Last Updated : 12 Feb, 2019 10:38 AM

 

Published : 12 Feb 2019 10:38 AM
Last Updated : 12 Feb 2019 10:38 AM

சித்தரே இறைவனாய் அருள்பாலிக்கும் சித்தர்கோயில்!- கஞ்சமலை சித்தரான `காலங்கி நாதர்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்  செயற்கரிய செய்க லாதார்' என்பார் திருவள்ளுவர்.

அதாவது, அரிய செயல்களைச் செய்பவர் பெரியவர்; அவற்றைச் செய்ய முயலாதவர் சிறியவர் என்று இதற்குப் பொருள். சாதாரண மனிதர்களால் செய்ய இயலாத காரியங்களைச் செய்யும் பெரியவர்கள்தான் சித்தர்கள். 'சித்தர்' என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாக்கள் மூலம் எண் பெரும் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள்.

தமிழகத்தில் பல பிரசித்தி பெற்ற கோயில்கள்,  சித்தர்கள் சித்தியடைந்த தலமாக இருக்கின்றன. ஆனால், சித்தரே இறைவனாக இருந்து அருள்பாலிக்கும் சிறப்பு சித்தர்கோயிலுக்கு உள்ளது. இது, சேலம் மாவட்டத்துக்கே கிடைத்த  சிறப்பு.

`கஞ்சமலை சித்தர்` எனப்படும் காலாங்கி நாதர்,  சித்தர்கோயிலில் குடிகொண்டுள்ளார். பொதுவாக மூலிகைகள் நிறைந்த வனம் மற்றும் மலைகளில் சித்தர்கள் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. அதை மெய்ப்பிக்கும் வகையில், கஞ்சமலை அடிவாரத்திலிருந்து மக்களின் இன்னல்களை நீக்குகிறார்  சித்தேஸ்வர சுவாமி என்றழைக்கப்படும் காலாங்கி நாதர்.

திருமூலரின் சீடர்

18 சித்தர்களில் முதன்மையானவரான திருமூலர், தனது சீடரான காலாங்கிநாதருடன் இங்கு இருந்துள்ளார். அதனாலேயே இந்த ஊருக்கு சித்தர்கோயில் என்று பெயர். கஞ்சமலையில்  முதுமையைப் போக்கி, இளமையைத் தரக்கூடிய மூலிகை இருப்பதையறிந்த திருமூலர், அதைத்  தேடி கஞ்சமலைக்கு வந்தார். அப்போது, அவரிடம் சீடராக இணைந்தார் காலாங்கி நாதர்.

சேலத்திருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சித்தர்கோயில். பசுமையான கஞ்சமலையின் அடிவாரத்தில் உள்ள சித்தேஸ்வர சுவாமி கோயிலுக்கு, சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.

சுமார் 8000  ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலின் சிறப்புகள் குறித்து, திருமந்திரம், சிறுபாணாற்றுப்படை, கொங்கு மண்டல சதகம், கரபுரநாதர் புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருவறையில்

இளம் யோகியின் உருவத்தில், சின்முத்திரையுடன், வீராசன நிலையில் காட்சயளிக்கிறார்  சித்தேஸ்வர சுவாமி. இது சுயம்புவாகத் தோன்றியது என்றும் கூறப்படுகிறது. இக்கோயிலில், காளியம்மன்,  செல்வ விநாயகர் சன்னதிகளும், அருகே சிறு குன்றில் ஞான சத்குரு பாலமுருகன் சன்னதியும், கஞ்சமலையின் மீது மேல்சித்தர், கன்னிமார் கோயிலும் உள்ளன.

சித்தேஸ்வர சுவாமி கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் நேரம் முழுவதும் கோயில் திறந்திருக்கும். அமாவாசை நாளன்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சித்தரை வழிபடுகின்றனர். பவுர்ணமி கிரிவலமும் உண்டு.

கோயிலின் காந்த தீர்த்த குளத்தில், உப்பு, வெல்லம், மிளகு ஆகியவற்றையிட்டு வணங்கினால், பக்தர்களின் துன்பங்கள் கரைவதுடன், தோல் வியாதி, மருக்கள் ஆகியவையும் மறைந்துவிடும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் 3-வது செவ்வாய்க்கிழமை சித்தர் திருவிழா தொடங்கி,  வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.

