Published : 17 Feb 2019 09:40 AM
Last Updated : 17 Feb 2019 09:40 AM

பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு?- போற்றிப் பாடுவோம் நடிகர் திலகம் புகழை

ஆர்.கிருஷ்ணகுமார், இரா.கார்த்திகேயன், ஆர்.டி.சிவசங்கர்

இந்தியாவில் தோன்றிய நடிகர்களில் தலைசிறந்தவர் சிவாஜிகணேசன். நடிப்பில் அவர் ஒரு பல்கலைக்கழகம். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அத்தனை நடிகர்களிடமும், சிவாஜியின் பாதிப்பு ஏதாவது ஒரு வகையில் இருக்கும். தேசியமும், தெய்வீகமும் சிவாஜியின் இருகண்கள்" என்றெல்லாம் புகழப்படுபவர் நடிகர் திலகம்.

2001 ஜூலை 21-ம் தேதி, தனது 73-ம் வயதில் சிவாஜி இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், இன்னமும் மக்கள் நெஞ்சில் நீங்கா இடமுண்டு. சிவாஜியின்  நடிப்பை `மிகை நடிப்பு` என்று தற்போது விமர்சிப்பவர்கள்கூட, அவரது திரையுலகச் சாதனையை மறுக்க முடியாது. அப்போதைய காலகட்டத்தில் சிவாஜியின் நடிப்பு, உலக நடிகர்களில் உச்ச நடிகராய் உயர்த்தியிருந்தது. கலையுலகில் மிகப் பெரிய சாதனையாளராய் இருந்தாலும், அரசியல் அரங்கில் அவருக்குக் கிடைத்தது பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டமும், தோல்வியும், அனுதாபமும்தான். ஆனால், திரையுலகில்  என்றும் அவர் சக்கரவர்த்திதான். அவருக்கு நிகராய் யாரையும் ஏற்க மறுக்கின்றனர் தமிழக மக்கள்.

முதல் படத்தில் சிவாஜி அடியெடுத்து வைத்தபோது, புதுமுகமான சிவாஜியின் நடிப்பு மீது  ‘பராசக்தி’ தயாரிப்பாளருக்கு பண உதவி செய்த ஏ.வி.எம். செட்டியாருக்கு கொஞ்சமும் நம்பிக்கையில்லை. அதையும் மீறி, கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனமெழுதிய அந்தப் படம் 1952-ல் வெளியாகி, பெரும்வெற்றியடைந்தது. அப்போது நிலவிய சூழல் அந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு  காரணம் என்றாலும், சிவாஜியின் வசன உச்சரிப்பும், நடிப்பும்கூட படத்தின் வெற்றியில்  பங்கேற்றன. பாடல்களிலும், புராணக் கதைகளிலும் சிக்கியிருந்த தமிழ் திரையுலகம், வசனத்தை அடிப்படையாகக் கொண்ட அடுத்த கட்டத்துக்கு மாறும்போது, திராவிட இயக்க முன்னோடிகள் சிவாஜியின் வசன உச்சரிப்பையும், நடிப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

எம்ஜிஆரின் ஹீரோயிஸ, அப்பழுக்கற்ற கதாநாயக பாணி படங்களுடன், கதாநாயக பிம்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல், நடிப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்ட சிவாஜியின் படங்கள் போட்டிபோடத் தொடங்கின.

1950-களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார்.

