

சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக விதிமுறைகளை தளர்த்தக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதன் மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டிஜபி நியமனம் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை வகுத்தது குறிப்பாக டி.ஜி.பி பதவி காலம் முடியும் 3 மாதங்களுக்கு முன்பே அடுத்த டிஜிபி பெயர்களை யூபிஎஸ்சிக்கு ( UPSC)-க்கு பரிந்துரைக்க வேண்டும்.
மாநில சட்டம் ஒழுங்கு போலீஸ் துறைத் தலைவராக (டிஜிபி) தகுதியான, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளைத்தான் மாநில அரசுகள் நியமனம் செய்ய வேண்டும், இடைக்கால டிஜிபி நியமனம், ஓய்வு பெறும் நாளில் நியமனம் என்று யாரையும் பதவியில் அமர்த்தக் கூடாது என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவி காலம் வரும் ஜூன் மாதம் முடிய உள்ளது . எனவே அடுத்த சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யை நியமிக்க தகுதியான பெயர்களை 3 மாதத்துக்கு முன்பு பரிந்துரை செய்ய வேண்டும், அதற்கான அவகாசம் குறைவாக உள்ளது .
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வுச் செய்யப்படும் தகுதியுள்ள 2 ஆண்டுகள் பணி உள்ள டிஜிபிக்கள் யாரும் இல்லாத நிலை உள்ளது. ஒரு வருடம் பதவிகாலம் எஞ்சியுள்ள பல மூத்த அதிகரிகளே பதவியில் உள்ளனர்.
எனவே உச்சநீதிமன்ற உத்தரவை தளர்த்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கன்னா கோரிக்கை வைத்தார்.
ஆனால் உடனடியாக வழக்கை எடுத்துக்கொள்ள முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். மார்ச் முதல்வாரத்தில் 3 பேர் பேனலை அனுப்ப வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.