

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக, வெளியான செய்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மறுத்துள்ளார். திமுக பாமகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானதையடுத்து, விசிக அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி வெளியானது. ஆனால், அதனை திருமாவளவன் மறுத்துள்ளார்.
"அமமுகவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவதாக வந்த செய்திக்கு எந்த அடிப்படையும் இல்லை. இதுகுறித்து, மாலை நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானவுடன், எங்கள் கட்சி தொண்டர்களின் மனதில் உள்ள குழப்பத்தை நீக்க நான் முகநூலில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டேன்" என 'தி இந்து'விடம் திருமாவளவன் கூறினார்.
மேலும், "சொல்லப்போனால், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க முடியாத நிலைமையின் காரனமாக, திமுக தலைவர்களிடம் அக்கட்சியின் நலனை மனதில் வைத்து முடிவுகளை எடுக்குமாறு நான் கூறினேன்" என்கிறார், திருமாவளவன். அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருப்பது, திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என திருமாவளவன் தெரிவித்தார்.
"மத்தியில் பாஜகவும் மாநிலத்தில் அதிமுகவும் ஆட்சியில் இருக்கிறது. அதனால், அரசுக்கு எதிரான மனநிலை இந்த இரு கட்சிகளுக்கும் எதிராக செயல்படும். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை இருந்தது. ஆனால், தற்போது அவருக்கு எதிரான அலை உள்ளது. மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள், வாக்களிக்கும் திறன் கொண்ட பிரபலமான தலைவர்களைக் கொண்டிருக்கவில்லை" என திருமாவளவன் தெரிவித்தார்.
தனித்தொகுதியான சிதம்பரத்தில் திருமாவளவன் நான்கு முறை போட்டியிட்ட நிலையில், ஒரு முறை வென்றிருக்கிறார். இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட திருமாவளவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
"ஆனால், திமுக தலைமை என்ன முடிவெடுக்கிறது என்பதை பார்ப்போம்" என்கிறார், திருமாவளவன்.