Last Updated : 02 Feb, 2019 11:21 AM

 

Published : 02 Feb 2019 11:21 AM
Last Updated : 02 Feb 2019 11:21 AM

தள்ளுவண்டியில் தொடங்கிய வெற்றிப் பாதை!- ‘பழமுதிர் நிலையம்’ சின்னசாமி

வாய்ப்புகள் எப்பவும் நம்மை சுத்தியே இருக்கு. எந்த ரூபத்துல வந்தாலும் கவனிச்சு, அதை பயன்படுத்திக்க நாம் தயாரா இருக்கணும். பொதுவா அது கஷ்டங்கள் வழியாதான் வரும். சோர்ந்துபோய், வர்ற வாய்ப்பை கவனிக்காம இருந்தா, அது நம்ம கைவிட்டுப் போயிரும். கஷ்டம் அப்படியே நம்மகூட தங்கிடும். எனக்குக் கிடைச்ச வாய்ப்புகளை நான் சரியா பயன்படுத்திக்கிட்டேன். மூணாம் வகுப்புகூட தாண்டாத நான், வாழ்க்கையில் முன்னேற இதுதான் காரணம்"

ஒவ்வொரு படியாக முன்னேறிய கதையை விவரிக்கிறார்  சின்னசாமி. தள்ளுவண்டியில் பழம் விற்றவர், இன்று கோவையின் முக்கிய அடையாளமாக விளங்கும் ‘பழமுதிர் நிலையம்’ கடைகளை உருவாக்கிய  பின்னணியை விவரிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

"உங்கப்பா சாமிகிட்ட போயிட்டாரு சின்னசாமி’னு சொல்லும்போது எனக்கு 12 வயசு. அப்ப ஓட ஆரம்பிச்சது என் வாழ்க்கைச் சக்கரம். இப்ப அடுத்த தலைமுறை தொழில் பார்க்க வந்த பிறகும், பழக்கடைக்கு ரெண்டு நாள் போகாம இருந்தா, மனசுக்கு என்னமோ மாதிரி இருக்கும்.  'கூடி வாழ்ந்தா கோடி நன்மை’னு சொல்லுவாங்க. அதை நாங்க அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கோம். எனக்கு அடுத்து நடராஜன், கந்தசாமி, ரத்தினம்னு மூணு தம்பிங்க. அப்பா இறக்கும்போது கடைசி தம்பி கைக்குழந்தை. வீட்டுக்கு மூத்த பையனா குடும்ப பாரத்தை ஏத்துக்க வேண்டிய நிலைமை.

குழந்தைகளுக்கான விளையாட்டு, கதைகள், பொம்மைகள்னு எதுவும்  எனக்குத் தெரியாது. ஒரு இஸ்லாமியர்கிட்ட, ‘பாய், இந்தப் புள்ளைய நீங்கதான் பாத்துக்கணும்னு’ வீட்லேயிருந்து கூட்டிட்டுபோய் ஒரு பழக்கடைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தாங்க. அல்லாவை உண்மையாக நேசிக்கிற முஸ்லிம்தான் அந்த பழக்கடை முதலாளி. ‘கூடுதலா நாலு மணிநேரம் வேலை பார்க்கலாம் சின்னசாமி. யார்கிட்டேயும் பொய் சொல்லாம, திருடாம, யாரையும் ஏமாத்தாம வாழணும்னு’னு சொல்லிக் கொடுத்தார். சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் கடை முதலாளி சொன்னதை கடைப்பிடிக்கிறேன்.

அன்னூர் பஸ் ஸ்டாண்டுல...

நான் முதன்முதலா வேலைபார்த்த பழக்கடை, கோவைக்குப் பக்கத்தில் இருக்கிற அன்னூர் பஸ் ஸ்டாண்டுல இருந்துச்சு. முதல் பஸ் காலையில் 5 மணிக்கு உள்ள வர்றதுக்கு முன்னால கடை திறந்தாகணும். இரவு ஒன்பது மணிக்கு கடைசி பஸ் கிளம்பின பிறகு கடையைச் சாத்தணும். பொங்கல், தீபாவளிக்கு மட்டும் எனக்கு லீவு. முதலாளி ரம்ஜான், பக்ரீத் பண்டிகைக்கும் வேலைபார்ப்பார். வேலையில்லைனு எப்பவும் சும்மா இருந்து எனக்குப் பழக்கம் இல்லை. அந்த சின்னக் கடையில வாடிக்கையாளரை எதிர்பார்த்துட்டு ரெண்டு பேர் உட்கார்ந்துட்டு இருப்போம்.

