Published : 06 Feb 2019 10:09 PM
Last Updated : 06 Feb 2019 10:09 PM

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது? - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டும் பழக்கத்தினால் சாலை விதிமீறல் மற்றும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதனைக் கருத்தில் கொண்டு வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் அப்படிப் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ர மதுரை கிளை நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு  இன்று இந்தக் கேள்வியை எழுப்பினர்.  தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கான அபராதத் தொகையினை ரூ.10,000த்திலிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிய வழக்கில் நீதிபதிகள் இந்தக் கேள்வியை எழுப்பினர்.

 

போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த தகவலை அளிப்பதற்கு தமிழக டிஜிபி ஒரு வாட்ஸ் அப் எண் ஒன்றை அளித்தார். இது 2017-ம் ஆண்டு மதுரைக் கிளை அறிவுறுத்தலின் பேரில் வழங்கப்பட்ட செல்பேசி எண்ணாகும்.  இந்த எண் சுவிட்ச் ஆஃப் ஆகியிருப்பதாக இன்று மனுதாரர் கூறியிருப்பதன் அடிப்படையில் நீதிபதிகள் நீதிமன்ற அறையிலேயே செல்போனைக் கொண்டு வரச்சொல்லி அந்த எண்-ஐ டயல் செய்து பார்த்தார்கள் ஆனாலும் பயனில்லை சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது.

 

இதனையடுத்து போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கும் இந்த எண்ணை ஏன் சுவிட்ச் ஆஃப் செய்தார்கள் என்று டிஜிபியிடம் விளக்கம் பெற்றுத் தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 

இந்த வழக்கில்தான் செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் போக்குவரத்து விதிமீறல்களும், விபத்துகளும் அதனால் மரணங்களும் ஏற்படுவதால் அபடி செல்போன் பேசிகொண்டே வாகனம் இயக்குபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

 

மேலும் செல்போனுக்காக ரூ.25,000 வரை செலவு செய்கிறார்கள், எனவே போக்குவரத்து விதிமீறலின் போது செல்பேசியைப் பறிமுதல் செய்தால் அவர்களுக்கு ஒரு பயம் வரும் ஆகவே இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உடனடியாக பதிலளிக்க வேண்டுமெனக் கூறி இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x