Published : 24 Feb 2019 10:21 AM
Last Updated : 24 Feb 2019 10:21 AM

7 தமிழர்கள் விடுதலை: ஆளுனர் காதில் கேட்கிறதா தமிழகத்தின் நியாயக் குரல்? - ராமதாஸ் கேள்வி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து இன்றுடன் 169 நாட்கள் ஆகும் நிலையில், அதன் மீது தமிழ்நாட்டு ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று வரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எந்தவித காரணமும்  இல்லாமல் 7 தமிழர்கள் விடுதலையை தமிழக ஆளுனர் தாமதிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது தொடர்பான அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

 

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் இழைக்காமல் தண்டிக்கப்பட்ட அவர்களை, 28 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகும்  விடுதலை செய்யத் தயங்குவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது ஆகும். அவர்களை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதற்கு நியாயமான ஒரு காரணம் கூட கிடையாது. ராஜிவ்காந்தி கொலையில் பேரறிவாளனுக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்பதை அவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த தியாகராஜன் உறுதி செய்திருக்கிறார்.

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு; அவர்களை விடுதலை செய்வது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாட்டு அமைச்சரவை கூடி, 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுனருக்கு பரிந்துரைத்தது.

 

தமிழக அமைச்சரவையின் பரிந்துரை செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே, அந்தப் பரிந்துரையின் நிலைமை குறித்து ஆளுனர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. ‘‘7 தமிழர்கள் விடுதலை குறித்து மத்திய அரசிடமிருந்து ஆலோசனை பெற வேண்டியதில்லை. அதேநேரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை குறித்து சட்ட ஆலோசனைகள் பெற வேண்டியிருக்கிறது. அந்த ஆலோசனைகளைப் பெற்ற பிறகு 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்று ஆளுனர் மாளிகை தெரிவித்திருந்தது. அவ்வாறு விளக்கமளித்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை 7 தமிழர் விடுதலை குறித்த விஷயத்தில் முடிவெடுக்கப்படாதது ஏன்? என்பதை மக்களுக்கு ஆளுனர் மாளிகை விளக்க வேண்டும்.

 

7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரையை ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை அனுப்பிய நேரத்தில்,  அவர்களின் விடுதலைக்கு எதிராக இருந்த அம்சம் ஒன்றே ஒன்று தான். அது 7 தமிழர்களை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது தான். அதுவும் கூட அமைச்சரவையின் பரிந்துரையை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதால், 7 தமிழர்களை விடுதலை செய்ய எந்தத் தடையும் இல்லை. ஆனாலும், மறைமுகமாக அதை காரணம் காட்டி 7 தமிழர்கள் விடுதலையை ஆளுனர் மாளிகை தாமதம் செய்தது. ஆனால், எழுவர் விடுதலைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில், இனியும் 7 தமிழர்கள் விடுதலையை ஆளுனர் தாமதிப்பது நியாயமற்றது; அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

ஒருபுறம் 7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கடந்த   ஜனவரி 24-ஆம் தேதி முதல் ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் நீதி கேட்கும் பயணத்தை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக மார்ச் 9-ஆம் தேதி மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு அற்புதம் அம்மாள் அழைப்பு விடுத்திருக்கிறார். மூன்றாவதாக 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று  சிறைத் தண்டனை அனுபவிப்பர்களில் ஒருவரான நளினி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர்களை விடுதலை செய்யும்படி கடந்த 6 மாதங்களில் 10 முறையாவது நான் வலியுறுத்தியுள்ளேன்.

 

ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் 7 தமிழர்களின் விடுதலையை தமிழக ஆளுனர் தாமதப்படுத்துவதற்கு என்ன காரணம்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்துள்ள நியாயக் குரலுக்கு செவிமடுத்தும், எந்தக் குற்றமும் செய்யாத அவர்கள் 28 ஆண்டுகள் சிறையில் வாடுகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டும் அவர்களின் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே மக்களின்  எதிர்பார்ப்பாகும்.

 

இக்கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 9&ஆம் தேதி தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், புதுச்சேரியிலும் நடைபெறவுள்ள மனிதச்சங்கிலிக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். எனினும், அப்படி ஒரு போராட்டத்திற்கு தேவையே இல்லை எனும் வகையில், அதற்கு முன்பாகவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான ஆணையில் ஆளுனர் கையெழுத்திட வேண்டும்.

 

இவ்வாறு கூறியுள்ளார் ராமதாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x