Published : 14 Feb 2019 11:24 AM
Last Updated : 14 Feb 2019 11:24 AM

மதுரை மாநகராட்சி வரி உயர்வில் குளறுபடி: மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடுவாரா ஆணையர்?

மதுரை மாநகராட்சியின் வரி உயர்வில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். வரி உயர் வை மாநகராட்சி ஆணையர் மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உத்தேச மாத வாடகை மதிப்பு அடிப்படையில் வரி நிர்ணயிக்கப்பட்டது. 1.4.1993 முதல் சதுரடி கணக்கில் வரி விதிக்கும் முறை அமலானது.

அதன்படி மதுரை மாநக ராட்சியில் 1993, 1998, 2008 ஆகிய ஆண்டுகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது.

2018-ம் ஆண்டு மீண்டும் 4-வது முறையாக சதுரடி கணக்கில் வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்குப் பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே வரி உயர்த்தும் முடிவு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை நகரில் வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் சொத்து வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் என திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சதுரடி கணக்கில் வரி உயர்த்துவதற்கு முன் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, சீராக அவ்வப்போது வரி உயர்த்தப்பட்டு வந்தது.

தமிழக அரசு நேரடியாக சதுரடி கணக்கில் உயர்த்தும் நடைமுறைக்கு வந்தது முதல், வரி விதிப்பில் குளறுபடிகளும், பிரச்சினைகளும் ஏற்பட்டதால் தள்ளி வைப்பதும் தொடர்ந்தது.

அதன்பிறகு எதிர்ப்புகள் குறைந்ததும், ஒட்டுமொத்தமாக வரியை உயர்த்தி மக்களுக்கு மிகப்பெரிய சுமையை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகர வரி செலுத்துவோர் நல சங்கச் செயலாளர் பி.ஆர்.தேசிகாச்சாரி கூறியதாவது:

மதுரை மாநகராட்சியின் வரி உயர்வில் வீடுகளுக்கு பெரிய அளவில் குளறுபடிகள் ஏற்பட வில்லை. ஆனால், தொழிற்சாலை, வர்த்தக கட்டிடங்களுக்கான வரி விதிப்பில் குளறுபடிகள் அதிகம் உள்ளன. குடியிருப்பு கட்டிடத்துக்கான அடிப்படை மாத வாடகை மதிப்பு ஆர்சிசி/எம்டி(கான்கிரீட் கட்டிடம்) 1,000 சதுரடி உள்ள ‘ஏ’ பிரிவு பகுதி கட்டிடத்துக்கு மாத வாடகை மதிப்பு ரூ.4.50 வீதம் நிர்ணயிக்கப்பட்டால் அரையாண்டு வரி ரூ.7, 358 என்றும், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு ரூ.14.716 என்றும், வணிக கட்டிடங்களுக்கு ரூ.22,077 என்றும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஆனால், மாநகராட்சியால் தொழிற்சாலை மற்றும் வணிக கட்டிடங்களில் 1000 சதுரடிக்கு ‘ஏ’ பிரிவில் ரூ. 29,430 என்று தவறுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்படி தவறுகளை உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும். இதேபோல், பி மற்றும் சி பிரிவு பகுதிகளுக்கு தொழிற்சாலை மற்றும் வணிக கட்டிடங்களுக்கு வரியை திருத்தி விதிக்க வேண்டும்.

ஏற்கெனவே 1.4.2008-ல் பொது சீராய்வில் மதுரை நீங்கலாக மற்ற அனைத்து மாநகராட்சிகளிலும் 25 சதவீதம் மாத வாடகை மதிப்பில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மதுரையில் மட்டும் 455 சதவீதம் வரி உயர்வு செய்ததால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் போன்ற தொழில் வளர்ச்சி மிக்க மாநகராட்சிகளில்கூட இந்த அளவுக்கு வரி உயர்வு இல்லை.

மதுரை மாநகராட்சி என்பது, பல கிராமங்கள் அடங்கிய நகரம். அதனால், தொழில் வளர்ச்சியில்லாத மதுரையில் வரி உயர்வு என்பது பொதுமக்களை மிகவும் பாதிக்கும். 1.10.2017-ன்போது 68 ஆயிரம் கட்டிடங்களுக்கு வரி திருத்தி விதிக்கப்பட்டது. அதில், சுமார் 12 ஆயிரம் மனுக்கள் வரி விதிப்பை ஆட்சேபித்து மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்காமல் இன்னும் உள்ளன. அதனால், இவர்கள் வரி செலுத்தாமல் உள்ளனர். இது மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினைக்கு தற்போது வரை தீர்வு காணவில்லை.

மாத வாடகை மதிப்பு அடிப்படையில் வரி நிர்ணயித்து அதன் உச்ச வரம்பு பிரகாரம் புதிய வரியை நிர்ணயம் செய்ய வேண்டும். உச்ச வரம்பையே மாத வாடகையாக கணக்கிடக் கூடாது. ஆனால், இதையே மாத வாடகையாக கணக்கிட்டு புதிய வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ‘ஏ’ பிரிவில் 1000 சதுர அடி கொண்ட தொழிற்சாலைக்கு அரையாண்டு வரியாக ரூ.14, 716 என்பதற்குப் பதிலாக ரூ.29,430 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிகப் பகுதிக்கு ‘ஏ’ பிரிவு பகுதியில் 1000 சதுர அடி கட்டிடத்துக்கு ரூ.22,074 என்பதற்குப் பதில் ரூ.29,430 என்று தவறுதலாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதுபோல், கட்டிடங்களை ‘ஏ’, ‘பி’, ‘சி’ என்று பிரித்ததில் நிறைய குறைபாடுகள் உள்ளன. மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் வரி உயர்வை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x