Published : 05 Feb 2019 11:25 AM
Last Updated : 05 Feb 2019 11:25 AM

கிராம மக்கள் வயிறார சாப்பிடணும்!- பசி தீர்க்கும் `பசியாற சோறு’

சின்ன வயசுல சாப்பாடு இல்லாம அழுதிருக்கேன். பக்கத்து வீட்டுல கையேந்தி சாப்பிட்டிருக்கேன். அந்த வலிதான், மத்தவங்களுக்கு சாப்பாடு கொடுக்க வேணுமுன்னு தூண்டுச்சி. இன்னைக்கும் கிராம மக்கள் நல்ல சோறு கொண்டுபோனா, சூழ்ந்துகிட்டு ஆவலோட வாங்கிக்கறாங்க. அவங்க வயிறார சாப்பிடணுமுங்க" என்கிறார் கோவை `பசியாற சோறு` அமைப்பின் நிறுவனர் ராஜா சேதுமுரளி(48).

கோவையில் கல்யாண மண்டபங்களிலும், வீட்டு விஷேசங்களிலும் மீதமாகும் உணவை வாங்கிச் சென்று, கிராமப்புறத்தில் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் வழங்கி வருகிறார் இவர்.

"சொந்த ஊரு குனியமுத்தூரு. அப்பா கிருஷ்ணசாமி சின்ன வயசுலேயே செத்துட்டாரு. நாங்க 3 பசங்க, 2 பொண்ணுங்க. அம்மா வள்ளியம்மாள் கூலி வேலைக்குப் போயும், மாங்கா, வெள்ளரிக்கா வித்தும் குடும்பத்த பாத்துக்கிட்டாங்க. 5 பேருக்கு சோறு போட முடியாத அளவுக்கு வறுமை. பல நாட்கள் வெறும் சோறுதான் இருக்கும். தண்ணி ஊத்தி சாப்பிடுவோம். சில நாளு பருப்பும், தக்காளியும் மட்டும்போட்டு கொழம்பு வெப்பாங்க. அம்மா வேலைக்குப் போனா, நைட்டு வர்றதுக்கு லேட்டாகும். அதுவரைக்கும் பசி தாங்க முடியாம அழுதிருக்கேன். பக்கத்து வீடுகள்ல  போய் சோறு வாங்கி சாப்பிடுவேன். ஒரே ஒரு டிரஸ்-தான் வெச்சிருந்தேன்.

வறுமை தாங்க முடியாம 9-ம் வகுப்போட படிப்ப நிறுத்திட்டேன். வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிக்கற வேலைக்குப் போனேன். சின்ன வயசுல இருந்தே நிறைய நாடகம் பார்ப்பேன். அதனால், 19-வது வயசுல தெருமுனை நாடகம், மேடை நாடகம்னு நடிக்கத் தொடங்கினேன். அப்புறம் சென்னைக்குப் போய் சினிமாவுல சேர்ந்தேன்.  நான் கடவுள், இவன் வேற மாதிரினு சில படங்கள்ல சின்ன சின்ன வேஷத்துல நடிச்சேன். ஒருகட்டத்துல, அதுபுடிக்காம கோயம்புத்தூருக்கே திரும்ப வந்துட்டேன்.

மழைநீர் சேகரிப்பு, எய்ட்ஸ் ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்பு, மரம் வளர்ப்பு, சேமிப்பு, பெண் சிசுக்கொலை தடுப்புனு விழிப்புணர்வு நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். வேஷம் போட்டுக்கிட்டு கலெக்டர் ஆபீஸ் முன்னாடி நின்னு, விழிப்புணர்வுப் பணியிலயும் ஈடுபட்டேன்.

பல இடங்களுக்குப் போனப்ப, நிறைய பேரு பசியோட இருக்கறது தெரியவந்துச்சி. அப்புறம், சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன். 2008-ல நிறைய பேர் கிட்ட மளிகை சாமான்கள் திரட்டி, ஒரு ஆதரவற்றோர் காப்பகத்துக்கு  கொடுத்தேன். அவங்களுக்கு அது ரொம்ப சந்தோஷத்த கொடுத்துச்சி. அதனால், மக்கள் கிட்ட கையேந்தி, மளிகைப் பொருட்கள், புதுத் துணிகளைத் திரட்டி, முதியோர், குழந்தைகள், ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சேன். என்னோட சில நண்பர்களும் சேர்ந்தாங்க.

ஏழை குழந்தைகளுக்கு உதவி

கொஞ்சம் பணம் சேத்து, அரசுப் பள்ளிக்கூடத்துல 10-வது வகுப்பு படிக்கற, ரொம்ப ஏழைக் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், பை, யூனிஃபார்ம்னு வாங்கிக் கொடுத்தோம்.

சில கல்யாணம் மற்றும் விஷேசங்களுக்குப் போகும் போது, எவ்வளவு சாப்பாட்ட வீணாக்குறாங்கனு பாத்தேன். ஒருபக்கம் சோறு இல்லாம தவிக்கற ஏழைங்க. இன்னொரு பக்கம் அதிக அளவு வீணாகும் சாப்பாடு. விசேஷங்கள்ல மீதமாகுற சாப்பாட்ட வாங்கிட்டுப் போய், பசியோட இருக்கறவங்களுக்குக் கொடுக்கணுமுன்னு முடிவு செஞ்சேன். 2010-ல `பசியாற சோறு'ங்குற அமைப்பை தொடங்கினேன். ஒரு ஆட்டோவ வாடகைக்கு எடுத்து, கல்யாணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழானு விசேஷம் நடக்குற மண்டபத்துக்குப் போய், மீதமாகுற சாப்பாட்ட வாங்கிப்போம். பக்கத்துல இருக்கற கிராமத்துக்குப் போய், ஏழைங்க, ஆதரவற்றவங்களுக்குக் கொடுப்போம். விசேஷ சாப்பாடுங்கறதால நிறைய பேர் ரொம்ப ஆவலோட வாங்கி சாப்பிடுவாங்க. காலையில 6 மணியில இருந்து நைட்டு 8 மணி வரைக்கும் சாப்பாட கலெக்ட் செஞ்சி, ஒரு மணி நேரத்துக்குள்ள கொடுத்துடுவோம்.

