

தனது வழித்தடத்தை மறக்க முடியாமல் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை மீட்டு முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம் போன்ற வனக்காப்பகப் பகுதிகளுக்குள் விடும்போது அவை புதிய வனப்பகுதிக்குள் தங்களைப் புகுத்திக் கொள்வதே வழக்கமாக இருந்துள்ளது.
ஆனால், வனப்பகுதியில் விட்டும்கூட மீண்டும் ஊருக்குள் வந்து சுற்றும் சின்னதம்பியின் செயல்பாடு முற்றும் வித்தியாசமாக தனித்துவமாக இருக்கிறது என்கின்றனர் கால்நடை மருத்துவர்களும் வனத்துறையினரும்.
'சின்னதம்பி' என்று வனத்துறையினரால் பெயரிடப்பட்டு அழைக்கப் படும் காட்டு யானையை உடுமலை வனத்துக்குள் விரட்டுவதற்கு தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.
கோவை சின்ன தடாகத்தில் கடந்த 28-ம் தேதி பிடிக்கப்பட்டு, டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை மீண்டும் ஊருக்குள் ஊடுருவி உலா வருகிறது. 29-ம் தேதி உலாந்தி, 30-ம் தேதி மானாம்பள்ளி, 31-ம் தேதி கோட்டூர், பிப்-1-ம் தேதி தீபாலப்பட்டி, 2-ம் தேதி அமராவதி சர்க்கரை ஆலை வளாகம் என சுமார் 150 கி.மீ. தொலைவை கடந்து தவித்து வருகிறது.
இந்நிலையில், சின்னதம்பியின் செயல்பாடு முற்றும் வித்தியாசமாக தனித்துவமாக இருக்கிறது என்கின்றனர் கால்நடை மருத்துவர்களும் வனத்துறையினரும்.
வனத்துறையினர் கூறும்போது, இதுவரை ஊருக்குள் புகுந்ததால் பிடிக்கப்பட்டு வனத்துக்குள் விடப்பட்ட எந்த ஒரு காட்டுயானையும் இப்படியொரு தனித்துவமான குணாதிசயத்தை வெளிப்படுத்தவில்லை. ஜனவரி 31-ம் தேதி தொடங்கி இன்றுவரை பொதுமக்கள் வசிப்பிடத்திலேயே சுற்றித் திரிகிறது சின்னதம்பி.
வனத்துறையின் மூத்தகால்நடை மருத்துவர் ஒருவர் கூறும்போது, "சின்னதம்பி மக்கள் வாழும் இடங்களில் வசிக்கவே விரும்புகிறது. பசுமையான வனப்பகுதியில் விட்ட பின்னரும்கூட அது மீண்டும் ஊர்ப்பகுதிக்கு திரும்பும்போதும் தனித்துவமானது" என்றார்.
2016-ல் இருந்து இதுவரை..
2016-ம் ஆண்டில் இருந்து இதுவரை 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு காப்பக பகுதிகளுக்குள் விரட்டப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
2017 ஜூன் மாதம், 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஆனைமலை காப்பகத்துக்குள் அனுப்பப்பட்டது. அதற்கு முன்னதாக கோவையில் உலா வந்த பதின்ம வயது யானை ஒன்றும் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டது. இவை இரண்டும் புதிய வனப்பகுதியில் தங்களை புகுத்திக் கொண்டன.
நீலகிரி, கோவை பகுதிகளிலிருந்து மட்டும் 3 யானைகள் முதுமலை வனப் பகுதிக்குள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த டிசம்பரில் தடாகம் பகுதியிலிருந்து விநாயகம் முதுமலை வனக் காப்பகத்துக்குள் அனுப்பப்பட்டது.
2016-ல் கூடலூர் வனப்பகுதியிலிருந்து 18 முதல் 20 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று முதுமலையில் விடப்பட்டது. கேரளாவின் வயநாடு பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட யானை ஒன்றும் முதுமலையில் இருக்கிறது. முதுமலையில் இப்படியாக ஏற்கெனவே மூன்று ஆண் யானைகள் வனத்துறையினரால் அனுப்பப்பட்டுள்ளன.
சரியான முடிவு அல்ல..
முதுமலை வனக் காப்பக பகுதிக்குள் டிசம்பரில் விநாயகத்தின் போக்கை இன்னும் 6 மாதங்களாவது கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் அதனை இடம்பெயர்வு செய்வதற்கான பலன் என்னவென்பது தெரியும். முதுமலையில் ஏற்கெனவே மூன்று ஆண் யானைகள் வனத்துறையினரால் அனுப்பப்பட்டுள்ளன.
இப்போதைய சூழலில் முதுமலை வனக் காப்பக பகுதியில் சின்னதம்பியை அனுப்புவது சரியான முடிவாக இருக்காது எனக் கூறுகின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
அண்மையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் சின்னதம்பி திரிந்தபோது அதன் உடல்நிலையைக் கண்டறிய அங்கு சென்ற மருத்துவக் குழுவினரும் சின்னதம்பி ஆரோக்கியமாக இருக்கிறது ஆனால் அதற்கு ஓய்வு தேவை என்றனர்.
சின்னதம்பியின் தனித்துவமான இந்த குணம் இயற்கை விடும் சவால்.