திடீர் மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்: மருத்துவருடன் சென்ற மனைவி பலி

திடீர் மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்: மருத்துவருடன் சென்ற மனைவி பலி
Updated on
1 min read

சென்னையில் பெய்த திடீர் மழையில் கோயிலுக்கு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற டாக்டரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் மருத்துவரின் மனைவி பலியானார். மருத்துவர் காயமடைந்தார்.

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் வசிப்பவர் கனகராஜ். இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மீனா. இருவரும் இன்று காலை கோயிலுக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் அம்பேத்கர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அதிகாலையில் பெய்த திடீர் மழையில் சாலையில் தேங்கியிருந்த தண்ணீர், சகதி காரணமாக கனகராஜ், மீனா சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் கனகராஜின் மனைவி மீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவர் கனகராஜ் படுகாயமடைந்தார். விபத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸுக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்தனர். வீட்டுக்கு அருகிலேயே விபத்து நடந்ததால் தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள் மீனாவின் நிலையைப் பார்த்து கதறி அழுதனர்.

விபத்து நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. பலரும் பலமுறை போன் செய்தும் ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரம் கழித்தே வந்துள்ளது. ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதை அடுத்து மருத்துவர் கனகராஜ்  வேறு வாகனத்தில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மீனாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in