

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு சிறுத்தைக்குட்டியை கடத்திவந்த பயணி விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினார், சிறுத்தை மீட்கப்பட்டது.
தாய்லாந்திலிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் இன்று காலை சென்னை வந்தது. விமானத்தில் வந்த பயணிகளிடம் வழக்கமான சோதனைகளை சுங்கத்துறை அதிகாரிகள் செய்தனர். அப்போது காஜா மொய்தீன் என்கிற பயணியை சோதனையிட்டனர்.
அவரது உடைமையில் இருந்து பூனைக்குட்டி கத்துவது போன்று வித்தியாசமான சத்தம் வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர், ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
சந்தேகத்திற்கு உரிய வகையில் அவர் இருந்ததால், காஜா மொய்தீனின் உடைமைகளை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு கூடையில் பெண் சிறுத்தைக் குட்டி ஒன்று இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதை சோதித்தனர்.
பிறந்து சில வாரங்களே ஆன சிறுத்தைக்குட்டி அது. வனத்துறைச் சட்டப்படி அதை வைத்திருக்கக்கூடாது. விமானத்தில் அதை தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த காஜா மொய்தீன்மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
சிறுத்தைக்குட்டிப் பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் சிறுத்தைக்குட்டியை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். கைப்பற்றப்பட்ட குட்டி 1 கிலோ 100 கிராம் மட்டுமே எடையுள்ள பூனைக்குட்டி சைஸில் உள்ள குட்டியாகும். பால்குடிக்கும் குட்டியை உரிய முறையில் பராமரிக்காவிட்டால் அது இறக்கவும் வாய்ப்புண்டு.
பிடிபட்ட காஜா மொய்தீனிடம் வனத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்மீது வனத்துறைச் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வருகிறது.