Last Updated : 16 Feb, 2019 08:55 AM

 

Published : 16 Feb 2019 08:55 AM
Last Updated : 16 Feb 2019 08:55 AM

பல்வேறு தடைகள், விமர்சனங்களை கடந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பழனிசாமி அரசு

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, பல்வேறு தடைகளைக் கடந்து 3-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு இதே நாளில்தான் தமிழக முதல்வராக கே.பழனிசாமி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதிமுகவில் சாமானியனும் அமைச்சராகலாம், முதல்வராகலாம் என அடிக்கடி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுவார்கள். அப்படித்தான் சாமானியரான ஓ.பன்னீர்செல்வம் 3 முறை முதல்வரானார். அதேபோல கே.பழனிசாமியும் முதல்வரானார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதல்வர் பதவிக்கும் ஆசைப்பட பிரச்சினை உருவானது. சசிகலாவுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், பின்னர் திடீரென தர்மயுத்தம் தொடங்கினார். அந்த நேரத்தில்தான் பழனிசாமி உள்ளிட்ட சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதியானதால் அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போதுகூட முதல்வருக்கான பட்டியலில் பழனிசாமி பெயர் இல்லை. செங்கோட்டையனா, டிடிவி தினகரனா என்ற பேச்சுதான் இருந்தது. ஆனால், திடீரென கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பழனிசாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார். அவர் 2017 பிப்ரவரி 16-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அடுத்த சில தினங்களில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பொறுப்பை ஏற்ற பழனிசாமி, ஜெயலலிதா பாணியில் 500 மதுக்கடைகளை மூடுதல் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டு பணியைத் தொடங்கினார்.

ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவின் ஒரு தரப்பினர் தனியாக செயல்படத் தொடங்கினர். அவருடன் 10 எம்எல்ஏக்கள் இணைந்தனர். மேலும், ஓபிஎஸ் அணிக்கு பலர் சென்று கொண்டிருந்ததால் பழனிசாமி தலைமையிலான ஆட்சி 30 நாட்களில் கவிழ்ந்துவிடும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து வந்தன. ஆனால், சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமி அமைச்சரவை வெற்றி பெற்றது.

அதே நேரத்தில் ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டதால் அதிமுக கட்சிப் பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, டிடிவி தினகரனை வேட்பாளராக அறிவித்து அதிமுக களம் கண்டது. ஆனால், கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதுஅதன்பின், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் சிறைக்கு செல்ல, அதிமுகவில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது. கட்சிப் பெயர், சின்னத்தை மீட்க ஓபிஎஸ் - முதல்வர் பழனிசாமி அணிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலால் இரு அணிகளும் 2017 ஆகஸ்டில் இணைந்தன. ஓபிஎஸ் துணை முதல்வரானார். அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் பொறுப்பேற்றனர். அணிகள் இணைந்ததால் கட்சியும், இரட்டை இலை சின்னமும் மீண்டும் வழங்கப்பட்டது. அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், தனி அணியாக செயல்படத் தொடங்கினார். அவருக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்கள் சென்றனர். இதனாலும் பழனிசாமி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. ஆனால், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததன்மூலம் அரசு தப்பியது.

அரசின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைப்பதில் வெற்றி பெற்றது, ‘கஜா’ புயலின்போது முன்கூட்டியே பல ஏற்பாடுகளை செய்து உயிரிழப்பை குறைத்தது, ஜெயலலிதா அறிவித்த மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கும் திட்டம், பிளாஸ்டிக் தடை, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது போன்ற நடவடிக்கைகளால் முதல்வர் பழனிசாமி மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். அதேநேரம், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது, சேலம் 8 வழிச்சாலை, கோடநாடு விவகாரம் ஆகிய பிரச்சினைகளில் அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவையெல்லாம் பெரிதாக எடுபடவில்லை.

மத்திய அரசுடன் இருக்கும் நெருக்கத்தால் அரசுக்கு எந்த சிக்கலும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். ஒரு பக்கம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள்.. டிடிவி தினகரனின் அமமுகவால் ஏற்பட்ட நெருக்கடி.. மற்றொரு பக்கம் விவசாயிகள், அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டங்கள் என பல தடைகளையும் கடந்து 2 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x