

தஞ்சாவூரில் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்த ஆட்டோ ஓட்டுநர் இறந்து விட்டதால், கலங்கிய பள்ளிக் குழந்தைகள் அவரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தஞ்சாவூர் அருகே சுங்காந் திடல் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல்(44), ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது ஆட்டோவில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட குழந்தை களை பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.
இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 3-ம் வகுப்பு படிக்கும் தேஜாஸ்ரீ, 2-ம் வகுப்பு படிக்கும் ரித்திகாஸ்ரீ என இரண்டு மகள்களும் உள்ளனர்.
கதிர்வேல், ஆட்டோவில் வரும் குழந்தைகளை தன் சொந்த குழந்தைகள் போலவே கவனித்து கொள்வாராம். எப்போதும் மாணவர்களை குறித்த நேரத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றுவிடுவாராம். வருமானத்துக்காக அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றி செல்லாமல், குறிப்பிட்ட அளவிலான குழந்தைகளையே தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வாராம். மேலும், சக ஆட்டோ ஓட்டு நர்கள் ஆட்டோவில் அதிகமான குழந்தைகளை ஏற்றி சென்றால், பிள்ளைகளை குப்பை மாதிரி ஏத்திகிட்டு போகாதீங்க என கண்டிப்பாராம்.
அடம் பிடிக்கும் குழந்தை களை சாக்லேட் கொடுத்து சமாதானம் செய்து பள்ளிக்கு அழைத்து செல்வாராம். இதனால் அவரது ஆட்டோவில் செல்லும் குழந்தைகள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர் வரை அனைவரி டமும் நன் மதிப்பை பெற்று இருந்துள்ளார்.
கதிர்வேல் கடந்த 2 மாதங் களுக்கும் மேலாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்குக்கு நேற்றுமுன்தினம் அவரின் உறவினர்கள், நண்பர்கள் தயாராகி கொண்டிருந்த நிலை யில், கதிர்வேலின் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று வந்த குழந்தைகள் அனைவரும், பள்ளி சீருடையிலேயே அஞ்சலி செலுத்த வந்தனர்.
அப்போது, ஒரு குழந்தை கண்ணீர் விட்டு “டிரைவர் அங்கிள் நாங்க எல்லோரும் வந்திருக்கோம் கண் திறந்து பாருங்க” என கதறினார்.
சில குழந்தைகளின் பெற்றோர்களும் அஞ்சலி செலுத்தினர். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.