1960-களில் சிவாஜிக்கு ஏற்றவாறு கதைகள் உருவாக்கப் பட்டன. அவரது நடிப்புக்கு தீனிபோடும் பாத்திரங்களை இயக்குநர்கள் தேடித்தேடி உருவாக்கினர். ரஜினி, கமல் வருகைக்குப் பின்னரும் நாயகனாகவே நடித்துக் கொண்டிருந்த சிவாஜி, ஒரு கட்டத்துக்குப் பிறகே குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார். முதல் மரியாதை, தேவர் மகன், படையப்பா உள்ளிட்டவை அவரது அடுத்த பரிமாணப் படங்கள். 1999-ல் வெளியான `பூப்பறிக்க வருகிறோம் ` படத்துடன் சிவாஜியின் திரை வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், அவரது படங்கள் எப்போதும் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று `சிம்மக் குரலோன்` கொண்டாட்டம்அதனால்தான், அவர் இறந்து 18 ஆண்டுகளுக்குப் பின்னரும் `சிம்மக் குரலோன் 90' என்ற பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைக் கொண்டாடும்  நிகழ்வை முன்னெடுத்திருக்கிறது `இந்து தமிழ் திசை`. கோவை அவினாசி சாலையில், நவ இந்தியா அருகேயுள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் இன்று பிற்பகல் நடைபெறும் `சிம்மக் குரலும் திரைத் தமிழும்’ என்ற இந்த விழாவில், நடிகர் சிவகுமார், எழுத்தாளரும், பத்திரிகையாளருமான டி.ஏ.நரசிம்மன், சிவாஜியின் மகன் ராம்குமார் கணேசன் பேசுகின்றனர்.

செவாலியே சிவாஜி நகர்

கோவை மாவட்டம் பேரூரில் ஒரு பகுதிக்கு செவாலியே சிவாஜி நகர் என்ற பெயரிட்டிருக்கிறார்கள். இதுகுறித்து கோவை மாவட்ட தலைமை சிவாஜிமன்றத்தலைவர் பி.சிவாஜிசேகர் கூறும்போது, "ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன்னரே சிவாஜி மன்றத்தில் இணைந்துவிட்டேன். கோவைக்கு சிவாஜி வந்தால், முன்கூட்டியே எனக்கு தந்தி வந்துவிடும். விமானநிலையத்துக்கே சென்று சிவாஜியை வரவேற்பதுடன், அவர் மீண்டும் சென்னை திரும்பும்வரை அவர்கூடவே இருப்பேன்.

ஒவ்வொரு ஆண்டும் அக். 1-ம் தேதி சென்னைக்கு சிவாஜி வீட்டுக்குச் சென்று, அவரை சந்திப்போம். கோவையில் ராயல், ராஜா, கீதாலயா தியேட்டர்களில் சிவாஜி படம் வெளியாகும். அப்போதெல்லாம் சைக்கிளை தியேட்டரில் வைத்துதான், டிக்கெட் முன்பதிவு செய்வோம். சிவாஜி படம் வெளியாவதற்கு 5 நாட்களுக்கு முன்னரே எனது சைக்கிளில் சிவாஜி படத்தைக் கட்டி, ராயல் தியேட்டருக்கு கொண்டுபோய் நிறுத்திவிடுவேன். சிவாஜியின் 175-வது படமான `அவன் தான் மனிதன்` படத்துக்குச் சென்றபோது, எனது சைக்கிள் திருட்டுப்போய்விட்டது.

அதைப்பற்றிக் கவலைப்படவேயில்லை. அந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைத்துவிட்டதே பெரிதாகத் தோன்றியது. ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்,  சிவாஜி மன்றத்தின் கோவை கிளைக்கு யாரைப் பொறுப்பாளராக போடுவது என்ற ஆலோசனையின்போது,  அப்போது மாநிலத் தலைவராக இருந்த பூமிநாதனிடம், `கோயம்புத்தூருக்கு சேகரைப் போடப்பா, அவன்தான் ஓடியாடி வேலை செய்யறான்` என்றார் சிவாஜி. அதுவே எனக்கு கிடைத்த பெரிய பெருமை. நான் கழுத்தில் அணிந்திருக்கும் ருத்ராட்சம், சிவாஜி கொடுத்ததுதான்.

