Last Updated : 18 Feb, 2019 09:04 AM

 

Published : 18 Feb 2019 09:04 AM
Last Updated : 18 Feb 2019 09:04 AM

திருக்காலிமேடு அலாபாத் ஏரியில் சுற்றித் திரியும் மான் கூட்டம் வனவிலங்குகளின் வாழ்விடப் பகுதியாக அறிவிக்க கோரிக்கை

திருக்காலிமேடு அருகே அலாபாத் ஏரியில் தங்கியுள்ள மான்கள், இனப்பெருக்கம் செய்து குட்டிகளுடன் கூட்டமாகத் திரிவதால், அந்தப் பகுதியை வனவிலங்குகளின் வாழ்விடப் பகுதியாகப் பரிந்துரைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகராட்சியின் 27-வது வார்டு திருக்காலிமேடு அருகே பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அலாபாத் ஏரியின் நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும், மஞ்சள்நீர் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறியதாலும் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் போனது. எனினும், மழைக்காலங்களில் மட்டும் ஏரியில் ஆங்காங்கே சிறிது தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளதால், ஏரியில் கருவேல மரங்கள் உட்பட ஏராளமான மரங்கள் வளர்ந்து காடுபோல் அடர்த்தியாகக் காணப்படுகிறது. மேலும், தற்போது அருகில் உள்ள நத்தப்பேட்டை ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படுவதால், வெளிநாடு மற்றும் உள்ளூர் பறவைகள் ஏரியில் தஞ்சமடைந்துள்ளன. இப்பறவைகள், அலாபாத் ஏரியில் உள்ள மரங்களில் கூடுகட்டி வசிக்கின்றன.

இந்நிலையில், அலாபாத் ஏரியில் கடந்த 2016-ம் ஆண்டு 2 புள்ளிமான்கள் சுற்றித்திரிவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர், ஏரியில் தங்கியுள்ள மான்கள் மற்றும் பறவைகளுக்கு ஆபத்துஏற்படாமல் இருக்க ஏரிக்கரைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது, ஏரியில் மான்கள் இனப்பெருக்கம் செய்து குட்டிகளுடன் கூட்டமாக சுற்றித்திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மான்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கவும். பறவைகளும் தொடர்ந்து வசிக்கும் வகையிலும் இயற்கைச் சூழலைப் பாது காக்க, வனவிலங்குகள் வாழும் பகுதி என்ற அறிவிப்புகளை வைக்க, வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பை கொட்டக்கூடாது

இதுகுறித்து, திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்த கமலதாசன் கூறியதாவது: பறவைகள் மற்றும் மான்கள் தங்களின் புகலிடத்தை எளிதாகத் தேர்வு செய்யாது. இந்நிலையில், இனப்பெருக்கம் செய்து குட்டிகளுடன் ஏரியில் மான்கள் வசிப்பது, ஏரியின் இயற்கைச் சூழலையும். பாது காப்பையும் உணர்த்துகிறது. ஆனால், இயற்கைச் சூழல் பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் கூடிய குப்பை ஏரியில் கொட்டப்பட்டு வருகிறது. எனவே, குப்பை கொட்டுவதைத் தடுத்து, கரைகளை பலப்படுத்த வேண்டும். வனவிலங்கு வாழ்விடப் பகுதி என்ற அறிவிப்புப் பலகை அமைக்கவும் வன விலங்குகள் புகலிடப் பகுதியாக வனத்துறை பரிந்துரைக்கவும் வேண்டும் என்றார்.

இதுகுறித்து, வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பறவைகள் மற்றும் மான்களுக்கு இடையூறு மற்றும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஏரிக்கரைகளில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், குப்பைகொட்டுவதைத் தடுத்து, கரைகளில் விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகள், மரக்கன்றுகள் நடுவதற்கு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x