

கத்திப்பாரா மேம்பால 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.சாலை நடைமேடையில் மோதிய மோட்டார் சைக்கிளால் விபத்து ஏற்பட்டது.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் யோகேஸ்வரன் தெருவில் வசிப்பவர் எட்வர்டு (45). இவரது மகன் ரோகன் அந்தோணி சாமுவேல்(20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இன்று மதியம் அந்தோணி சாமுவேல் மடிப்பாக்கத்தில் இருந்து கோடம்பாக்கத்திற்கு நண்பரைப்பார்க்க தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென சாலையின் ஓரத்தில் இருந்த நடைமேடையில் மோதினார்.
இதில் மோட்டார் சைக்கிளிலிருந்து சாமூவேல் தூக்கி வீசப்பட்டார். மேம்பாலத்தில் இருந்து சுமார் 40 அடி உயரத்திlஇருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தப்படி கிடந்தார்.
இதை பார்த்த அவ்வழியே வந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் சாமுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.