

பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், ஓசூர் சட்டப்பேரவை தொகுதி காலியானதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.
மக்கள் பிரதிநித்துவச் சட்டப்படி சிறைத் தண்டனை பெற்றால் எம்.பி., எம்எல்ஏ என மக்கள் பிரதிநிதி பதவிகள் தானாகவே பறிபோய்விடும். எனவே, நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ணா ரெட்டி அன்றைய தினமே ராஜினாமா செய்தார். மேலும், அவருடைய ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் பறிபோனது.
இதையடுத்து, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், சிறை தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்ததால், அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் சட்டப்பேரவை தொகுதி காலியானதாக முறைப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற/சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைத் தொடர்ந்து ஓசூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் பாலகிருஷ்ணா ரெட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 191 (1)(உ) மற்றும் 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8 (3)-ன்படி பதவியை இழந்ததன் காரணமாக, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 190 3(அ)-ன்படி, 7.01.2019 முதல் ஓசூர் சட்டப்பேரவை தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.