Published : 11 Sep 2014 08:22 PM
Last Updated : 11 Sep 2014 08:22 PM

சரக்கு,சேவை வரி மசோதா தாக்கலுக்கு முன் கருத்தொற்றுமை அவசியம்: ஜெயலலிதா

நாடாளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பாக, மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும் எனக்கோரி மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா எழுதிய கடித விவரம் வருமாறு:

தங்களை கடந்த ஜூன் 6-ம் தேதி சந்தித்தபோது, உத்தேசிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர்பாக ஏற்படக்கூடிய நிதிரீதியிலான சில முக்கிய பிரச்சினைகளைப் பற்றிய கோரிக்கை கடிதத்தைக் கொடுத்திருந்தேன். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் சுட்டிக்காட்டிய சில குறைகளைக் களைந்து ஒரு வரைவு மசோதா அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

அதில், மது உள்ளிட்ட சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதுதவிர, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற்ற மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட குழுக் கூட்டத்தில், உச்சபட்ச வரி ரூ.10 லட்சத்துக்கு மிகாமல் இருப்பது உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருப்பதும் எனது கவனத்துக்கு வந்தது.

இதுதவிர, அந்தந்த மாநிலத்தில் உற்பத்தியாகும் முக்கிய சரக்குகளுக்கு விலக்கு அளிக்க அந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட வேண்டும். மேலும் ரூ.1.5 கோடி வரை உள்ளூரிலோ, வெளி மாநிலங்களிலோ வர்த்தகம் மேற்கொள்ளும் வணிகர்களிடமிருந்து வரிவசூலிக்கும் உரிமை மாநிலங்களுக்கு மட்டுமே தரப்படவேண்டும். மாநில அரசுகளின் நிதி ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் முடிவையும் கைவிடவேண்டும்.

வரைவு மசோதாவில், புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் மீது மத்திய அரசு விதிக்க உத்தேசித்துள்ள அதிக வரி விகிதத்தைப் போல், அவற்றின் மீது மாநில அரசுகள் அதிக வரிவிதிக்க அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், உற்பத்தி ஆகும் இட வரிவிதிப்புக்கு பதிலாக, சென்று சேரும் இடத்தில் வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படும்போது உற்பத்தியில் சிறந்து விளங்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்.

மேலும் கேளிக்கை வரி, வாகன நுழைவு வரி போன்றவற்றிலும் பெரும் இழப்பு ஏற்படும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில், மாநிலங்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பல்வேறு வருவாய் இழப்புகளை சரிசெய்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்படவேண்டும். அதற்கான வழிவகைகளை அரசியல் சாசனத்திலேயே இடம்பெறச் செய்யவேண்டும்.

எனவே, ஜிஎஸ்டி வரி தொடர்பான அரசியல் சாசன சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாக, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பையும் கருத்தில் கொண்டு, அவர்களின் அச்சத்தைப் போக்கும்வகையில் மாநிலங்களுக்கிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x