

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள அபிநந்தனின் தந்தையிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறியுள்ளார் கமல்
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இரு இந்திய விமானிகளைக் கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது. இதில் ஒருவர் விமானி காமாண்டர் அபிநந்தன்.
இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால், பல்வேறு அரசியல் தலைவர்கள் அபிநந்தனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்கள். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அபிநந்தனின் தந்தை வர்த்தமானிடம் கமல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
அப்போது "மனோபலம் உள்ள உங்களைப் போன்ற போர் வீரர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நாடே உங்களுடன் இந்த இக்கட்டான சூழலில் துணை நிற்கிறது. உங்கள் மகன் இந்த நாட்டிற்கு செய்திருக்கும் இந்த பணி உன்னதமானது" என்று கமல் தெரிவித்துள்ளார்.
மேலும், ”உங்களைப் போல போர் தர்மம் அறிந்த, புரிந்த வீரர்கள் அங்கும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எனவே, அபிநந்தன் நலமாக நாட்டிற்கும் வீட்டிற்கும் திரும்புவார். நாங்கள் அனைவரும் நிம்மதியாக தூங்குவதற்கு காரணமே நீங்கள் தான்.
ஆனால், இன்றிரவு நீங்கள் நிம்மதியாக தூங்க இயலாது என்பது வருந்தத் தக்க செய்தி.அபிநந்தன் மீண்டும் பாதுகாப்பாகவும், நலமுடனும் நாடு திரும்பி வருவார்” என்றும் எடுத்துரைத்துள்ளார் கமல்.
அபிநந்தன் விவகாரம் தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் எந்தவொரு கருத்துமே தெரிவிக்கவில்லை. இதற்கு இது விவாதப்பொருளோ, அதற்கான நேரமோ இல்லை. இது விவேகத்திற்கான நேரம் என்று தெரிவித்துள்ளார்.