Published : 28 Feb 2019 14:14 pm

Updated : 28 Feb 2019 14:14 pm

 

Published : 28 Feb 2019 02:14 PM
Last Updated : 28 Feb 2019 02:14 PM

மனிதர்களின் அத்துமீறலால் பரிதவிக்கும் யானைகள்!

இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமன்று. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அனைத்து உயிர்களுக்குமே சொந்தமானது. ஆனால், இந்த பூமியை தங்களுக்கு மட்டுமே சொந்தமெனக் கருதி, ஆக்கிரமிப்பு, அத்துமீறல்களில் ஈடுபடுவோரால் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றன வனத்தின் காப்பாளர்களான யானைகள். களிறுகள் அழிந்தால் காடுகளும் அழியும் என்று வேதனை தெரிவிக்கின்றனர் வன ஆர்வலர்கள்.

வனத்தின் பேரூயிரான யானைகள், ஆப்பிரிக்க காடுகள், இந்தியா மற்றும் தென்கிழக்கு நாடுகளில் வாழும் விலங்கினமாகும். ஆசிய நாடுகளில் 40,000 யானைகள் உள்ளன.

இவற்றில் சுமார் 30,000 யானைகள் இந்தியாவில்வாழ்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு லட்சமாக இருந்த யானைகளின் எண்ணிக்கை, கடந்த மூன்று தலைமுறைகளில் மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது.

யானைகள் கணக்கெடுப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிலையில், இறுதியாக எடுத்த கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 4000 யானைகள் இருப்பது தெரியவந்தது. `எலிபன்ட் காரிடார்` என்றழைக்கப்படும், யானைகள் பயணம் மேற்கொள்ளும் வலசைப் பாதைகள் துண்டாடப்பட்டு, அதன் இயற்கையான நடமாட்டம் தடுக்கப்படுவதால் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் சட்டவிரோத மின்வேலி, ரசாயன கழிவுநீர் பாதிப்பு, அவுட்டுக்காய் என்னும் நாட்டுவெடி, வறட்சி போன்ற காரணங்களால் இறந்த வராலாறும் உண்டு. நிலத்தில் வாழும் உயரினங்களில் பேருயிராக இருப்பது யானைகள் மட்டுமே. இந்தியப் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் ஆன்மிக வழிபாடுகளில் தெய்வீகத் தன்மை கொண்ட கருப்பொருளாக விளங்குகிறது யானைகள். பட்டத்து யானையும், யானைப் படையும் இல்லாமல் மன்னர்களின் வீர வரலாறுகள் எழுதப்படவில்லை. மனித வாழ்வோடு ஒருங்கிணைந்து,கூட்டம் கூட்டமாக வாழ்ந்து, வனங்களை செழுமைப்படுத்திய யானை இனம் இன்று மனிதனின் தீராத பேராசையால் அழிந்து வருகிறது.

மனிதர்கள் வேட்டை சமூகமாக வாழ்ந்த காலத்தில் யானைகள் வேட்டையாடப்படவி ல்லை. நாடு நகரம் என நாகரிக வாழ்க்கைக்குமனிதர்கள் மாறிய பின்பே, அவை கொல்லப்படுகின்றன. தொடர் நிகழ்வாகிவிட்ட யானைகளின் அகாலமரணங்களை தடுத்து நிறுத்துவது எப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. மின்வேலியில் சிக்கி, ரயிலில் அடிபட்டு, நாட்டு வெடிகுண்டால் முகம் சிதைக்கப்பட்டு, தொழிற்சாலை ரசாயனக் கழிவுநீரை குடித்து நோய்வாய்பட்டு, வெறித்தனமாய் துரத்தப்பட்டு, அதன் வாழ்விடம் வழித்தடம் அழிக்கப்பட்டு என மனிதனின் பேராசை காரணமாகயானைகள் மரணிப்பது தொடர்கதையாகிவிட்டது.

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 14 யானைகள் இறந்துபோய்விட்டன என்பது, சாதாரணமாய் கடந்து செல்லக்கூடிய தகவல் அல்ல. இந்நிலை தொடருமானால், ஒருகட்டத்தில் டைனோசர்போல யானைகளும் அழிந்துபோய்விட்ட விலங்கினங்களின்பட்டியலில் சேர்ந்து விடும். டைனோசர்அழிவுக்கு மனிதர்கள் காரணமல்ல, ஆனால்,யானைகளின் அழிவுக்கு மனிதர்களே முழுக் காரணம் என்பதுதான் கொடூரமான உண்மை.