முதலாளிகிட்ட, ‘பஸ்ல ஏறி பழத்தை விக்கட்டுமா’னு கேட்டேன். ‘பழம் வேணும்னா  கடை தேடி வந்து வாங்கப் போறாங்க. கொண்டுபோய் வித்தா மட்டும் வாங்கிடுவாங்களா?’னு சந்தேகமா கேட்டார். நாள் பூரா ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்கிறதுக்கு பதிலா,  புதுசா முயற்சி செஞ்சி பாக்கிறேனு சொன்னேன். ஆர்வமா கேட்டதால சரின்னு சொன்னாரு.

'டஜன் பழம் 3 ரூபா'

கொஞ்சம் பழங்களைக் கையில் எடுத்துட்டுப்போய் பஸ்ல ஏறி, இறங்கி வித்தேன். அதுதான் நானா எடுத்த முதல் தொழில் முயற்சி. அதுக்கு நல்ல பலன்  கிடைச்சது. ‘டஜன் பழம் 3 ரூபா.. டஜன் பழம் 3 ரூபா’னு கூவி வித்து தொண்டை வறண்டுரும். இயல்புல கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ள ஆளு நான். பழங்களை கூவி விற்பனை பண்ணுவேன்னு நினைச்சுக்கூட பாக்கலை. இப்போகூட கடையில் வாடிக்கையாளர்கள்கிட்ட சகஜமா பேசுற நான், தனிப்பட்ட முறையில் அதிகம் பேசமாட்டேன். வாடிக்கையாளர் இருக்கிற இடத்துக்கேபோய், பேசி பழங்களை விற்பனை பண்ணதும், கணிசமா வியாபாரம் அதிகமாச்சு. நானே விரும்பி செஞ்ச வேலைக்குப் பாராட்டும், கூடுதல் சம்பளமும் பரிசா கிடைச்சது. நிறைய உழைச்சா, நிறைய சம்பாதிக்கலாம்னு அப்ப புரிய ஆரம்பிச்சது. அப்புறம் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் உழைக்க கிடைச்ச வாய்ப்பை தவற விட்டதே இல்லை.

கடையில் சும்மா இருக்கிற நேரத்துல, பழங்களைத் தரம் பிரிச்சு அடுக்கி வைப்பேன். ஓவியம் வரையிற மாதிரி பழங்களை ரசிச்சு அடுக்கி வைக்கிறது எனக்கு பிடித்தமான வேலை. ‘இதுக்கு தனி சம்பளமா குடுக்கப்  போறாங்க. சும்மா ஒக்காரலாமில்ல’னு சிலர் சொல்லுவாங்க. உழைக்கிறதுக்கு அப்ப காசு கிடைக்கலைன்னாலும், பின்னால அதுக்கு ஒரு பலன் இருக்கும். சும்மா உட்கார்ந்து சோம்பேறியா மாறினா, அப்புறம் நமக்காக உழைக்கணும்னாலும் உடம்பு வளையாது. பழங்களைத் தரையில கொட்டி விக்கிற கடையைவிட, அதே பழத்தை அழகா அடுக்கி வெச்ச எங்க கடையைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவாங்க. சிலர் மனம்விட்டு பாராட்டிட்டுப் போவாங்க. அதுதான் அந்த வேலைக்கான சம்பளம்.

திடீர்னு வேலை போச்சு...

எந்தக் குறையும் இல்லாம போயிட்டிருந்தா, வாழ்க்கையில் ருசியே இருக்காது. திடீர்னு ஒரு புதுப் பணக்காரர் பஸ் ஸ்டாண்டை குத்தகைக்கு எடுத்ததும், பழக்கடையைக் காலி பண்ணவேண்டிய நிர்ப்பந்தம். ஹைவே ரோட்ல நடக்கிற விபத்து மாதிரி கண் இமைக்கிற நேரத்துல வேலைபோச்சு.

