

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் இழந்த இரண்டு கைகளையும் பெற்ற தொழிலாளி நாராயணசாமி, முழுமையாக சிகிச்சை முடிந்து தனது கிராமத்திற்கு திரும்பியுள்ளார். இதற்கு முழுமுயற்சியுடன் தன்னம்பிக்கை தந்தது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே போடிகாமன்வாடியை சேர்ந்த ராமசாமி மகன் நாராயணசாமி(30). 10-ம் வகுப்பு வரை படித்த இவர், கட்டிட வேலைக்கு சென்று வந்தார். ஆத்தூர் அருகே சித்தையன்கோட்டை கிராமத்தில் கடந்த 2015 அக்டோபர் 8-ம் தேதி கட்டிட வேலையில் சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது உயர்அழுத்த மின்சாரம் தாக்கியதில் நாராயணசாமியின் இரண்டு கைகளும் கருகின. இதற்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரண்டு கைகளையும் அகற்றினால் உயிர் பிழைக்கமுடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாராயணசாமி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். வேறுவழியின்றி இரண்டு கைகளையும் டாக்டர்கள் அகற்றினர்.
சிகிச்சை முடிந்து திரும்பி நாராணயசாமி எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டில் இருந்துள்ளார். குடும்பத்திற்கு உழைக்க வேண்டிய இந்த வயதில் குடும்ப உறுப்பினர்களுக்கு பாரமாக உள்ளோமே என்ற மனவேதனையில் இருந்த நாராயணசாமிக்கு ஊக்கமளித்து வந்த உறவினர்கள், நண்பர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறைகொண்டு பல்வேறு முகாம்கள் நடத்துவதாகவும், செயற்கை உறுப்புகள் பெற்றுத்தருவதாகவும் அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தால் ஏதேனும் உதவி செய்வார் என்றும் கூறியுள்ளனர்.
தன்னம்பிக்கை தந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்:
இதையடுத்து நாராயணசாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையையும், தனது நிலைமையையும் எடுத்துக்கூறியுள்ளார்.
உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார் ஆட்சியர். தொடர்ந்து கைகளை பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் சரிசெய்ய உதவுவதாகவும் வாக்குறுதியளித்தார். இதற்கிடையில் நாராயணசாமியின் குடும்பநிலையை பார்த்து அவருக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க உத்தரவிட்டார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதை கேள்விப்பட்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மருத்துவர்களுடன் தொடர்புகொண்டு நாராயணசாமியின் நிலைமையை எடுத்துரைத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மருத்துவக்குழுவினர் வெற்றிகரமாக கை ஒட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து நாராணசாமிக்கு மீண்டும் இழந்த இரண்டு கைகளையும் கொடுத்துள்ளனர். தொடர்ந்து சென்னையில் ஓராண்டாக மருத்துவர்கள் பராமரிப்பில் இருந்த நாராயணசாமி, முழுமையாக குணமடைந்தவுடன் ஊருக்கு திரும்பியுள்ளார். இவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணிக்கான நியமன ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி ஊருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இதுகுறித்து இரண்டு கைகளையும் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் பெற்ற நாராயணசாமி கூறியதாவது:
சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவுடன் முதலில் போன் செய்தது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்க்கு தான். காரணம் நான் மீண்டு வந்ததற்கு காரணம் அவர்தான். இரண்டு கைகளையும் இழந்த பின் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணினேன். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்தபின் அவர் கொடுத்த தன்னம்பிக்கையால் தற்கொலை எண்ணத்தை கைவிட்டேன். மாற்றுத்திறனாளி உதவித்தொகை, குடியிருக்க பசுமைவீடு என வழங்கி நம்பிக்கை தீபம் ஏற்றினார்.
அதன்பின் சந்திக்கும்போது கவலைப்படாதே உனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைத்துதர நடவடிக்கை எடுத்துவருகிறேன் என உறுதியளித்தார். அவர் சொன்னபடி கை ஒட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயற்சி மேற்கொண்டு அதை நிறைவேற்றியும் தந்துள்ளார். தமிழக முதல்வர் எனக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணிக்கு ஆணை வழங்கியுள்ளார்.
நான் இயல்பு நிலைக்கு திரும்ப காரணமாக மருத்துவர்கள் அனைவருக்கும், முயற்சி மேற்கொண்ட திண்டுக்கல் ஆட்சியர், எனக்கு பணிவழங்கிய தமிழக முதல்வர் அனைவருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், என்றார்.