Published : 05 Feb 2019 09:58 AM
Last Updated : 05 Feb 2019 09:58 AM

இந்து ஆன்மிக கண்காட்சியை 15 லட்சம் பேர் பார்வையிட்டனர்: சென்னையில் 6 நாள் கொண்டாட்டம் நிறைவு

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் ஜனவரி 29-ம் தேதி தொடங்கிய 10-வது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது.

இந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளை சார்பில் 6 நாட்கள் நடைபெற்ற இந்தக்  கண்காட்சியை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  பார்வையிட்டனர்.

கண்காட்சி அரங்கில் நுழைந்ததும் ஆதிசங்கரர், மத்வாச்சாரியார், ராமானுஜர், மகாவீரர், அவ்வையார், வள்ளலார், புத்தர், அகத்தியர், திருவள்ளுவர், காரைக்கால் அம்மையார்,  காஞ்சி பெரியவர், ரமணர், குருநானக் ஆகியோரின் பிரம்மாண்ட படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

பஞ்சாபில் உள்ள ஜாலியன்வாலாபாக் நினைவிடம், அந்தமான் தீவில்சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்டிருந்த செல்லுலார் சிறைச்சாலை ஆகியவற்றின் மாதிரி அமைப்பு தத்ரூபமாக வடிமைக்கப்பட்டிருந்தன. பம்பாய் புரட்சி, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், பகத்சிங், சுகதேவ், ராஜகுரு பற்றிய ஒளி - ஒலிக்  காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சி அரங்கம் முழுவதும் ஆன்மிகத்  தலைவர்களின் படங்களுக்கு நிகராக சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன. மாணவர்கள்,  இளைஞர்கள் இவற்றை ஆர்வத்துடன் ரசித்தனர்.

கலாச்சாரம், பாரம்பரியம்

இந்து மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் அரங்குகள், பூஜைகள், பக்திப் பாடல்கள் என ஒரு பக்கம் பக்தி மணம் கமழ்ந்தாலும் மறுபக்கம் இந்தியாவின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட அரங்குகளும் அதிகமாக இருந்தன.

தமிழர் இசைக் கருவிகளுக்கென தனி அரங்கம் வைக்கப்பட்டிருந்தது. உடுக்கை, மத்தளம், மகுடி, சங்கு, தாரை, கொம்பு, யாழ், உருமி போன்ற தமிழர் இசைக் கருவிகளை பார்வையாளர்கள் இசைத்துப் பார்க்கவும் வழங்கப்பட்டதால் அந்த அரங்கம் எப்போதும் நிரம்பி வழிந்தது.

சித்த, ஆயுர்வேத மருத்துவம், இயற்கை விவசாயம், சுற்றுலா, கைவினைப் பொருட்கள், யோகா, தியானம், மொழி, கர்னாடக இசை தொடர்பான அரங்குகளும் அதிகம் இருந்தன.

அஞ்சல் துறை அரங்கில் நமது புகைப்படத்தைக் கொடுத்தால் அஞ்சல்தலையை உடனடியாக அச்சடித்து தந்தனர். அங்கு விற்கப்பட்ட கங்கைநீரையும் அதிகமானோர் வாங்கிச் சென்றனர். தொல்லியல் துறை அரங்கில் இருந்த சிற்பங்கள் அனைவரையும் ஈர்த்தன.

கல்வி, மருத்துவ, சேவைகள்

தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை, தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப் பேரவை, வன்னியர் வரலாற்று ஆய்வு மையம், சோழ, பாண்டிய நாட்டு கள்ளர்கள், தமிழ்நாடு மராத்தியர்கள், நகரத்தார் பெண்கள் சங்கம், கொங்கு வேளாளர் கலாச்சார மையம், தமிழ்நாடு யாதவர் மகாசபை, தமிழ்நாடு கார்காத்தர் சங்கம், குறும்பர் பேரவை, அகில இந்திய முதலியார் சங்கம், பறையர் பேரவை, மறத்தமிழர் சேனை என சமுதாய அமைப்புகளின் அரங்குகளும் அதிகம் காணப்பட்டன. தங்கள் சமுதாயம் செய்யும் கல்வி, மருத்துவ, சேவைப் பணிகளை அவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.

அனைத்து அரங்குகளிலும் அவர்கள் வெளியிட்ட மற்றும் அது தொடர்பான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆந்திரா, தெலங்கானாவில்  இருந்து வந்திருந்த ஆலயங்களின் ரதங்கள், நிறைவு நாளான நேற்று நடந்த சீனிவாச திருக்கல்யாணம் ஆகியவை அதிக அளவில் மக்களை ஈர்த்தன.

ஈஷா யோகா மையம், மாதா அமிர்தானந்தமயி மடம், வேலூர் சக்தி அம்மா மடம், சின்மயா மிஷன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றின் அரங்குகள் கோயில்கள் போல அமைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சி குறித்து இந்து ஆன்மிக,சேவை அறக்கட்டளையின் அறங்காவலரும், துக்ளக் வார இதழின் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘இந்து, இந்துத்துவம், இந்துயிசம் என்பது இந்தியாவின் தொன்மை, கலாச்சாரத்தைக்  குறிக்கும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை  மையமாகக் கொண்டுதான் இந்தக்  கண்காட்சியை நடத்துகிறோம். அதனால்தான் அனைத்துத் தரப்பினரும் இங்கு அரங்குகளை அமைத்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுக்

கடங்காத கூட்டம் இருந்தது. 6 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்’’ என்றார்.

2,000 தன்னார்வலர்கள்

கடந்த 2009 முதல் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. ‘நாட்டுப்பற்றை வளர்த்தல்’ என்பது இந்த ஆண்டின் மையக் கருத்து. அதையொட்டியே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கண்காட்சியில் 200 அமைப்புகள்

400-க்கும் அதிகமான அரங்குகள் அமைத்தன. கண்காட்சி பணியில் 2,000-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஊதியம் பெறாமல் பணியாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x