எனக்கு கொஞ்சம் திக்கித் திக்கித்தான் பேச வரும். ஆனால், சிவாஜியைப் பற்றி புகழந்து கோஷமெழுப்பும்போது திக்காது. ஒரு நாள் சிவாஜி என்னை கூப்பிட்டு, `என்னப்பா, பேசும்போது திக்கற, கோஷம் போடும்போது திக்க மாட்டேங்கற. ஆச்சரியமா இருக்கே!' என்று கூறினார்.  இப்போது, பேரூர் பட்டீஸ்வரர் உள்ளிட்ட சில கோயில்களில் குருக்களாகப் பணிபுரிகிறேன். இருந்தபோதிலும், மன்றத்திலும் தீவிரமாக செயல்படுகிறேன்.  இப்போதும் 500-க்கும் மேற்பட்டோர் மன்றத்தில் இருக்கிறார்கள். ராயல் தியேட்டரில் சிவாஜி படம் திரையிடப்படும்போது, கும்பலாய் சென்று பார்க்கிறோம்" என்றார் பெருமிதத்துடன்.

1973-ல் சிவாஜி நடித்த `ராஜபார்ட் ரங்கதுரை`யில், திருப்பூர் மண்ணின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில்,   திருப்பூர் குமரனாக நடித்தார். அதனால், திருப்பூர் மக்கள் சிவாஜியை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்."சிவாஜி மாபெரும்  கலைஞர் என்பதைத்  தாண்டி,  அவர் ஒரு சித்தர் என்பதை அறிந்தோம். அதாவது, `முதலில் தாய், தந்தையை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். பின், மனைவி, குழந்தைகளைப் பாருங்கள். நன்கு தொழில்  செய்து முன்னேறுங்கள். அதற்குப் பிறகே,  மற்ற விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்’ என எப்போதும் ரசிகர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.  அதனால், சிவாஜிக்குப் பிறகும்,  அவரது குடும்பத்தை நாங்கள் நேசிக்கிறோம். பிரபு, விக்ரம் பிரபு என அவரது வாரிசுகள் நடிக்கும்போது, எங்கள் அண்ணன் குழந்தைகள் என்ற மகிழ்ச்சி மனதில்  எழுகிறது” என்கிறார் திருப்பூர் ரசிகர் ஜி.கே.பிரசன்னகுமார்.

"திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் நடிகர் சிவாஜி, ‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் நடித்தார். அப்போது கிடைத்த வருவாய் ரூ.1 லட்சத்தை,  திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு கட்டிடம் கட்ட நன்கொடையாக வழங்கினார். அப்போது ரூ.1 லட்சம் என்பது, தற்போது கோடிகளைத் தாண்டும்" என்கிறார் திருப்பூர் மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் சத்ருக்கன். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் `சுதேசி கண்காட்சிகள்`  நடைபெறும். இதையொட்டித்தான்,  தென்னம்பாளையம் சந்தையில் `வியட்நாம் வீடு’ நாடகம் அரங்கேறியது.

காமராஜருக்கு சிலை

"சிவாஜி தொடங்கிய  தமிழக முன்னேற்ற முன்னணியைக் கலைத்துவிட்டு, ஜனதாதளத்தின் மாநிலத் தலைவரானார். அப்போது, திருப்பூர் அம்மாபாளையத்தில் காமராஜர் சிலையைத் திறந்துவைத்தார்" என்று நினைவுகூர்கின்றனர் திருப்பூர்வாசிகள்.  திருப்பூர் சாந்தி திரையரங்க ஆபரேட்டர் சங்கர்பவான் சிங், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். வேலை தேடி திருப்பூருக்கு வந்தவர். அப்போது, சாந்தி திரையரங்கு இருந்த பகுதி புறநகர்ப் பகுதி. "சிவாஜி, சத்யராஜ் நடித்த ’ஜல்லிக்கட்டு’ படத்தின் முதல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. நான்தான் ஆபரேட்டர். 

