

போலியாகத் திருமணப் பதிவுச் சான்றிதழ் தயாரித்து அவதூறு பரப்பி மிரட்டி வருவதாக நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் சென்னை பெருநகர காவலணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
2016-ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற திரைப்படத்தில் அதிதி மேனன், அபி சரவணன் சேர்ந்து நடித்தனர். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
ஆனால் தனது மின்னஞ்சலை ஹேக் செய்து ஆவணங்களைத் திருடி தன்னை அபி சரவணன் திருமணம் செய்து கொண்டது போல் போலியாக திருமணப் பதிவுச் சான்றிதழ் தயாரித்து மிரட்டுவதாக சென்னை பெருநகர் காவலாணையர் அலுவலகத்தில் அதிதி மேனன்புகார் அளித்துள்ளார்.
அதாவது தன்னுடைய பாஸ்போர்ட் விவரங்கள், பான்கார்டு விவரங்களை அபி சரவணம் திருடியதாக அவர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு முன்னதாக வளசரவாக்கக் காவல்நிலையத்தில் தன்னுடன் மனைவி போல் ஒரே விட்டில் வாழ்ந்து விட்டு நகை, பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாக அபி சரவணன் புகார் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பதில் அளித்த அதிதி மேனன், இருவரும் காதலித்தது உண்மைதான் ஆனால் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழவில்லை என்று மறுத்துள்ளார். மேலும் இதற்கு முன்னால் அபி சரவணனால் ஏமாற்றப்பட்ட பலரும் தன்னை ஆதாரத்துடன் எச்சரித்ததாகவும் அதனால் அவரை விட்டுப் பிரிந்ததாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் 7 மாதங்களுக்கு முன்பு தன் வீடு புகுந்து அபி சரவணம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆனால் அவரது பெற்றோர் வந்து மன்னிப்புக் கேட்டதால் தான் இது குறித்து புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் அதிதி தெரிவித்தார்.
சினிமாவில் தன் வளர்ச்சி பொறுக்க முடியாமல் அபி சரவணன் தனக்கு இப்படித் தொல்லை கொடுக்கிறார் என்று அதிதி மேனன் தன் புகாரில் தெரிவித்தார்.