

அயோத்தியில் ராமர் கோயில் எழுப்ப பாஜக தீவிரம் காட்டி வருவது, மதக்கலவரத்தை உண்டாக்கி வெற்றி பெறும் தந்திரம் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது; உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் கல்யாண்சிங் துரோகமும், ராணுவம் நிறுத்தப்பட்டிருந்தாலும்கூட, அவர்களை செயல்படாமல் செய்த அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் மறைமுக ஒத்துழைப்புமே இதற்குக் காரணம்.
மண்டல் பரிந்துரை அமலாக்கத்தினை எதிர்க்கும் ஆயுதமே!
மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் ஒன்றான 27 சதவிகித வேலைவாய்ப்பினை மத்திய அரசு நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு அளித்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசின் ஆட்சியைக் கவிழ்த்ததோடு, 'கமண்டலை' - மண்டலுக்கு எதிரான ஆயுதமாக - ஆர்எஸ்எஸ் பரிவார் அமைப்புகள் பயன்படுத்தின.
பாபர் மசூதி இடித்ததின் விளைவுதான் உலகில் பயங்கரவாதம் பற்பல நாடுகளிலும் மற்ற மதங்களிலும் தீவிரவாதிகளான பின்லேடன் போன்றவைகளைத் தோற்றுவிக்க அமைந்த காரணங்களாகும். விதை இங்கே போடப்பட்டது; வன்முறை பயங்கரவாதம் உலகமயமானது - அமெரிக்க 'இரட்டை கோபுர' இடிப்புக்குப் பின்!
பெரியார் பிறந்த தமிழ் மண்ணே அமைதி காத்தது!
பாபர் மசூதி இடிப்பினால் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டு, இந்தியாவில் பெரியார் மண்ணான தமிழ்நாடு மட்டும்தான் மதக்கலவரம் வெடிக்காத அமைதிப் பூங்காவாகவே திகழ்ந்து வருகிறது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மூன்று தரப்பினர் வழக்குத் தொடுத்தனர். பாபர் மசூதி இடிப்பு - மீண்டும் ராமன் கோயில் கட்டுதல் பற்றிய வழக்குகளில் தீர்ப்பு தரப்பட்டாலும், வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினருமே அலகாபாத் தீர்ப்புகளை ஏற்காமல், அதிருப்தியுடன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
பிரச்சினைக்குரிய நிலத்தை கேட்பதன் பின்னணி என்ன?
வழக்கு முடியும் வரை விவகாரத்திற்குட்பட்ட நிலப்பரப்பு, பக்கத்தில் 67.4 ஏக்கர் நிலம் முழுவதும் 'தற்போது உள்ளபடியே' பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். பிரச்சினைக்கு உள்ளாகாத பகுதி வரையிலான நிலத்தை உண்மையான நிலச் சொந்தக்காரர்களுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை இப்போது மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டு வாதாடுகிறது.
இதில் சூட்சமம், சூது, சூழ்ச்சி புரிகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையே புறந்தள்ளி, திடுதிப்பென்று ஒரு சிறு பொம்மை சிலையை பூட்டை உடைத்து உள்ளே வைத்து வழிபாடு நடத்தி, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினர். இதன் காரணமாக ராமன் கோயில் கட்டும் பிரச்சினையைச் சிக்கலாகியது.
42 ஏக்கர் பூமி நிலத்தில் ராமன் கோயில் கட்டத் திட்டமிட்டு, கிளர்ச்சி நடத்தி, பண வசூல் செய்யப்பட்டது. இப்போது அந்த நிலத்தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கிறது மோடி அரசு; அதற்கு ஆதரவு தரும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் ராமஜென்ம பூமி நிவாசுக்குத் திருப்பித் தரும்படி உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகிறது.
இதன் உள்நோக்கம் என்ன? அந்த நிலத்தைப் பெற்று அங்கேயே ராமன் கோயில் கட்டுமானத்தை - அவசர அவசரமாக நடத்திட திட்டம்! முன்பு இரவோடு இரவாக ராம்லாலா சிலை வைப்பு, பாபர் மசூதி இடிப்பு நடத்தியதுபோலவே, நடத்திட மறைமுகமாக ஆழமான ஒரு திட்டத்தை திரைமறைவில் உருவாக்கி வைத்துள்ளனர்.
பிப்ரவரி 21 இல் அடிக்கல் நாட்ட திட்டம்!
இந்த 42 ஏக்கர் பூமி - முன்பு கல்யாண் சிங் அரசிடமிருந்து குத்தகைக்கு பெறப்பட்டதாகும். அந்தக் குத்தகையை மறுபரிசீலனை செய்வதற்கான வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது என்பதும் நினைவூட்டப்பட வேண்டிய செய்தி.
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்பே, அதை சிறிதும் மதிக்காமல், தாங்களே ராமன் கோயில் கட்டுவோம் என்று பழைய அலகாபாத்தில் கும்பமேளாவில் சாமியார்கள் கூடி முக்கிய முடிவெடுத்துள்ளனர். மதுரா பீடாதிபதி சொரூபானந்தா சரசுவதி வரும் 21 ஆம் தேதி அடிக்கல் நாட்டிட, ஒரு முன்னோட்ட முயற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
மதக் கலவரம் செய்து ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சி!
இதனால், மதக்கலவரம் வெடிக்கும் பேரபாயம் உள்ளது; கலவரம் வெடித்தால், 2019 தேர்தலில் ராமன் கோயில் பிரச்சினையை வைத்தே தாங்கள் இந்து வாக்கு வங்கியை உருவாக்கி, மீண்டும் வெற்றி பெறலாம்; மற்ற அனைத்துத் துறைகளிலும் தோல்வியுற்ற மோடி அரசு - இதை வைத்து வெற்றி பெறத் தீட்டப்பட்டுள்ள திட்டம்தான் இந்த ராமன் கோயில் கட்டும் அவசரத் திட்டம்! இது உச்ச நீதிமன்றத்தையே மதிக்காத அலட்சியப்படுத்தும் செயல் - அரசியல் சட்ட விரோத நடவடிக்கையே!
பாசிச பாஜகவை வீழ்த்த வாக்காளர்கள் உறுதிகொள்க!
இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மோடி அரசும், அமைச்சர்களும் அப்பட்டமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காது மிதிப்பதுபோல நடந்துகொள்கின்றனர். சபரிமலைக் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை செயல்படுத்தும் கேரள அரசினை, பிரதமர் மோடியே கண்டித்துப் பேசுகிறார் - வேலியே பயிரை மேய்வதுபோல!
இதையெல்லாம் வாக்காளர்களும், ஜனநாய சக்திகளும் புரிந்து, ஓரணியில் திரண்டு இந்த பாசிச, எதேச்சதிகாரப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டியது அவசரம், அவசியம்" என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.