ஒரு காட்சியில் சத்யராஜ், சிவாஜியைத் திட்டுவார். எனக்கு மிகுந்த கோபம்.  திடீரென படத்தை நிறுத்திவிட்டேன்.  மேலாளர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.  `சத்யராஜ் ரசிகர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்` என கோபத்துடன் சொன்னேன். அப்படி, வெறித்தனமான சிவாஜியை ரசித்துள்ளோம். முதல் மரியாதை படம் திரையிடப்பட்டபோது, வடிவுக்கரசி வரும்போதெல்லாம் ரசிகர்கள்,  அவரைத்  திட்டித் தீர்ப்பார்கள். சிவாஜி படத்துக்காக திருப்பூர் சாந்தி திரையரங்கில்,  கூடுதல் சவுண்ட்எஃபெக்ட் எல்லாம் வைத்து,  அணுஅணுவாக ரசித்து படத்தை ஓட்டினோம்" என்றார் கண்களில் ஒளியுடன்.

வாருங்கள் ரசிகர்களே!

பாரம்பரியம் மிக்க `இந்து` குழுமத்திலிருந்து வெளிவரும் `இந்து தமிழ் திசை` சார்பில், நடிகர் திலகத்தைக் கொண்டாடும் வகையில் `சிம்மக் குரலோன் 90` விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று மதியம் 2.15 மணிக்கு நடைபெறுகிறது. நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் அத்தனை பேருக்குமே இந்த நிகழ்வு மகிழ்வூட்டும். கொங்கு மண்டல ரசிகர்களை நம் `சிம்மக் குரலோனை` போற்றும் இந்நிகழ்வுக்கு வாருங்கள் என வரவேற்கிறது `இந்து தமிழ் திசை` நாளிதழ்.

நண்பன் உடலை சுமந்த சிவாஜி!

சேலத்தில் சிவாஜியின் நெருங்கிய நண்பர் துப்பாக்கி கடை செல்லமுத்து. அவர் மட்டுமல்ல, அவரது சகோதரர்கள் வெங்கடாசலம், துரைசாமி, மகன் பாலச்சந்திரன், மருமகன் மனோகரன் என எல்லோருமே சிவாஜிக்குப் பிடித்தமானவர்கள். "மாடர்ன் தியேட்டர்ஸ்ல நடிக்க சிவாஜி வருவாரு. வேடிக்கைப் பாக்க அப்பா செல்லமுத்து போவாரு. நாங்க துப்பாக்கிகள் விற்கும் கடை நடத்தி வந்தோம். அதுமட்டுமில்லா, அப்பா, சிறந்த வேட்டைக்காரர். லைசென்ஸும் வெச்சிருந்தாரு. ஷூட்டிங்கப்ப அப்பாவை, சிவாஜிகிட்ட அறிமுகப்படுத்தியிருக்காங்க. இயல்பாகவே வேட்டையில ஆர்வம் கொண்ட சிவாஜி, அப்பா கூட நெருங்கிப் பழகினாரு. 1975-ல் சேலம் பேர்லேண்ட்ஸ் பிருந்தாவன் சாலையில வீடு கட்டினதுக்கப்புறம், எப்ப சேலம் வந்தாலும் எங்க வீட்லதான் தங்குவாரு சிவாஜி. அவரைப் பாக்க வீதி முழுக்க கூட்டம். போலீஸை வெச்சி கூட்டத்தைக் கட்டுப்படுத்துவாங்க. ஆனா, வீட்டுக்குள்ள ரொம்ப சாதாரணமா இருப்பாரு சிவாஜி" என்றார் செல்லமுத்துவின் மகன் எஸ்.பாலச்சந்திரன்.