கணவர் இல்லாம, சின்ன சின்ன பிள்ளைகளை வெச்சு அம்மா கஷ்டப்படும்போது வீட்டு பாரத்தைச் சேர்ந்து சுமக்காம, நானே பாரமானேன். மூணுவேளை சாப்பாடும், சம்பளமா கொஞ்ச பணமும் கொடுத்தா எங்க வேணாலும் வேலைக்குப் போகத் தயாரா இருந்தேன்.  ஊட்டி வரை போனது என் வேலைதேடும் பயணம். ஊட்டியில் மளிகைக்  கடை நடத்தும் செட்டியார் கடையில் வேலை. அரிசி, உப்பு மூட்டைகளோடு மூட்டையாக நானும் ஒண்டிகிட்டு ரெண்டு வருஷம் பொட்டலம் கட்டி, பொழைப்பு ஓட்டினேன். எங்க போனாலும் ஒழுக்கம், உழைப்பை   மட்டும் கைவிடல. அதனால, எந்த இடத்துல வேலை பார்த்தாலும் அங்க  மதிப்பு இருக்கும்.

18 வயதில் பஞ்சாலையில்...

கோயம்புத்தூர்ல கஷ்டத்துல இருக்கிற எல்லா குடும்பமும், எப்படியாவது மில் வேலைக்குப் போயிடணும்னு நினைப்பாங்க. 18 வயசு ஆனாதான் மில் வேலை கிடைக்கும். சிபாரிசு இல்லாம சுலபமா வேலை கிடைக்காது. எங்க அம்மா, அதுக்காக பல இடங்களுக்கு நடையாய் நடந்தாங்க. எனக்கு 16 வயசு ஆனதுமே பல இடத்துல சொல்லி வெச்சதுக்குப் பலனா,  நினைச்ச மாதிரியே பஞ்சாலையில் வேலை கிடைச்சது. சூரியன் உதிப்பதற்கு முன்பு தொடங்கி, 15 மணிநேரம் கடுமையாக உழைத்த எனக்கு மில்லில் எட்டு மணிநேரம்தான் வேலை என்றார்கள். ஓவர்டைம் வேலை பார்த்தாலும் 10 மணி நேரத்தைத் தாண்ட முடியவில்லை. அதிலும் ஷிப்ட் முறை வேலை என்பதால், நைட் ஷிட்ப் முடிந்து பகல் முழுவதும் வீட்டில் சும்மா இருப்பது எனக்கு மிகப்பெரிய தண்டனையானது.

ஒரு வருஷத்துல, எனக்கு அடுத்த தம்பி நடராஜனும் மில் வேலைக்கு வந்துட்டாரு. இரண்டு பேரு சம்பளம் வீட்டுக்கு ஓரளவு நம்பிக்கை கொடுக்க ஆரம்பிச்சது. ஒருத்தருக்கு மாசம் 60 ரூபாய் சம்பளம். படிச்சிட்டு வேலைக்குப்போன வாத்தியார் வாங்குற சம்பளத்தைவிட இது அதிகம். கூட வேலை  பார்க்கும் பெரும்பாலானவங்க, சும்மா இருக்கிற நேரத்துல சீட்டு ஆடுவாங்க. குடிப்பழக்கம் அதிகமாயிடும். வாங்குற காசு கையில் நிக்காம போயிடும். 'சும்மாதான இருக்க சின்னசாமி. ஒரு ஆட்டம் போடலாம் இல்ல'னு கேப்பாங்க. சும்மா இருக்கிறதுதான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம். அதனால, எட்டு மணிநேரம் மில் வேலைபோக, வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்.

தள்ளுவண்டியில் பழ விற்பனை

ஏற்கெனவே பழம் வித்த அனுபவமும், மளிகைக் கடையில் வேலைபார்த்த அனுபவமும் இருந்தது. மளிகைக் கடை வைக்க முதலீடு அதிகம் தேவைப்படும். பழம் விக்கிறதுக்கு ஒரு தள்ளுவண்டி இருந்தா போதும். ஒரு பழைய நாலு சக்கர வண்டியை 105 ரூபாய்க்கு வாங்கினேன். 100 ரூபாய்க்கு பழம் வாங்கினேன். கோயம்புத்தூர் டவுன்ல இருந்து கொஞ்சம் தள்ளி குடியிருந்தோம். பழம் வாங்க மக்கள் டவுனுக்குத்தான் போகணும். அவங்க வீட்டுக்கே போய் சப்ளை பண்ணா, அவங்களுக்கு வசதியா இருக்கும்னு தோணுச்சு.

