வாகனச் சோதனையில் காவலர் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்து தப்பிய குற்றவாளி; மடக்கி பிடித்த ஆட்டோ ஓட்டுநர்: காவல் ஆணையர் வெகுமதி

வாகனச் சோதனையில் காவலர் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்து தப்பிய குற்றவாளி; மடக்கி பிடித்த ஆட்டோ ஓட்டுநர்: காவல் ஆணையர் வெகுமதி
Updated on
2 min read

வாகன சோதனையில் குற்றவாளியை மடக்கி விசாரித்தபோது காவலர் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே  அடித்து  தப்ப முயன்ற குற்றவாளியை மடக்கிப்பிடித்த் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் காவலரை காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி அளித்தார்.

சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் விஜயகாந்த் என்பவர் நேற்று காலை சுமார் 10.45 மணியளவில் வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர் மெயின்ரோடு அருகில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் இருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு நபர்மீது சந்தேகம் ஏற்பட்டது. மடிப்பாக்கம் சரகத்தில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களின் சிசிடிவி கேமரா பதிவுகளில் தெரிந்த குற்றவாளியின் உருவத்தை போன்ற நபர் அவ்வழியே செல்வதை கண்டு உஷாரடைந்த விஜயகாந்த், உடனே, அந்த நபரை பின்தொடர்ந்து சென்று மடக்கி விசாரித்தார்.

அப்போது அந்த நபர் அவர் ஓட்டி வந்த சான்ட்ரோ காரில் ஏற முயன்றார். செல்போன் பேஸ் டிடெக்டர் மூலம் அவரை சோதிக்க முயன்றபோது அவர் திமிறியுள்ளார். பின்னர் அந்த நபர் காரிலிருந்த செல்போனை எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

அதை நம்பி விஜயகாந்த் கார் அருகில் நிற்கும்போது செல்போனை எடுப்பதுபோல் காரிலிருந்து பெப்பர் ஸ்பிரேவை எடுத்து திடீரென தலைமைக் காவலர் விஜயகாந்தின் முகத்தில் அடித்துள்ளார். இதனால் விஜயகாந்த் நிலைக்குலைந்தார். பெப்பர் ஸ்பிரே தலைமைகாவலர் விஜயகாந்தின் முகத்தில் பட்டதால் கண் எரிச்சலில் தடுமாறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த நபர் தப்ப முயன்றார். சுதாரித்துக் கொண்ட தலைமைக் காவலர் விஜயகாந்த் திருடன் பிடியுங்கள், குற்றவாளியை பிடிக்க உதவி செய்யுங்கள் என கூச்சல் போட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் மோகனசுந்தரம் விஜயகாந்திடம் நடந்ததை கேட்டுள்ளார். விஜயகாந்த் குற்றவாளி தப்பிச் செல்வதை கூறி பிடிக்க சொல்லி உதவி கேட்டுள்ளார்.

உடனே ஆட்டோ ஓட்டுநர் மோகனசுந்தரம் அந்த நபரை விரட்டி மடக்கி பிடித்தார், கண் எரிச்சலுடன் தலைமைக்காவலர் விஜயகாந்தும் அந்த நபரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்ணில் ஸ்ப்ரே அடிக்கப்பட்டதால் கண்பார்வை பாதிக்கப்பட்ட விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப்பெற்றார்.

  பிடிப்பட்ட நபரிடம் மடிப்பாக்கம் போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுந்தர் (எ) சுந்தர்ராஜ் (எ) புறா (35) என்பது தெரியவந்தது. சுந்தர்ராஜ் மீது ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல ஸ்டேஷன்களில் வீடுபுகுந்து திருடிய வழக்குகள் பல உள்ளது என்பதும், பல வடமாநில வியாபாரிகளுக்கு உதவி செய்து வருபவர் என்பதும் தெரியவந்தது. கோயம்புத்தூரில் ஒரு கொலை வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

அவர் பயன்படுத்திய காரும் திருடப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. காரை திருடி குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. துணிச்சலுடன் செயல்பட்டு குற்றவாளியை மடக்கிப் பிடித்த மடிப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் விஜயகாந்த் மற்றும் உதவி செய்த ஆட்டோ ஓட்டுநர் மோகனசுந்தரம் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in