

தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என அறிவிக்காத நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் கடந்த வாரம் சென்னை வந்தார். அப்போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தங்களுடன் கூட்டணி வைக்க தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வந்த மத்திய ரயில்வே துறை அமைச்சரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல், அதிமுக தலைமையிலான கூட்டணியை அறிவித்தார். அதன்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட்டும், பாஜகவுக்கு 5 நாடாளுமன்றத் தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டணி அறிவிக்கப்பட்டதையடுத்து பியூஷ் கோயல், விஜயகாந்தின் இல்லத்துக்குச் சென்றார். அதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்கவே அங்கு சென்றதாக பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார். ஆனால், தேமுதிகவின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள எல்.கே.சுதீஷிடம் பியூஷ் கோயல் மறைவாகப் பேசும் புகைப்படம் வெளியானது. அதனால், தேமுதிகவுடன் கூட்டணி அமைவதில் இழுபறி நீடிக்கிறது. தேமுதிக 7-8 இடங்களைக் கேட்பதால், இழுபறி நீடிப்பதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகளுடன் விஜயகாந்த், இன்று (வியாழக்கிழமை)சாலிகிராமத்தில் உள்ள தமது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அதில் பொருளாளர் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்தார். முன்னதாக, விஜயகாந்தின் உடல் நலம் குறித்து கேட்க வந்ததாக திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதில் மகிழ்ச்சி. முழுமையாக குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நாங்கள் இருவரும் அரசியல் தலைவர்கள். தேர்தல் நேரத்தில் சந்தித்திருக்கிறோம். அதனால், நாங்கள் அரசியல் பேசவில்லை என சொன்னால் அது பொய்யாக இருக்கும். நாட்டு நலனுக்கேற்ற வகையில் முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும் என விஜயகாந்திடம் கூறினேன் அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்றார், திருநாவுக்கரசர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது.