Published : 06 Feb 2019 10:21 AM
Last Updated : 06 Feb 2019 10:21 AM

ஓசூரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக பனியால் ரோஜா உற்பத்தி பாதிப்பு: காதலர் தின ஏற்றுமதியில் 60 சதவீதம் பணி நிறைவு

இதமான தட்பவெட்பநிலை, மண் வளத்தால் வாசமிக்க வண்ணமிகு ரோஜா மலர் உற்பத்தியில் ஓசூர் பகுதி முன்னணியில் விளங்குகிறது. இங்கு ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் சுமார் 4 கோடி ரோஜா மலர்களில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் ஆகிய விழாக் காலங்களில் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

பிப்ரவரி மாதம் 14-ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆண்டுதோறும் சராசரியாக 3 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மழை குறைவு, அதிக பனிப்பொழிவு என ஏதாவது ஒரு இயற்கை சீற்றத்தால் ரோஜா உற்பத்தி பாதிக்கப்பட்டு ஒரு கோடி அளவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டன.

காதலர் தினம் காலகட்டத்தில் மலர் சாகுபடியில் பெரிய அளவில் லாபம் ஈட்டி வரும் விவசாயிகளுக்கு, 2018-19-ம் ஆண்டில் தென்மேற்கு பருவ மழை குறைவு, அதனைத் தொடர்ந்து வந்த பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களினால் ரோஜா மலர் சாகுபடியில் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உற்பத்தி குறைந்து இழப்பு ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு வெளிநாடுகளுக்கு ரோஜா மலர் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டு சுமார் ஒரு கோடி அளவுக்கே இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. சுமார் 60 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 20 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமான பனிப்பொழிவு காரணமாக ரோஜா மலர் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டப்பயிர்கள் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமைக்குடிலில் விளையும் ரோஜா மலர்களுக்கு வெளி நாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. தாஜ்மஹால் எனப்படும் சிவப்பு ரோஜா மலருக்கு அரபு நாடுகளில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு வெளி நாடுகளுக்கு 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மலர் சாகுபடி நடைபெற்றது. ஆனால் நடப்பாண்டில் அதிக பனிப்பொழிவு காரணமாக ரோஜா உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், ஏற்றுமதி இலக்கு ஒரு கோடியாக குறைந்துவிட்டது. பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்துக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி பணிகள் கடந்த ஜனவரி 25-ம் தேதி தொடங்கியது. வரும் 10-ம் தேதி வரை பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று வரை சுமார் 60 சதவீதம் ஏற்றுமதி பணிகள் முடிந்துள்ளன. ஒரு ரோஜா மலரின் விலை ரூ.15 முதல் ரூ.20 வரை என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x