Last Updated : 22 Feb, 2019 12:23 PM

 

Published : 22 Feb 2019 12:23 PM
Last Updated : 22 Feb 2019 12:23 PM

கோவை, திருப்பூர், நீலகிரியில் இன்று முதல் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று: போலிகளைத் தவிர்க்க போக்குவரத்து துறை புதிய ஏற்பாடு

போலிகளை தவிர்க்க கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

கோவை மண்டலத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இதுவரை வாகனப் பதிவுச் சான்று (ஆர்.சி.) காகித வடிவிலும், வாகன ஓட்டுநர்களுக்கு லேமினேட் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிம அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. காகித வடிவில் உள்ள வாகனப் பதிவு சான்று எளிதில் கிழிந்துவிடும் தன்மையுடன் இருப்பதாலும், அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கிலும் அதை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சென்னையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த மாதம் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழை ஸ்மார்ட் கார்டாக வழங்கும் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கோவை மண்டலத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் ஒரு மாதத்தில் சராசரியாக 11,500 ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல, ஒரு மாதத்தில் 23,000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

கோவை, உதகை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், தாராபுரம் உள்ளிட்ட 16 போக்குவரத்து அலுவலகங்களில் இன்று (நேற்று) மாலையுடன் காகித வடிவில் வாகன பதிவுச் சான்று வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. நாளை (இன்று) காலை முதல் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச்சான்று  ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படும்.

அச்சிடப்பட்ட ஹாலோகிராம்

புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட் கார்டில் 'மைக்ரோ சிப்', 'கியூஆர் கோட்' போன்ற வசதிகள் உள்ளன. முன்பு வழங்கப்பட்டு வந்த ஓட்டுநர் உரிமத்தில் 'ஹாலோகிராம்' ஒட்டிக் கொடுக்கப்படும். ஆனால், புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டை தயாரிக்கும்போதே அதில் ஹாலோ கிராம் அச்சிடப்பட்டுவிடும். எனவே, இந்த வகை கார்டுகளை போலியாக தயாரிக்க முடியாது. மேலும், ஸ்மாரட் கார்டில் உள்ள சிப்-ஐ ஏடிஎம் கார்டு போல இயந்திரம் மூலம் ‘ஸ்வைப்’ செய்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் விவரங்களை போக்குவரத்து அதிகாரிகள் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு மணி நேரத்தில்…

புதிதாக ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், ஓட்டுநர் உரிமத்தின் நகல் தேவைப்படுவோருக்கு இனிமேல் ஸ்மார்ட் கார்டு வடிவில் உரிமம் வழங்கப் படும். அதேபோல, புதிதாக வாகனங்களைப் பதிவு செய்வோர், உரிமம் மாற்றம், முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிப்போருக்கு ஸ்மார்ட் வாகனப் பதிவு சான்று வழங்கப்படும்.

சரக்கு வாகனங்களுக்கு  மஞ்சள் நிறத்திலும், மற்ற வாகனங்களுக்கு சாம்பல் நிறத்திலும் ஸ்மார்ட் வாகன பதிவுச் சான்று வழங்கப்படும். முறையான ஆவணங்கள் சமர்பித்த ஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் ஓட்டுநர் உரிம அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x