Published : 20 Feb 2019 01:53 PM
Last Updated : 20 Feb 2019 01:53 PM

பெண் எஸ்பி பாலியல் புகார்; ஐஜி முருகன் மீதான சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகாரில் சிபிசிஐடியோ, விசாகா கமிட்டி விசாரணைக் குழுவோ பிப்ரவரி 27-ம் தேதி வரை விசாரணை நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐஜியாகப் பணியாற்றிய முருகன் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் வெளியானதை அடுத்து இந்தப் புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.

புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலேயே விசாகா கமிட்டி உள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று, ஐஜி முருகனைப் பணிமாற்றம் செய்யக் கோரி புகார் அளித்த பெண் எஸ்.பி.யும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் தொடர்ச்சியாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்குகளில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அதிரடியாக அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதில், ''ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட டிஜிபி லஷ்மி பிரசாத் தலைமையிலான விசாகா கமிட்டி, விசாரணையை முடித்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

பெண் எஸ்.பி. அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் சிபிசிஐடி போலீஸார் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐஜி முருகனுக்கு எதிராக பணி விதிகளின் கீழ் தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

பாலியல் தொல்லையில் இருந்து பெண் அதிகாரிகள், ஊழியர்களைப் பாதுகாக்க அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலக அறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகன் தரப்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது ஐஜி முருகன் தரப்பில், ''சீமா அகர்வால் தலைமையிலான குழுவே கலைக்கப்பட்ட பிறகு அதன்படி அமைக்கப்பட்ட சிபிசிஐடி விசாரணை செல்லாது என அறிவிக்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவு நகல் கிடைக்கும் முன்னரே தனது அலுவலகத்தில் விசாகா விசாரணை குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது'' என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாகா விசாரணைக் குழு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தனி நீதிபதி உத்தரவின் மீது உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.

இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது ஐஜி-யின் மேல்முறையீடு மனு குறித்து தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை, சிபிசிஐடி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை, விசாகா கமிட்டி விசாரணைக் குழுவோ, சிபிசிஐடியோ விசாரணை நடத்தக்கூடாது என  ஸ்டேட்டஸ்-கோ உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x