அந்தக் காலத்தில் வீடுகளில் பழமோ, ரொட்டியோ வாங்கினா, ‘என்னங்க, வீட்ல யாருக்கு சுகமில்ல?’ என்கிற கேள்வியை எதிர்கொண்டேயாக வேண்டும். நோயாளிகள் மட்டுமே பழம் சாப்பிடுவார்கள் என்பது மக்களிடம் பரவலாக இருந்த கருத்து.  ’உடம்புக்கு முடியலைன்னா பழம் சாப்பிடணும்னு இல்லீங்க. நோய் எதுவும் வாராம இருக்க பழம் வாங்கி சாப்பிடுங்க’னு  பிரச்சாரம் பண்ணுவேன். வாடிக்கையாளர்களும், ‘நல்லா பேசுறீங்க’னு பாராட்டுவாங்க. சலிப்பில்லா உழைப்பு யாரையும் எப்பவும் கைவிட்டதில்லை. காலமும் மெதுவாக மாறத்தொடங்கியது.

வாடிக்கையாளர்களே கடவுள்!

தம்பியும் உதவிக்கு வந்தபிறகு வேலைய மாத்தி மாத்தி செஞ்சோம். எங்க கிட்ட பழம் வாங்க காத்திருக்கிறவங்க எண்ணிக்கை அதிகமாச்சு. கடவுள் யார் மூலமா நம்ம கண்ணைத் திறப்பார்னு கணிக்கவே முடியாது. ஆனால், எனக்கு எல்லா நேரங்களிலும் வாடிக்கையாளர்களே கடவுளாக இருந்து, வழி சொல்லி வளர்த்துவிட்டாங்க. அடுத்து நான் என்ன பண்ணனும்னு வாடிக்கையாளர் எனக்கு தொடர்ந்து சொல்லிகிட்டே இருப்பாங்க. அவங்க என்கிட்ட பிரச்சினையா சொல்ற விஷயத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து கேட்பேன். அவங்க குறையா சொன்னதையெல்லாம் சரிசெய்ய ஆரம்பிச்சேன். அதுதான் எங்க அடுத்தடுத்த முன்னேற்றம்.  `உன்னை எதிர்்பார்த்து காத்திருப்பது கஷ்டமா இருக்கு சின்னசாமி. நீ ஏன் ஒரு கடைபோடக்கூடாது?` என்று நான் எதிர்கொண்ட கேள்வி,  எங்க வாழ்க்கையவே மாத்திடுச்சு.

திடீர் அதிர்ச்சி...

என்னுடைய இன்னொரு தம்பி கந்தசாமியும் எங்ககூட தொழில்ல இணைஞ்சதுக்கு அப்புறம் கடை போடுற தைரியம் வந்துச்சு. அப்ப கடைக்குப் பேர் எதுவும் இல்லை. வியாபாரம் மெதுவாக சூடுபிடிக்கிற நேரத்துல, அடுத்த பிரச்சினை வந்தது. எங்க கடைக்குப்  பக்கத்திலேயே, ஜிகுஜிகுனு ஜோடிச்சு, நல்ல வெளிச்சதோடு, பழங்களுக்கு அலமாரி செய்து புதுசா ஒரு கடையை திறந்தாங்க. நாங்கள் குண்டு பல்பு வெளிச்சத்தில் தரையில் நியூஸ்பேப்பர் விரித்து பழங்களை அடுக்கும் நிலையில் இருந்தோம்.