வாய்க்காபாளையம், ராமசெட்டிபாளையம், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவுனு பல ஊர்களுக்குப் போய் சாப்பாடு கொடுத்தோம். 2013-ல ஒருத்தர் ஆட்டோ வாங்கிக் கொடுத்தாரு. சினிமா டைரக்டர் விஜய்மில்டன் ஆட்டோவுக்கு டீசல் போட மாதம் ரூ.6 ஆயிரம் கொடுத்தாரு. அந்த ஆட்டோவுல 3 பக்கமும் உண்டியல் கட்டி, நாங்க இருக்கோம்னு எழுதிவைச்சோம். நிறைய பேரு அதுல பணம் போட்டாங்க. அதை வெச்சி நிறைய பேருக்கு உதவி செய்ய முடிஞ்சது.

மளிகை சாமான்கள்

ரொம்ப ஏழ்மையில இருக்கறவங்க குடும்பத்துக்கு, ரூ.4500 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுப்போம். அப்பா-அம்மா இல்லாத குழந்தைங்க, பிள்ளைங்களால கைவிடப்பட்ட முதியோருங்க, ஆதரவற்றவங்களுக்கு தீபாவளிக்கு புது டிரஸ் வாங்கிக் கொடுக்கறோம். கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு வாங்கித் தர்றோம்.

அங்கன்வாடி மூலமா தேர்வு செஞ்ச 22 நிறைமாத கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தியிருக்கோம்.

கோயம்புத்தூர்ல இருக்கற எல்லா மண்டபத்துக்கும் எங்க செல்போன் நெம்பர கொடுத்திருக்கோம். தினமும் 10 பேராவது கூப்பிட்டு, மீதமான சாப்பாட்ட கொடுக்கறாங்க. அதெல்லாம் கொண்டுபோய், பசியால வாடறவங்களுக்கு கொடுத்துடறோம். இன்னும் கிராமத்துல நல்ல சாப்பாட்டுக்கு ஏங்கறவங்க இருக்காங்க. வடை, பாயாசத்தோட சோறு கொடுக்கறதால, சந்தோஷமா வாங்கிக்கறாங்க.

சில கல்யாணங்கள்ல, முன்னாடியே கூப்பிட்டு 50 பேருக்கான சாப்பாட்ட கொடுத்து, `ஏன் மீதமான சாப்பாட்ட கொடுக்கணும். இதை எடுத்துக்கிட்டுப்போய் கொடுங்க`னு கொடுக்கறாங்க. அதேமாதிரி, சிலர் 10 பேருக்கு புதுத் துணி வாங்க பணம் கொடுத்து, புதுத்துணியோட கல்யாணத்துக்கு வரவழைச்சி, பந்தியில உட்காரவெச்சு சாப்பாடு போட்டு, மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்யச் சொல்லறாங்க. இதுமாதிரி நல்லவங்க இருக்கறதாலதான் இன்னமும் மழை பெய்யுதுங்க" என்றார் வெள்ளந்தியாக.

அணையாத அடுப்பு உருவாக்கணும்...

"ஒருமுறை, மனநலம் பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு சாப்பாடு கொடுத்தப்ப, அது எனக்கு ஊட்டிவிட்டுச்சி. அதேமாதிரி, ஒருமுறை ஆதரவற்ற ஒரு பாட்டிக்கு சோறு கொடுத்தப்ப, அத வாங்கிக்கிட்டு, எனக்கு ரூ.100 கொடுத்து, `இதுல சோறு வாங்கி, பட்டினி கிடக்கற யாருக்காவது சோறு வாங்கிக் கொடய்யா`னு சொன்னாங்க. தினமும் இந்த மாதிரி சம்பவங்களால கண்ணு கலங்குது.

சாப்பாடு இல்லாததால்தான் பலர் தவறான பாதைக்குப் போறாங்க. அதனால, ஒரு இடத்துல 24 மணி நேரமும் அணையாத அடுப்ப உருவாக்கி, சோறு சமைச்சி, பசியால வாடுற எல்லோருக்கும் கொடுக்கணும். அதுதான் என்னோட லட்சியம். என்னோட நண்பர்கள் ஐயப்பன், கணேசன், சுகம் ராஜா, ஜெகன் எல்லாம் ரொம்ப உதவியா இருக்காங்க. போன வருஷம் பிப்ரவரி மாசம் எங்கம்மா இறந்தாங்க. அவங்க உடலை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு, உடற்கூறுவியல் துறைக்கு ஒப்படைச்சேன். நானும் உடல்தானம் பதிவு செஞ்சிருக்கேன். இருந்தாலும் சரி, செத்தாலும் சரி, யாருக்காவது உதவியா இருக்கணுமுங்க" என்று கூறி நெகிழச் செய்கிறார் ராஜா சேதுமுரளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x