

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதற்கு 4 நாட்கள் கழித்து கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் இந்துக்களை ஏமாற்றுவதாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 5-ம் தேதி கும்பகோணம் அடுத்த திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். பாமக முன்னாள் நகர செயலாளரான இவர் திருபுவனம் பகுதியில், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுவது மற்றும் கேட்டரிங் சர்வீஸ் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், இவரை மர்ம கும்பல் படுகொலை செய்தது.
இந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) ட்விட்டர் வாயிலாக கண்டனம் தெரிவித்தார். தனது ட்வீட்டில், "கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்!" எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள எச்.ராஜா, "இந்த படுகொலை திருச்சியில் திருமாவளவன் தலைமையில், ஜவாஹிருல்லா முன்னிலையில் ஸ்டாலின் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதன் செயல்வடிவம்.
இந்து தர்மத்தை வேரறுக்க இந்து உணர்வாளர்கள் வேரறுக்கப்பட வேண்டுமே. 4 நாட்கள் கழித்து கண்டணம் யாரை ஏமாற்ற. இந்துக்களே உஷார்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.