Last Updated : 25 Feb, 2019 08:30 AM

 

Published : 25 Feb 2019 08:30 AM
Last Updated : 25 Feb 2019 08:30 AM

கலப்படத்தால் மதிப்பிழக்கும் சேலம் ஜவ்வரிசி?

தமிழகத்தில் கல்யாணம், காது குத்து தொடங்கி,  அனைத்து விசேஷங்களிலும் உணவுடன் தவறாமல் இடம்பிடிப்பது பாயாசம்  என்றால் மிகையில்லை.  பாயாசம் என்றாலே நினைவுக்கு வருவது ஜவ்வரிசி. வெண்மை நிறத்தில், சிறிய உருண்டை வடிவில் தயார் செய்யப்படும் ஜவ்வரிசியால் தயாரிக்கப்படும் பாயாசத்தின் சுவையே அலாதிதான்.எனினும், தமிழகத்தைக் காட்டிலும்,  மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில்தான் அதிக அளவில் ஜவ்வரிசியைப் பயன்படுத்துகின்றனர். நேரடி உணவாகவே ஜவ்வரிசி பயன்படுத்தப்படுகிறது. ஜவ்வரிசையை வேக வைத்து, உப்புமா, எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது வட மாநிலத்தவரின் வழக்கம்.

ஜவ்வரிசி தயார் செய்யப்  பயன்படுத்தப்படும் மரவள்ளிக் கிழங்கு வட மாநிலங்களில் அதிகம் விளைவதில்லை. எனவே,  தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசியை கொள்முதல்

செய்து, வட மாநிலங்களுக்குக் கொண்டு செல்கின்றனர். தமிழகத்தில் கணிசமான பரப்பில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மரவள்ளி சாகுபடி நடைபெறுகிறது.

இதை மையப்படுத்தி, இரு மாவட்டங்களிலும் ஏராளமான சேகோ (ஜவ்வரிசி) ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப் படும் ஜவ்வரிசியையே, வட இந்திய மக்கள் அதிகம் பயன்படுத்துவதாக  ஜவ்வரிசி உற்பத்தித் தொழிலில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில்,  மக்காச்சோள மாவு கலப்படம் காரணமாக ஜவ்வரிசி உற்பத்தித் தொழில் கடும் சரிவைக் கண்டுள்ளதாகவும் புகார்கள் எழுகின்றன.

இது தொடர்பாக சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சேகோ ஆலை உரிமையாளரும், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர் சங்க மாநில நிர்வாகியுமான எஸ்.வெற்றிவேல் கூறும்போது, “தமிழகம் முழுவதும் மரவள்ளி சாகுபடி நடைபெறுகிறது. என்றாலும், சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி மாவட்டங்களில்தான், மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் சேகோ ஆலைகள் அதிக அளவில் அமைந்துள்ளன.

குறிப்பாக, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 340 சேகோ ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் மரவள்ளிக் கிழங்கு மூலம் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி மற்றும்  கிழங்கு மாவு (ஸ்டார்ச்) ஆகியவை, சேலத்தில் உள்ள  `சேகோ சர்வ்` கூட்டுறவு நிறுவனம் மூலம் வட மாநிலங் களுக்கு அனுப்பிவைக்கப் படுகிறது. வட மாநிலங்களில் பயன்படுத்தப்படும் 90 சதவீதம் ஜவ்வரிசி, இங்கிருந்துதான் அனுப்பப்படுகிறது. ஆந்திராவில் இருந்து 10 சதவீதம் அளவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த தொழில் மூலம் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்” என்றார். “மக்காச்சோள மாவு கலப்படம் செய்வதால், இத்தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறதே” என்று அவரிடம் கேட்டோம். “ஆமாம், அது உண்மைதான். கலப்படப்  பிரச்சினை காரணமாக ஜவ்வரிசிக்கு உரிய விலை கிடைக்காத நிலை உருவானது. இதனால், பாதிக்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. தற்போது நிலைமை கொஞ்சம் சீரடைந்து வருகிறது. இதேநிலை நீடித் தால், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் பயனடைவதுடன்,  மரவள்ளி விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்கும்”  என்றார். கலப்பட பிரச்சினைக்கான தீர்வு குறித்து நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர்

ஆ.புஷ்பராஜ் கூறும்போது, “நாமக்கல் மாவட்டத்தில் 172 சேகோ ஆலைகள் இருந்தன. தற்போது 20 ஆலைகள் மட்டுமே உள்ளன. இதற்கு முக்கியக் காரணம் மக்காச்சோளம் கலப்படம்தான். மக்காச்சோள கலப்படத்தால் ஜவ்வரிசி உற்பத்தி அதிகரித்தது.