மனிதகுல வாழ்வுக்கு அடித்தளமாக விளங்கும் காடுகளின் உயிர்ச்சூழல் மற்றும் உணவுச் சங்கிலியைப் பாதுகாப்பதில் முக்கிய கண்ணியாக உள்ள யானைகளை `வனக் காப்பாளர்’ என்று பெருமிதத்தோடு அழைக்கின்றனர் வன ஆர்வலர்கள். ஆனால், அப்படிப்பட்ட வனக் காப்பாளனுக்கே தற்போது பாதுக்காப்பு இல்லை. யானைகள் கடந்து செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்பு, வரைமுறையின்றி வெட்டப்படும் யானைத் தடுப்பு அகழிகள், மின்வேலிகள் போன்றவற்றால் திகைத்துப்போய் திசை மாறும் யானைகள், ஊருக்குள் நுழைகின்றன. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் யானைகளுக்குப் பிடித்தமான கரும்பு, வாழை, தென்னை பயிரிடுவதால், உயிர்த் தேவைக்காக யானைகளால் அவை உண்ணப்படுகின்றன. இதுவே, யானை-மனித மோதலுக்கு வழிவகுத்து, உயிரிழப்புகளுக்கும் காரணமாகின்றன.

`யானைகள் காட்டை விட்டு வெளியேறு வதால்தானே இறக்கின்றன?` என்றுகூட சிலர் கேள்வியை முன்வைக்கின்றனர்.

“காடு என்பது சுற்றிலும் சுவர் கட்டிய மிருகக்காட்சி சாலை அல்ல,காட்டை சுருக்கி,வாழ்விடமான புதர்க் காடுகளை அழித்து, பல்லாயிரம்ஆண்டுகளாக யானைகளின் நினைவு அடுக்குகளில் புதைந்து கிடக்கும் மரபார்ந்த நினைவுப்பாதையான, அதன் வலசைப் பாதையை ஆக்கிரமித்து, உல்லாச விடுதிகள்,தொழிற்சாலைகள், ஆன்மிகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் கட்டியதுடன், ஆக்கிரமிப்பைப் பாதுகாக்க யானை தடுப்பு அகழிகள்,மின்வேலிகள் என காடுகளை கண்டபடிதுண்டாடி விட்டோம். வன எல்லையோரங்களில் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதித்தன் விளைவாக, ரசாயனக் கழிவுகளை கேட்பார் இல்லாத வனத்தில் கொட்டி, நீராதாரங்களை விஷமாக்கிவிட்டோம். மலைசார்ந்த பகுதிகளில் கல்குவாரிகளைத் தொடங்கி, காட்டை அதிர வைக்கும் வெடிகளை வைத்து இயற்கைச் சூழலைப் பாழாக்கிவிட்டோம். இவ்வாறு யானைகளின் அனைத்து சுதந்திரத்தை

யும், வாழ்வியலையும் பறித்துவிட்டு, யானைகள் மீது பழிபோடுகிறோம். உயிர் வாழ தினமும் சுமார் 2000 கிலோ தீவனமும், 250 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும் யானைகள், தங்களது வாழ்விடத்தில் இவை கிடைக்காததால், வேறு வழியின்றி வனத்தைவிட்டு வெளியே வருவதற்கு யார் பொறுப்பு? மனித-யானை மோதலில் நியாயம் யார் பக்கம்? திருத்தப்பட வேண்டியது மனிதர்களா, யானைகளா?” என்று எதிர்கேள்வி எழுப்புகின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

யானைகள் ஒரே இடத்தில் இருக்காமல், தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் வரை பயணிப்பதால், ஒரு காட்டிலிருந்து பல்லுயிர்ப் பெருக்கத்தை மற்றொரு காட்டுக்கு கொண்டுசெல்லும் இன்றியமையாத ஜீவனாகத் திகழ்கின்றன. எனவே, யானைகளைப் பாதுகாப்பது அவசியம். ஏனெனில், யானைகள் இல்லையெனில் பல்லுயிர்ப் பெருக்கமின்றி காடுகள் அழிந்துவிடும். யானைகள் இருந்தால்தான், மனிதர்களுக்கு அத்தியாவசியமான நீரும், தூய்மையான காற்றும் தரும் காடுகள் வளம் பெரும். காடு வளம் பெற்றால்தான் நாடும் வளம் பெறும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author