போட்டியை எப்படி சமாளிப்பது என்று குழப்பமாக இருந்தது. பக்கத்து கடைபோல செலவு செய்ய எங்களிடம் முதலீடு இல்லை. கடன் வாங்க எப்பவுமே விருப்பம் இல்ல. அப்பதான், 'தள்ளுவண்டியில் பழம் வித்தபோது சரியா இருந்த நீ, சொந்தமா கடை வெச்சதும் மாறிட்டியே சின்னசாமி. நல்லா இல்லாத பழங்களை கொடுத்துட்டு அநியாய விலை வேற வாங்குறீயே?'னு ஒரு வாடிக்கையாளர் கேட்டதும்  அதிர்ச்சியா இருந்தது. நம்பிக்கையான வாடிக்கையாளரிடமிருந்து இப்படி வார்த்தைகள் வருமுன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. கஷ்டப்பட்டு மிச்சம் பிடிச்சு சேர்த்த பணத்தை முதலீடா போட்டு தொடங்கின தொழில்ல, நஷ்டம் வந்தா அதை தாங்கிற நிலைமையில் நாங்க இல்லை. அதைவிட, சொத்தாக நினைத்து சேர்த்த நல்ல பெயரையும் இழந்துவிட்டு நஷ்டமடைவது இரட்டை தண்டனை.  எங்க தப்பு நடக்குதுன்னு தேடினோம்.

கார் வைத்திருக்கும் வீடுகளில் டிரைவரிடம் பழம் வாங்கிவரச்சொல்லி அனுப்புவாங்க. டிரைவர்கள் தெரியாமல் பக்கத்துக் கடையின் கவர்ச்சியில் மயங்கி அங்கிருந்து பழங்களை வாங்கிட்டுப் போயிடுறாங்கனு தெரிஞ்சது.  ‘‘இந்தக் குழப்பத்துக்கு தீர்வா, உங்க கடைக்கு ஒரு பேர் எழுதி வைங்க’னு இன்னொரு வாடிக்கையாளர் எங்களை அடுத்த முன்னேற்றப் படியில் ஏற்றி நிற்க வைத்தார்.

பிரச்சினை என்று வரும்போதுதான் தீர்வு என்பதையே தேட ஆரம்பிக்கிறோம். ஒரு பழக்கடைக்குப் பேர் வைப்பதெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அதிசய செயல். முருகக் கடவுளின் ஞாபகமாகவும்  ‘பழமுதிர் நிலையம், கோயம்புத்தூர்’னு பெயர் வைத்தக் கையோடு, ஒரு அச்சு சீல் செய்தேன். வாடிக்கையாளர்கள் ஒரு நோட்டையும், வேண்டிய பழங்களையும் சொல்லி அனுப்பினால்போதும். விலை எழுதி அதில் முத்திரையிட்டுத் தருவோம். மாதக் கடைசியில் மொத்தமா பணத்தை வாங்கினோம். வாடிக்கையாளர்களுக்கும் இது  வசதியாக அமைந்தது.

வேலையா?... வியாபாரமா?

எங்களுடைய எல்லா தொழில் முயற்சிக்கும், அஸ்திவாரமாக இருந்தது நானும், தம்பியும் மில்லில் வேலை பார்த்ததால் கிடைத்த மாத சம்பளம்தான். எனக்கு பகல் ஷிப்டும், தம்பிக்கு இரவு ஷிப்டும் இருப்பதுபோல வேலையை அமைச்சிக்கிட்டோம். நாங்கள் பழம் விற்பதும், அதற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதும் ஊரில்  இருக்கிறவங்களுக்குப் பரவலா அறிமுகமாயிடுச்சு. தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டு, சொந்தமாக இன்னொரு தொழில் செய்தால் நிர்வாகம் ஒப்புக்கொள்ளாது. எங்கள் வேலை நேரம்போக இதை செய்தாலும், விதிமுறைகள்படி நாங்கள் வேலையைவிட்டு விலக வேண்டிய நிலை ஏற்படும்.

எனக்கும், தம்பிக்கும் மில் வேலை கிடைச்ச அப்புறம்தான்,  எங்க குடும்பத்துகே பாதுகாப்பு உணர்வு வந்துடுச்சு. எந்தவித உத்திரவாதமும் இல்லாத வியாபாரமா? பாதுகாப்பு நிரந்தரமான மில் வேலையா?னு முடிவு எடுக்க வேண்டிய கட்டம் வந்தப்ப, என்ன முடிவெடுக்கிறதுனு தெரியாம தவிச்சோம்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x