சேலம் சேகோ சர்வில் ஜவ்வரிசி இருப்பு அதிகமானதால், விலை வீழ்ச்சியடைந்தது. தொடர் தடுப்பு நடவடிக்கைகளால் மக்காச்சோள கலப்படம் குறைந்துள்ளது” என்றார்.

மரவள்ளிக் கிழங்கு செடி...

தமிழகத்தில் மரவள்ளி கிழங்கை, குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, கப்பக் கிழங்கு என்றெல்லாம் அழைக்கிறார்கள். மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி, மாவு (ஸ்டார்ச்) தயாரிக்கப்படுவதுடன், சிப்ஸும் தயாரிக்கப்படுகிறது.

சோளம், அரிசியை அடுத்து,  அதிக அளவு கார்போஹைட்ரேட் கொண்டுள்ளது மரவள்ளிக் கிழங்கு. பல்வேறு தொழில்களில் மரவள்ளிக் கிழங்கு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

மரவள்ளி கிழங்கு சிறிய செடி வகைத் தாவரமாகும். இந்தச் செடி 3 முதல் 5 மீட்டர் உயரம் வரை வளரும். விசிறி போன்ற பச்சைநிற இலைகளைக் கொண்டுள்ள இந்தச் செடியில்,  தண்டுப்பகுதி உறுதியாக வும், சிவந்த பழுப்புநிற மரப்பட்டைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கும். மரவள்ளிக் கிழங்கு செடியின் வேர்ப்பகுதியில் கிடைக்கிறது. இந்தக் கிழங்கு சுமார் 1-4 அங்குலம் விட்டம், 8-15 அங்குல நீளமுடன் காணப்படும்.

கிழங்கின் நடுப்பகுதி பருத்தும், இருமுனைப்பகுதியும் குறுகியும் காணப்படும். கிழங்கின் மேல்தோல் தடிமனாக,  சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். கிழங்கின் உட்பகுதியானது வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் கெட்டியாக இருக்கும். இந்தக் கிழங்கு லேசான இனிப்புடன் கூடிய,  தனிப்பட்ட சுவையைக் கொண்டது.

இந்த செடி,  யூஃபோர்பியேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் மோனிகாட் எஸ்குலண்டா. மரவள்ளி செடி, வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் செழித்து வளரும். மரவள்ளி செடியின் பருத்த தண்டை வெட்டி  நடவு செய்து, பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தக் கிழங்கை  சமைத்தே உண்ண வேண்டும்.

கோயில்களில் பிரசாதமாக விநியோகிக்கப்படும் ஜவ்வரிசி

சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி நலச் சங்கத் தலைவர் எஸ்.சிவக்குமார் கூறும்போது, “வட இந்தியாவில் ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை நவராத்திரி விரதம் அனுஷ்டிப்பார்கள். அந்த நாட்களில் ஜவ்வரிசி மூலம் தயார் செய்யப்பட்ட உணவையே சாப்பிடுவர்.  பல வகைகளில்

ஜவ்வரிசியை  வட இந்திய மக்கள் உணவாகப் பயன்படுத்துகின்றனர். பண்டரிபுரம் பாண்டுரங்கநாதர், ஷீரடி சாயி பாபா கோயில்களில் ஜவ்வரிசி மூலம் தயார் செய்யப்படும் உணவே பிரசாதமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஜவ்வரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும்,  இதை மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை. சத்து மிகுந்த மரவள்ளிக் கிழங்கு சார்ந்த உணவு வகைகள் தொடர்பாக  மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மரவள்ளியில் இருந்து ஜவ்வரிசி மட்டுமின்றி,  கிழங்கு மாவு தயாரித்து, அதில் பெயின்ட், மருந்துப் பொருட்கள் தயாரிக்கவும், ஜவுளி உற்பத்தி நிறுவனங்களிலும் பயன்படுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x