செல்லமுத்துவின் மருமகன் சி.மனோகர் கூறும்போது, "என்னையும் மாப்பிள்ளைனுதான் கூப்பிடுவாரு சிவாஜி. நான்-வெஜ் விரும்பி சாப்பிடுவாரு. வீட்டுக்குள்ள பயங்கரமா தமாஷ் செய்வாரு. மாமா செல்லமுத்துவும், சிவாஜியும் பேசிக்கும்போது, `நீ முந்திக்கிட்டா நான் தூக்கறேன். நான் முந்திக்கிட்டா நீ தூக்கு`னு பேசிக்குவாங்க. அதேமாதிரி, 1996-ல செல்லமுத்து செத்தப்ப, வீட்டுக்கு வந்த சிவாஜி கண்ணுல தண்ணி கொட்டிச்சி. நண்பனோட உடலைத் தூக்கும்போது தோள் கொடுத்தாரு. மயானம் வரைக்கும் வந்து, காரியம் முடியற வரைக்கும் கூடவே இருந்தாரு.  ஒருத்தர ஒருமுறை பாத்தா போதும். அடுத்த முறை பேர ஞாபகம் வெச்சிக் கூப்பிடுவாரு. புதுசா துப்பாக்கி வந்தா, என்னா, ஏதுனு ஆர்வமா விசாரிப்பாரு. எங்க குடும்பத்துல நடந்த அத்தனை கல்யாணத்தையும் முன்னால நின்னு நடத்திக்கொடுத்தாரு" என்றார் நெகிழ்ச்சியுடன்.

ஊட்டி வரை உறவு

சிவாஜி நடித்த முழுநீள நகைச்சுவைப் படம் `ஊட்டி வரை உறவு`. படத்தின் தலைப்பைப் போலவே, சிவாஜிக்கும், ஊட்டிக்கும் உறவு பலப்பட்டது."இந்திய திரைப்படங்களுக்கு, காஷ்மீர் தவிர்க்க முடியாத லொகேஷன். சுவிட்சர்லாந்து போன்ற அழகுடன் காஷ்மீர் பள்ளத்தாக்கு காட்சியளித்ததே இதற்கு காரணம். நிறைய படங்களில் காஷ்மீர் இடம்பெறும். தமிழ் திரைப்படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 1960-களில் சித்ராலயா தர், முழுநீள நகைச்சுவைப் படமான `தேன் நிலவு` படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்திருந்தார்.

ஆனால், 1980-களில் காஷ்மீரில் தலைதூக்கிய பயங்கரவாதத்தால், திரைப் படைப்பாளிகளின் பார்வை தென்னகத்தின் காஷ்மீரான ஊட்டி  பக்கம் திரும்பியது. தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களின் படப்பிடிப்பும் ஊட்டியில் நடந்தது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ராஜ்கபூர், திலிப்குமார் என பல ஜாம்பவான்களின் படங்கள் ஊட்டியில் படமாக்கப்பட்டன" என்கிறார்

 நீலகிரி ஆவணக் காப்பக இயக்குநர் டி.வேணுகோபால். குறிப்பாக, சிவாஜியின் முக்கிய படங்கள் பலவும், ஊட்டியில் படமாக்கப்பட்டதை அவர் நினைவுகூர்கிறார். "1950களில் சிவாஜி, சாவித்திரி நடித்த `வணங்காமுடி` படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது.  அன்று தொடங்கியது சிவாஜிக்கும்,  ஊட்டிக்குமான உறவு. தொடர்ந்து, தங்கமலை ரகசியம், ரத்தத் திலகம் படப் பிடிப்புகள் நடந்தன. ஊட்டி ஏரியைச் சுற்றி, ரத்தத் திலகத்தின் படப்பிடிப்பு நடந்தது.`புதிய பறவை` படத்தின் முக்கியப் பாடலான `எங்கே நிம்மதி` பாடலில், ரயில்வே பாலத்தை  சிவாஜி கார் கடக்கும் காட்சி, கேத்தி ரயில் நிலையத்தில் படம் பிடிக்கப்பட்டது.  தமிழ் திரையுலகின் முக்கிய நகைச்சுவைப் படமான `ஊட்டி வரை உறவு` படத்தின் பெரும்பாலான காட்சிகள், ஊட்டியில் படமாக்கப்பட்டன. அந்த படத்தின் பாடல்கள், ஊட்டி தாவரவியல் பூங்காவின் எழிலை வெளிப்படுத்தின. இதனால், ஊட்டியின் அழகிய இயற்கைக்  காட்சிகள், தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள மக்களை சென்றடைந்தது.

