Last Updated : 18 Feb, 2019 03:40 PM

 

Published : 18 Feb 2019 03:40 PM
Last Updated : 18 Feb 2019 03:40 PM

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டுமென விதியை ஏன் கொணரக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய லோகநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்டோ- ஜியோ தரப்பில், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு பல வழிகாட்டல்களை வழங்கியும், போதுமான கால அவகாசம் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

அதற்கு அரசுத்தரப்பில் அரசின் ஒவ்வொரு ரூபாய் வருமானத்திலும் 71 பைசா அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் வட்டிச் செலவுகளுக்காக செலவிடப்படுகிறது. அரசு ஊழியர் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒவ்வொரு ஊதியக்குழுவின் பரிந்துரையின் போதும் அரசு ஊழியர்களுக்கும், அரசு ஊழியர் அல்லாதோருக்குமான இடைவெளி அதிகரித்து வருகின்றது. அரசு ஊழியர்கள் போராடும் போது அரசு உடனடியாக அவர்கள் கோரிக்கை தொடர்பாக அழைத்துப் பேச வேண்டும் என்றனர்.

அதனைத்தொடர்ந்து, படிப்பதற்கு அரசுப்பள்ளிகளை நாடுவோர், பொறியியல், மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் அரசுக் கல்லூரிகளை நாடுகின்றனர். அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டுமென விதியை ஏன் கொணரக்கூடாது? என கேள்வி எழுப்பியதோடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50% இடங்களை ஒதுக்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாமே என்றனர்.

உரிமைக்காக போராடும் ஆசிரியர்கள், அவர்களின் கடமைகளிலும் கருத்தாய் இருக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சில தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக யூனியன்கள் செயல்படுவதால், நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளே தயங்கும் நிலை உள்ளது. யூனியன்கள் தேவையற்ற விஷயங்களுக்கு ஆதரவாக செயல்படுவது ஆபத்தானது. அது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்தனர்.

ஜாக்டோ- ஜியோ தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாறுதலை ரத்து செய்யவும், ஊதிய பிடித்தத்தை வழங்கவும் கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் ஊதியபிடித்தத்திற்கு பதிலாக அவர்களின் விடுமுறை காலத்தை கழித்துக்கொள்ளலாமே என தெரிவித்தனர்.

தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யபடுவதில்லை. அரசு ஊழியர்களை ஓட்டுக்காகவே பயன்படுத்துகின்றனர் என தெரிவித்தனர்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவில் ஆசிரியர்களை இடமாறுதல் செய்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் குறையும் என தெரிவித்த நீதிபதிகள், ஜாக்டோ - ஜியோ தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாறுதலை ரத்து செய்வது குறித்து இடைமனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x