மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி: பிரிட்டிஷ் கவுன்சில்- தமிழக அரசு ஒப்பந்தம்

மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி: பிரிட்டிஷ் கவுன்சில்- தமிழக அரசு ஒப்பந்தம்

Published on

அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்புத்திறனை மேம்படுத்த பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

உயர்கல்வித் துறை சார்பில், மதுரை, உசிலம் பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.10 கோடியே 69 லட்சம் செலவில் வகுப்பறைகள், கருத்தரங்க கூடம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. மேலும், தேனி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல், வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ரூ.67 கோடியே 25 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

முதல்வர் முன்னிலையில் கையெழுத்து

தமிழகத்தில் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன் வளர்த்தல், வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துதல் உள்ளிட் டவை தொடர்பாக தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் ஜனகா புஷ்பநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, கே.பி அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in