Last Updated : 10 Feb, 2019 11:25 AM

 

Published : 10 Feb 2019 11:25 AM
Last Updated : 10 Feb 2019 11:25 AM

அமராவதி அணைக்கு வரும் நீரை மணல் மூட்டைகளால் தடுத்து திருப்புவது சட்டவிரோதம்: விவசாயிகளின் குற்றச்சாட்டும்; அதிகாரிகளின் விளக்கமும்

அமராவதி அணைக்கு வரும் நீரை அணை போட்டு தடுத்து சிலர் மட்டும் பயன்பெறுவது சட்டவிரோதமானது என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணை மூலமாக 55 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. கடந்த சில நாட்களாக நீர் வரத்து இன்றி அணையின் பெரும்பகுதி நிலப்பரப்பு பாலைவனமாக காணப்படுகிறது.

இதற்கிடையே, அணையின் உட்பகுதியில் தடுப்பணை அமைத்து அணைக்கு வரும் தண்ணீரை திருப்பும் பணி நடைபெற்றுவருதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி எம்.எம்.வீரப்பன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

அணை 3 முறை நிரம்பி வழிந்தது. பாசனப் பரப்பிலும் மழைப்பொழிவு இருந்ததால், அதிக நீர் தேவைப்படவில்லை. புதிய வாய்க்காலில் திறக்கப்பட்ட நீர் உடுமலை, மடத்துக்குளம் பகுதி விவசாயிகளுக்கு பயன்படாமல் வீணானது. மழை நின்ற பின்பு, பாசனத்துக்கு தண்ணீர் விநியோகித்த நிலையிலும், அணையில் 70 அடி நீர் இருப்பு இருந்தது. ஆனால், சரியான திட்டமிடல் இன்றி வாய்க்கால் மற்றும் ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்பட்டது தேவையற்றது.

அதை இருப்பு வைத்திருந்தால், பழைய வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு 2-ம் போக நெல் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைத்திருக்கும். கடந்த சில நாட்களாக அணையின் உட்பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி, செயற்கையாக தடுப்பணை அமைத்து அணைக்கு வரும் நீரை திருப்பும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது தவறான நடவடிக்கை.

ராமகுளம், கல்லாபுரம் விவசாயிகளுக்கென அணையின் உட்பகுதியில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அணை கட்டும் போது ஏற்படுத்தப்பட்ட இந்த விதிமுறையை காரணம் காட்டி, அணைக்கு வரும் நீரை திசை திருப்புவது சட்டவிரோதமானது. இதை பொதுப்பணித் துறையினர் தடுக்க வேண்டும். காலத்துக்கு ஏற்ப இந்த விதிமுறையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

பெரும்பகுதி விவசாயிகள் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலையில், சிலருக்கு மட்டும் ஆண்டு முழுவதும் நீர் விநியோகம் என்பதை ஏற்க முடியாது. அணைப் பகுதிக்குள் தடுப்பணை அமைக்கக்கூடாது. இதுகுறித்து விவசாயிகள் குழு நேரில் ஆய்வு செய்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதுகுறித்து அணையின் செயற்பொறியாளர் தர்மலிங்கம் கூறும்போது, ‘அணை கட்டும்போது ஏற்படுத்தப்பட்ட விதிகளின்படி பழைய ஆயக்கட்டு விவசாயிகள், தண்ணீர் எடுத்துக் கொள்ள உரிமை உள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போது தண்ணீர் எடுக்கப்படுகிறது’ என்றார். உதவி செயற்பொறியாளர் சரவணன் கூறும்போது, ‘அணையின் உட்பகுதியில் பணிகள் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை.

வனப்பகுதிக்குள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தடை உள்ளது. தற்போது அணையில் இருந்து பழைய ஆயக்கட்டில் உள்ள விவசாயிகளுக்கு விதிமுறைகளின் படியே தண்ணீர் எடுக்கப்படுகிறது’ என்றார். மேலும், பொதுப்பணித் துறையினர் கூறும்போது, ‘அணை கட்டுவதற்கு முன் இருந்த அணையின் மூலமாக கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் வழியாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனால், புதிய அணை கட்டிய பின்பும் ஆண்டு முழுவதும் அணையில் இருப்பை பொருத்து தண்ணீர் விநியோகிக்க வேண்டும். மதகு மட்டத்தில் இருந்து 15 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே, அணைக்குள் இருக்கும் ராமகுளம் வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும். தற்போதைய நிலையில் அதற்கும் குறைவான அளவே தண்ணீர் உள்ளதால், கல்லாபுரம், ராமகுளம் பாசன விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கி அணைக்கு வரும் நீரை அந்த வாய்க்காலுக்கு திருப்பிவிட்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்துக்குப் பின், மேற்கண்ட விவசாயிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படியே தற்போது தண்ணீர் எடுக்கப்படுகிறது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x