிதன் அல்லது மனித உருகொண்ட தானியங்கி ரோபோக்கள் ஹியூமனாய்டு ரோபோ என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை  உடல் பகுதியுடன், தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். சிலவகை மனித உருக்கொண்ட தானியங்கிகள் குறிப்பிட்ட உடற்பகுதியை மட்டும் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் தோல் தொழில்நுட்பத்துடன், மனிதரைப்போலவே தோற்றம்கொண்ட ரோபோக்களும் வந்துவிட்டன. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x