இதேபோல, சிவாஜியும், அவரது மகன் பிரபுவும் நடித்த `வெள்ளை ரோஜா` படத்தின் படப் பிடிப்பும் ஊட்டியில் நடைபெற்றது. சிவாஜி பாதிரியாராக வரும் காட்சிகள்,  ஊட்டி புனித இருதய ஆண்டவர் தேவாலயத்தில் படமாக்கப்பட்டன.

சிவாஜியின் திரை வாழ்வில் முக்கியப் படம் `வசந்த மாளிகை`.  இந்தப் படத்தின் முழு படப் பிடிப்பும் உதகை புதுமந்து பகுதியில்,  ஏ.சி.முத்தையாவுக்கு சொந்தமான ‘அடையார் ஹவுஸ்’ பங்களாவில்தான் நடந்தது. 1989-ல் அதிமுக, ஜெயலலிதா, ஜானகி அணி என இரண்காடப் பிரிந்தபோது, சிவாஜி தனிக்கட்சி தொடங்கி,  ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். அப்போது, கட்சிப் பணிக்காகவும் ஊட்டிக்கு வந்தார். இவ்வாறு, சினிமா மட்டுமின்றி, அரசியலிலும் ஊட்டிக்கு முக்கியதுவம் கொடுத்தார் சிவாஜி’ என்றார் டி.வேணுகோபால்.

‘செவாலியே’ சிவாஜி

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது நடிகர் திலகம் சிவாஜிக்கு 1997-ல் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இந்த விருது பெற்ற முதல் நடிகர் சிவாஜிதான். 1987-ல் வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே இந்த விருதைப் பெற்றார். 2007-ல் இந்தி நடிகர் அமிதாப்புக்கும், 2014-ல்  ஷாரூக்கானுக்கும் வழங்கப்பட்டது. 2016-ல் நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது கிடைத்து.

ஃபிரெஞ்சு மொழியில் ‘செவாலியே’ என்பதற்கு மாவீரன் என்று பொருள். ஃபிரான்ஸை ஆண்ட மாவீரன் நெப்போலியனால் 1802-ல் செவாலியே விருது வழங்கும் விழா தொடங்கப்பட்டது. சிவாஜிக்கு ‘செவாலியே விருது’ வழங்கும் விழா, 1995 ஏப்ரல் 22-ம் தேதி சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், ரஜினி, கமல், தேவ் ஆனந்த், நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி, மம்முட்டி, சத்யராஜ், ஸ்ரீதேவி, பாலச்சந்தர் என திரையுலகப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். விழாவின் சிறப்பு விருந்தினர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. ‘செவாலியே’ விருதை ஒரு தட்டில் ஏந்தியபடி நடிகை மீனா வந்தார். அதைப் பெற்ற ஃபிரான்ஸ் தூதர் பிலீப் பெடிட், சிவாஜியின் சட்டையில் அந்த விருதை அணிவித்து,  அதற்கான சான்றிதழையும் அளித்தார். “சிவாஜியைத் தவிர இந்த விருதுக்குப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது” எனப் புகழாரம் சூட்டினார் பிரான்ஸ் தூதர் பிலீப் பெடிட்,

அஞ்சல் தலையில் சிவாஜி

“சிவாஜி கணேசன்  2001 ஜூலை 21-ம் தேதி மறைந்தார். அவரது நினைவாக, மத்திய அரசு சிறப்பு அஞ்சல் கவர், ஸ்டாம்ப் மற்றும் சிறப்பு முத்திரையை, அதே ஆண்டு அவரது பிறந்த நாளான அக். 1-ம் தேதி வெளியிட்டு நடிகர் திலகத்தைக் கௌரவித்தது” என்று பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார் தேசிய விருது பெற்ற, முன்னாள் அஞ்சல் அலுவலர் நா.ஹரிஹரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x