கஞ்சமலை ரகசியம்

மிகுந்த மூலிகை வளம் கொண்டது கஞ்சமலை.  தங்கம், இரும்பு, தாமரை ஆகியவற்றின் கலவை கஞ்சம். இங்கு உயர்தர இரும்பு படிவம் ஏராளமாக உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத கஞ்சமலை இரும்பைக் கொண்டுதான் மாவீரன் அலெக்ஸாண்டரின் வாள் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. இங்குள்ள பொன்னி ஓடையில் கிடைத்த பொன்னைக் கொண்டு,  சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி என பல்வேறு மூலிகைகள் உள்ளன. அதியமானால் அவ்வைக்குத் தரப்பட்ட அரிய கருநெல்லிக்கனி கஞ்சமலையில்தான் கிடைத்துள்ளது.

முதுமை நீங்கிய முதியவர்

இக்கோயிலின் பரம்பரை சிவாச்சாரி யார்களில் ஒருவரான கே.பி.சங்கரகிருஷ்ணன் குருக்கள் கூறும்போது, "முதுமையை நீக்கும் மூலிகையைத் தேடி கஞ்சமலைக்கு, முதியவர் ஒருவருடன் வந்தார் மூலன் என்ற சித்தர். அந்த முதியவர் உணவு சமைத்தபோது, அங்கிருந்த ஒரு செடியின் வேரைக் கொண்டு, சாதத்தை கிளறிவிட்டார். அந்த சாதம் கருமை நிறமாகிவிட்டது. இதனால், அதை தானே உண்டுவிட்டு, மீண்டும் புதிதாக சாதம் வடித்துள்ளார்.  சாதத்தை கருமையாக்கிய செடியின் வேரை அடுப்பில்போட்டு எரித்து விட்டார். குடிலுக்குத் திரும்பிய மூலன், முதியவருக்குப் பதிலாக, இளைஞர் இருப்பதைப் பார்த்து விசாரித்தபோது, தானே அந்த முதியவர் எனக் கூறி, நடந்த சம்பவங்களை விளக்கியுள்ளார். அதிசயமடைந்த மூலன், மீண்டும் அந்த மூலிகைச் செடியைத் தேடி, அதை அலசி நீரைப் பருகி இளமைத் தோற்றத்தைப் பெற்றுள்ளார். அந்த  மூலனே, திருமூலர் என்றழைக்கப்படுகிறார் " என்றார்.

சித்தரின் திருவிளையாடல்

திருமூலரின் சீடர் காலங்கிநாதர், அங்கு மேய வரும் பசுக்களின் மடியிலிருந்து யாருக்கும் தெரியாமல் பாலைக் குடித்து விடுவார். பசுவின் உரிமையாளர்கள் மாடு மேயக்கும் சிறுவர்களிடம் இதைப்பற்றிக் கேட்டபோது, ‘தங்களுடன் விளையாட வரும் இளைஞர்தான் இதற்கு காரணமாக இருக்க முடியும்.

மேலும், விளையாட்டின்போது அவர், எங்களை பிரம்பால் அடிக்கிறார்' என்று தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த பசுக்களின் உரிமையாளர்கள் காலாங்கிநாதரைப் பிடித்து, அவரது முதுகில் ஓங்கி அடிக்கின்றனர். அவர்களது பிடியில் இருந்து தப்பி, சங்கு பூச்செடிகள் நிறைந்த புதருக்குள் புகுந்து காலாங்கிநாதர் மறைந்துவிடுகிறார். புதருக்குள் அவரைத் தேடியபோது, காலங்கிநாதர் கல் திருமேனியாக மாறியிருப்பதைக் கண்டு, தமது தவறை உணர்ந்துள்ளனர்.

இந்த தவறுக்கு பிராயச்சித்தமாக, ஒவ்வொரு சித்திரை மாதமும் 3-வது புதன்கிழமை, சித்தரின் முதுகில் அடித்தவர்களின் சந்ததியினர், சித்தராக வேடமணிந்து வருபவரிடம் அடிகளை வாங்கிக் கொள்கின்றனர்.

இக்கோயிலில் இருந்து ஒவ்வொரு பவுர்ணமி இரவும் பக்தர்கள் திரண்டு, கஞ்சமலையைச் சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவுக்கு கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி முன்னிரவில் தொடங்கும் கிரிவலம், மறுநாள் அதிகாலை நிறைவடைகிறது.

சித்தர்கள் பெயரில் ஊர்கள்

திருவிளையாடலின்போது, சித்தர் அடிபட்டு,  நல்ல அண்ணனாக இருந்த ஊர் என்பதால், அந்த ஊருக்கு நல்லண்ணம்பட்டி என்ற பெயர் வந்தது. சித்தர்கள் செய்த செயற்கைத் தங்கத்தை மாற்றிய ஊர் ஏழுமாத்தனூர். முதிய சித்தர்கள் இளம் பிள்ளைகளாக ஆனதால் பெயர் பெற்ற ஊர் இளம்பிள்ளை. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x