Published : 07 Feb 2019 10:17 AM
Last Updated : 07 Feb 2019 10:17 AM

குடியரசு தினவிழா முகாமில் பதக்கங்களை குவித்த கோவை என்.சி.சி. மாணவர்கள்

புதுடெல்லியில் நடந்த குடியரசு தினவிழா முகாமில் கோவை என்சிசி மாணவர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தனர்.

நாட்டின் 70-வது குடியரசு தினவிழா புதுடெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி வெகுவிமரிசையாகக் கொண்டாடப் பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) 18 இயக்குநரகங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு புதுடெல்லியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகள் கடந்த ஜன. 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனர்.

முகாமில், கர்நாடக அணி முதலிடம் பிடித்தது. 2-வது இடத்தைப் பிடித்த தமிழக அணிக்கு பதக்கங்கள், பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்த அணியில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றனர்.

இவர்களில் கோவை என்.சி.சி. மாணவர்கள் 60 சதவீதம் பேர் கலந்து கொண்டனர். இவர்கள் பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

தமிழக அணியில் இடம் பெற்றிருந்த கோவை மாணவர்கள், ரயில் மூலம் கோவையை வந்தடைந்தனர். அவர்களுக்கு தேசிய மாணவர் படை கோவை யூனிட் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர். பின்னர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் தங்கள் மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

மாணவர் பரம்வீர் ஸ்ரிங்கா கூறும்போது, ‘‘குடியரசு தினவிழா முகாமில் கடந்த ஜன. 1-ம் தேதி இணைந்தோம்.

அணிவகுப்பில் பங்கேற்பவர்களை பலகட்ட சோதனையின் மூலம் தேர்வு செய்தனர். அதிகாலை 2 மணிக்கு தயாராகி ராஷ்டிரபதி பவன் முதல் டெல்லி நுழைவுவாயில் வரை துப்பாக்கியை ஏந்தியவாறு அணிவகுப்பு செய்தோம். அதிகாலை 7 மணி வரை இப்பயிற்சி நடைபெற்றது. பின்னர் மாலையில் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் பயிற்சி நடைபெறும். அதில் சிறப்பாக செயல்பட்டவர்கள் குடியரசு தினவிழா அணிவகுப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒருவனாக நான் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது,’’ என்றார்.

மாணவி குந்தவி கூறும்போது, ‘‘கடந்த 2 ஆண்டுகளாக தேசிய மாணவர் படையில் உள்ளேன். இம்முகாமில் ஏர் விங் பிரிவில் பங்கேற்றேன். துப்பாக்கி சுடுதல், குழு விவாதம், கலாச்சார போட்டிகளில் முதலிடம் பிடித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டின் மிகப்பெரிய விழாவில் நானும் பங்கேற்றது பெருமையளிக்கிறது,’’ என்றார்.

தேசிய மாணவர் படை அதிகாரி கர்னல் பீட்டர் செலஸ்டின் கூறியதாவது:

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய தேசிய மாணவர் படை கோவை யூனிட்டில் 283 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 23 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

70 சதவீதம் பேர் பள்ளி மாணவர்கள், 30 சதவீதம் பேர் கல்லூரி மாணவர்கள். கடந்த 4 ஆண்டுகளாக கோவை யூனிட்டின் செயல்பாடு நன்றாக உள்ளது.

குடியரசு தின முகாம், ராணுவ முகாம், விமானப்படை முகாம், துப்பாக்கி சுடுதல் முகாம் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குடியரசு தினவிழா முகாமில் தமிழகத்துக்கு 2-வது இடம் கிடைத்தது. 6 குழுக்கள் இடம் பெற்றன. அதில் இடம் பெற்ற 60 சதவீதம் பேர் கோவையைச் சேர்ந்தவர்கள். 4 முறை முதல்வர் கோப்பையை கோவை யூனிட் வென்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x